சித்தாந்தத்தைத் துறந்ததா சிபிஎம்?

By என்.சுவாமிநாதன்

சாதிமறுப்பு, கலப்புத் திருமணம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து சமரச சமூகம் மலரப் பாதைகாட்டும் மார்க்சிஸ்ட் கட்சி, இப்போது தன் இயங்குதளத்திலேயே சிக்கலைச் சந்தித்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி ஒருவர், தன் மகளின் காதல் விவகாரத்தில் அநீதியாக நடந்துகொண்டதும், மகளின் குழந்தையை ஈவிரக்கமின்றி அவரிடமிருந்து பிரித்த விவகாரமும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன. இரக்கமற்ற தந்தைக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சியினர் செயல்பட்டது, அக்கட்சியின் சித்தாந்தம் குறித்தும் கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

திருவனந்தபுரம் பேரூர்கடை பகுதியில், மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளராக இருப்பவர் பி.எஸ்.ஜெயச்சந்திரன். அவரது மகள் அனுபமாவும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கத்தில் பொறுப்பில் இருந்தார். இவரும், கட்சியின் இளைஞர்கள் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பேரூர்கடை நிர்வாகி அஜித்தும் காதலிக்கத் தொடங்கினர். அஜித், ஏற்கெனவே திருமணம் முடிந்து விவாகரத்து ஆனவர். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அஜித்தை, ஈழவர் சமூகத்தைச் சேர்ந்த அனுபமா காதலிப்பது தெரிந்ததும் ஜெயச்சந்திரனின் குடும்பம் கடும் எதிர்ப்பு காட்டியது. இந்நிலையில் திருமணத்துக்கு முன்பே அனுபமா கர்ப்பம் ஆனார். கடந்த ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி, இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தை, இப்போது எங்கே போனது என்பதுதான் இந்தப் பிரச்சினையின் மையப் புள்ளி.

தன் தந்தை ஜெயச்சந்திரனால் தன்னிடமிருந்து பறிக்கப்பட்ட குழந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறார் அனுபமா. தன் காதல் கணவர் அஜித்தோடு குழந்தையைத் தேடும் அனுபமா, கேரளத் தலைமைச் செயலகத்தின் முன்பு தனியொருவராகப் போராட்டம் நடத்தியதன் எதிரொலியாக, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், “அனுபமாவுக்கு கேரள அரசு துணை நிற்கும்” என அறிவித்துள்ளார். இருந்தும், இவ்விவகாரம் கேரள இடதுசாரிகளுக்கு சிந்தாந்த ரீதியாகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டத்தில் அனுபமா

திருவனந்தபுரத்தில் இருக்கும் அனுபமாவிடம் ‘காமதேனு’ மின்னிதழுக்காகப் பேசினோம்.

“நானும், அஜித்தும் காதலிக்கும் விஷயம் வீட்டில் தெரிந்ததும் பிரச்சினையானது. ஒருகட்டத்தில் நான் கர்ப்பம் ஆனேன். இதையடுத்து என் பெற்றோர் என்னை வீட்டுச்சிறையில் அடைத்தனர். எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதேநேரத்தில் என் தங்கைக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. உடனே எனது அப்பா ஜெயச்சந்திரன், ‘உன் தங்கையின் திருமணம் வருகிறது. இந்த நேரத்தில், திருமணமே ஆகாத நீ கையில் குழந்தையோடு இருந்தால் சரியாக இருக்காது’ எனச் சொல்லி, என்னிடமிருந்து குழந்தையை வாங்கிச் சென்றார். குழந்தை பிறந்த 3-வது நாளிலேயே என்னிடமிருந்து பிரித்துவிட்டனர். நவம்பரில் நடக்க இருந்த தங்கையின் திருமணமோ, பிப்ரவரிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. அப்போதே நான் குழந்தையை பார்க்க வேண்டும் என பலமுறை கேட்டேன். ஆனால், என் கண்ணில் குழந்தையைக் காட்டவில்லை. தங்கையின் திருமணம் நடக்கும்வரை என்னிடம் அன்பாகப் பேசிச் சமாளித்தவர்கள் அதன்பின், குழந்தையைக் காட்டவே முடியாது எனக் கண்டிப்பாகச் சொல்லிவிட்டனர் . அப்போதுதான் ஏதோ தவறு நடந்திருப்பதைப் புரிந்துகொண்டேன்.

