கம்யூனிஸ்ட்டுகளுக்கே புத்தி சொன்ன வீரப்பன்!

By கா.சு.வேலாயுதன்

சந்தன வீரப்பன் மறைந்து, 17 ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் வீரப்பன் விவகாரம் சமூக வலைதளங்களில் வட்டமடிக்கின்றன. இந்த நேரத்தில் தமிழ்நாடு பழங்குடியின மக்கள் சங்கத் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழருமான விபிஜி என்றழைக்கப்படும் வி.பி.குணசேகரனை அண்மையில் சந்தித்தபோது, “நானும் ஒருமுறை சரண்டருக்காக வீரப்பனை சந்தித்துப் பேசினேன். அவர் கம்யூனிஸ்ட்டுகளான எங்களுக்கே அறிவுரை சொன்னார்” என்ற ஒரு தகவலைச் சொன்னார்.

பழங்குடிகளின் நில மீட்புப் போராட்டங்கள், வீரப்பன் விவகாரத்தில் மைசூர் சிறையில் இருந்த தமிழர்களை விடுதலை செய்ய முன்னெடுத்தப் போராட்டங்கள், வீரப்பன் மற்றும் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி, நிவாரணம் கிடைப்பதற்கான முயற்சிகள் என அனைத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டவர் தோழர் விபிஜி. காட்டுக்குள் இருந்த வீரப்பனை அரசுத் தூதர்கள் உட்பட பலரும் சந்தித்துப் பேசியதாக செய்திகள் உண்டு. ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் யாரும் வீரப்பனை சந்தித்ததாகவோ, அவர்களை வீரப்பன் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாகவோ இதுவரை தகவல் இல்லை. இந்தச் செய்தி புதிதாக இருக்கவே, இது குறித்து விபிஜியிடம் விரிவாகப் பேசினோம்.

வீரப்பன்

‘‘வீரப்பனை நான் சந்தித்ததை இதுவரை மீடியாக்களில் பேசவே இல்லை” என்றவர், தொண்டையை செருமிக்கொண்டு அதைப் பற்றி பேச ஆரம்பித்தார்.

‘‘வீரப்பனால் பாதிக்கப்பட்ட மக்களை கணக்கெடுத்து பட்டியல் தயாரித்து சதாசிவம் கமிஷனுக்கு அளிக்கவும், அரசுக்கு கோரிக்கை வைக்கவும் பர்கூர், ஆசனூர், திம்பம், தாளவாடி மலை கிராமங்களில் உள்ள பழங்குடிகள் வீடுகள் எல்லாவற்றுக்கும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தோம். அப்போது, எங்கள் மீது தமிழக - கர்நாடக அதிரடிப்படையினர் கண்காணிப்பும் தீவிரமாகவே இருந்தது. அந்த நேரத்தில் காவல் துறையில் ‘பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ்’ டிஎஸ்பி ஜெயபால் என்னிடம் பேசினார்.

‘நீங்கள் வீரப்பனைச் சந்திக்க நேர்ந்தால் தகவல் கொடுங்க. நம்ம இங்கே யாருக்கும் தெரியாமலேயே ஜனாதிபதிக்கிட்ட கூட்டிட்டுப் போய் சரண்டர் பண்ணுவோம். பொது மன்னிப்பு வாங்கித் தருவோம். அதுக்கு நான் உத்தரவாதம் கொடுக்கிறேன்’னார். நான், ‘எங்களுக்கு வீரப்பனோட தொடர்பு இல்லீங்க. நாங்க இந்த பழங்குடி மக்களோடு சுத்தீட்டு இருக்கிறாம்’னு சொன்னேன். விடாது அவர், ‘தொடர்பு கிடைக்கும். கிடைச்சுதுன்னா மூவ் பண்ணிப் பாருங்க’ன்னார்.