கேரள மாநிலக் குழந்தைகள் நலக் குழுமம் ‘அம்மா தொட்டில்’ எனும் திட்டத்தையும் நடத்துகிறது. குழந்தையை வளர்க்க முடியாதவர்கள் அந்தத் திட்டத்தில் குழந்தையைச் சேர்த்துவிடுவார்கள். குழந்தைகள் நலக் குழுமம் அந்தக் குழந்தைகளை வளர்த்துக்கொள்ளும். தேவைப்படுபவர்கள் தத்தெடுத்தும் கொள்ள முடியும். என்னிடமிருந்து குழந்தை பறிக்கப்பட்ட அதேநாளில், இரு குழந்தைகள் திருவனந்தபுரத்தில் குழந்தைகள் நலக் குழுமத்தில் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டது தெரியவந்தது. இதில் எட்சன் பீலே என்ற ஒரு ஆண் குழந்தை, மற்றொன்று மாலா எனும் பெண் குழந்தை என ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆண் குழந்தைக்கு டி.என்.ஏ சோதனை செய்துபார்த்தபோது அது என் குழந்தை இல்லை எனத் தெளிவானது. இன்னொன்று பெண் குழந்தை என அறிவிக்கப்பட்டதே மோசடிதான். அதுவும் ஆண் குழந்தைதான் என சமீபத்தில்தான் தெரியவந்தது. இதில் தவறான தகவல்களை ஊடகங்களுக்குக் கொடுத்ததற்காக இருவர் பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். குழந்தையின் பாலினத்தை மாற்றிச் செய்தி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? அதன் பின்னணியில் என்ன மர்மம் இருக்கிறது என்றெல்லாம் கேள்வி எழுகிறது” என்றார் அனுபமா.

இந்தப் பிரச்சினையில், மார்க்சிஸ்ட் கட்சியினர் தனது தந்தைக்கு ஆதரவாகச் செயல்பட்டதைப் பற்றியும் அனுபமா நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“முதலில் இவ்விவகாரத்தை எங்கள் திருவனந்தபுரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் அனாவூர் நாகப்பனிடம் சொன்னேன். ஆனால் அவர், பாதிக்கப்பட்ட எனக்கு உதவி செய்யாமல் என் தந்தைக்கு அனுசரணையாக நடந்துகொண்டார். என்னை உதாசீனப்படுத்தினார். நான் அப்பா மீது புகார் கொடுத்தபின்பு, அவருக்குக் கட்சியில் புதிய பொறுப்பு வாங்கிக் கொடுத்தார். கட்சியின் மூத்த நிர்வாகிகள் முதல் முதல்வர் வரை பலரிடமும், எனது குழந்தையைத் தேடித்தர உதவுமாறு மனுகொடுத்தேன். எதுவுமே நடக்காத நிலையில்தான் ஊடகத்தின் முன்பு பேசத் தொடங்கினேன்” என்றார் அனுபமா.

இதனிடையே பெண் குழந்தை என ஊடகங்களில் சுட்டிக்காட்டப்பட்ட குழந்தை, வேறு ஒருவருக்கு தத்துக் கொடுக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியிருக்கிறது.

குழந்தைகள் நலக் குழுமத்துக்குப் புகார்

அனுபமாவின் தந்தை ஜெயச்சந்திரனிடம் இவ்விவகாரம் குறித்துப் பேசினோம்.

“அஜித் விவாகரத்திற்கு விண்ணப்பித்திருந்தாரே தவிர, அவருக்கு விவாகரத்து கிடைத்துவிடவில்லை. திருமணம் ஆகாமலேயே குழந்தை பெற்றுக்கொள்வது சரியாக இருக்காது என்றுதான் குழந்தையைக் குழந்தைகள் நலக் குழுமத்திடம் கொடுத்தேன். அதுவும் அனுபமாவிடம் முறைப்படி அனுமதி பெற்றுத்தான் கொடுத்தேன். இதில் எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. ஆனால் அனுபமா, ஏன் இப்போது மாற்றிப் பேசுகிறார் எனத் தெரியவில்லை. அவர் ஏதோ உள்நோக்கத்தோடு மார்க்சிஸ்ட் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தப் பார்க்கிறார்” என்றார் ஜெயச்சந்திரன்.

இதனிடையே குழந்தைகள் நலக் குழுமத்தில் முறைப்படி இவ்விவகாரம் குறித்து அனுபமாவும், அஜித்தும் முறையிட்டிருந்தால் குழந்தை தத்து கொடுக்கப்பட்டிருக்காது எனவும் கூறப்படுகிறது. ஆனால், கரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாகவே நேரில் செல்ல முடியவில்லை என்று விளக்கமளித்திருக்கும் அனுபமா, வாட்ஸ்-அப், வீடியோ காலில் முறைப்படி புகார் கொடுத்த ஆதாரங்களையும் வெளியிட்டிருக்கிறார்.

அதேபோல் குழந்தைகள் நலக் குழுமத்துக்கு ஒரு குழந்தை கிடைக்கின்றபோது, அது யாருடைய குழந்தை, அது எப்படி இங்கே வந்தது, அதன் பின்னணி என்ன என்பது குறித்து உள்ளூர் காவல் நிலையத்துக்கோ அல்லது மாவட்ட நிர்வாகத்துக்கோ தெளிவான அறிக்கை கொடுத்திருக்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை எனும் கேள்வியும் எழுகிறது. இதனிடையே, குழந்தை தத்து கொடுக்கப்பட்ட குடும்பத்தின் முகவரியையும் ஊடகத்தினரிடம் கசியவிட்டனர் குழந்தைகள் நலக் குழுமத்தினர். இப்போது அந்த இல்லம் முன்பும் கேமராக்களோடு காத்திருக்கின்றன செய்தி ஊடகங்கள்.

இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து, கேரள சமூக நலத் துறையும் அனுபமாவின் குழந்தை தத்து கொடுக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