அதுக்குப் பிறகு அதிரடிப்படை தலைவரா காளிமுத்து வந்தார். அவரும் என்னுடன் பேசினார். ‘வீரப்பன் சந்தித்தால் சரண்டருக்கு உதவுங்கள்’ன்னார். அவருக்கும், அதே பதிலையே சொல்லீட்டேன். அவர், ‘ஒரு வேளை அப்படி வாய்ப்பு வந்தா பேசிப்பாருங்க. மக்கள் உதவுவாங்க’ன்னு சொன்னார். நான், ‘மக்கள் உதவுவாங்கன்னா... மக்களுக்கு இங்கே ஏகப்பட்ட பிரச்சினை இருக்கு. அதை தீர்த்து வச்சீங்களா? பள்ளிக்கூடங்கள் இல்லை. மருத்துவம், தொழில் இல்லை. வீடு வாசல் இல்லை. ஏகப்பட்ட நிலப்பிரச்சினை இருக்கு’ என்றெல்லாம் சொன்னேன். ‘அதையெல்லாம் எழுதிக் கொடுங்க; நான் பார்க்கிறேன்!’னார். ஒரு நீளமான பட்டியலே கொடுத்தோம். வாங்கீட்டுப் போனார்; ஒண்ணும் நடக்கல.

இந்த சமயத்தில்தான் வீரப்பன் எனக்கு ஒரு கேஸட் கொடுத்தனுப்பியிருந்தார். ‘உங்களைச் சந்திக்கணும். பேசணும்!’ன்னு அதுல அவர் பேசியிருந்தார். ‘விபிஜிங்கிற எம்பேரு எல்லாம் அவருக்கு தெரிஞ்சிருக்கு. அந்த அளவுக்கு மக்கள் என்னைப்பத்தி அவர்கிட்ட சொல்லியிருக்காங்க.

வீரப்பனே கூப்பிட்டிருக்கிறார். போய்ப் பார்ப்போம். சரண்டர் பண்றதுக்கு ஒரு முயற்சி எடுப்போம்னு முடிவெடுத்தோம். டீமா போலாம்னு தான் முதலில் முடிவெடுத்தோம். அப்புறம் அதை மாத்திக்கிட்டு, நான் மட்டும் போனேன். பழங்குடிகள் 2 பேர்தான் ராத்திரி ஒரு மணிக்கு காட்டுக்குள்ள அஞ்சாறு கிலோமீட்டர் கடந்து என்னை வீரப்பன் இருப்பிடத்துக்குக் கூட்டீட்டுப் போனாங்க.

அந்தச் சந்திப்பின் போது, வீரப்பன்கிட்ட சரண்டர் சம்பந்தமா மட்டுமே பேசினேன். அவரோ, ‘கம்யூனிஸ்ட்டுகள் நீங்க. இன்னமே நீங்க செஞ்சிட்டிருக்கிற நடவடிக்கையெல்லாம் போதாது’ ன்னு பெரிய அரசியல் தலைவர் மாதிரி எனக்கு அறிவுரை சொல்ல ஆரம்பிச்சுட்டார். தேவாரத்தின் மீது கொலைவெறி ஆத்திரம் வீரப்பனுக்கு இருந்தது அவரோட பேச்சில் தெரிஞ்சுது. வீரப்பன் சொன்ன கதையை எல்லாம் பொறுமையா கேட்டுட்டு, “நீ சரண்டர் ஆகிறேன்னு சொன்னா அதுக்கான ஏற்பாட்டைச் செய்ய நாங்க தயாரா இருக்கோம்’னு சொன்னேன்.

‘நான் சரண்டராகி தண்டனை அனுபவிக்க தயாரா இருக்கேன். ஆனா, தனிமைச் சிறையிலதான் இருப்பேன். யார் கூடவாச்சும் என்னைய சேர்த்து அடைச்சாங்கன்னா அவனுகள வெச்சே என்னைய தீர்த்துக் கட்டிருவாங்க’ன்னு வீரப்பன் சொன்னார். இது விஷயமா மேற்கொண்டு என்ன செய்யலாம்னு வக்கீல கலந்து பேசிட்டுச் சொல்றதா சொல்லிட்டு நான் வந்துட்டேன்.

தேவாரம்

சொன்னபடியே வீரப்பனை சரண்டர் பண்ண வைக்கிறதுக்கான வேலைகளும் நடந்துச்சு. ஆனா அந்த நேரத்துல, ‘வீரப்பன் ஒரு கொலைகாரன். நிறையப் பேரை கொன்னிருக்கான். அவனை சரண்டர் பண்ணி, தனிமைச்சிறையில வைக்க முயற்சி நடக்குது. அப்படி நடந்தா நானே அவனை சுட்டுக் கொல்வேன்’னு தேவாரம் ஒரு அறிக்கை விட்டுட்டார். அதனால எங்களோட முயற்சிகள் பாதிலயே நின்னு போச்சு. அதுக்கப்புறம் வீரப்பனை சந்திக்கிற வாய்ப்பும் அமையல” என்று நிறுத்தினார் விபிஜி. தொடர்ந்து அவரிடம் நாம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘ஒரு வேளை, உங்களோட முயற்சி கைகூடியிருந்தா இன்றைக்கும் வீரப்பன் உயிரோடு இருந்திருப்பார் என்று நம்புகிறீர்களா?’’

‘‘கண்டிப்பா வீரப்பன் உயிரோடு இருந்திருப்பார். வீரப்பனை விட பெரிய கிரிமினல்கள் நாட்டில் எத்தனையோ பேர் இருக்காங்க. ஆட்சி அதிகாரத்தில் உயர்ந்த இடத்தில் கூட இருக்காங்க. வீரப்பனும் ஒரு குற்றவாளிதான். ஆனா, அவருக்கு என்ன தண்டனையோ அதை விதித்து அனுபவிக்க விட்டிருக்கலாம். யாரையும் சுட்டுக் கொல்வது சரியல்ல. கொலைக்கு கொலைதான் பரிகாரம்னா அப்புறம் யாருமே இருக்க முடியாது. வீரப்பனுக்கு காடுகளைப் பற்றிய நிறைய அறிவு இருந்தது. வனத் துறைக்கும், பழங்குடிகளுக்கும் கூட அந்தளவு காடு பற்றிய நுண்ணறிவு இல்லை. அதை நாம் பயன்படுத்தியிருக்கலாம். வீரப்பன் கொல்லப்படாமல் இருந்திருந்தால் அவனால் பலனடைந்த அதிகாரிகள் அரசியல்வாதிகள் அனைவரும் சிக்கியிருப்பார்கள். அவரை தந்திரமாகச் சுட்டுக்கொன்று சமூக விரோதிகளை எல்லாம் தப்பிக்க விட்டுவிட்டு, வீரப்பனுக்கு அரிசி கொடுத்தான்... பருப்பு கொடுத்தான்னு அப்பாவிகளப் பிடிச்சு சித்ரவதை பண்ணியிருக்காங்க.’’

‘‘வீரப்பன் இல்லாத காடு மற்றும் அவரது அனுசரணை இல்லாத பழங்குடிகளின் இப்போதைய நிலை?”

‘‘வீரப்பன் இருக்கிறபோது பழங்குடிகள் நிலத்தை விலைக்கு வாங்கறதுக்கோ, நிலத்தை ஆக்கிரமிக்கறதுக்கோ வெளிஆட்கள் வரமாட்டாங்க. காடுகளும் பாதுகாப்பா இருந்தது. இப்ப காடுகள் நிறைய ஆக்கிரமிக்கப்படுகிறது. மரங்கள் வெட்டி கடத்தப்படுகிறது. பழங்குடிகளுக்கு அப்பவும், இப்பவும் அரசாங்கத்தினால் பெருசா நன்மை எதுவும் நடக்கலை. ஆனா வீரப்பன் இருந்தபோது பழங்குடிகளுக்கு, ‘வீரப்பன் இருக்கிறார்; அதிகாரிகள் நம்மை பெருசா எதுவும் பண்ண மாட்டாங்க’ன்ற ஒரு தைரியமும், நம்பிக்கையும் இருந்தது. அது இப்ப அவங்ககிட்ட இல்லை!’’

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE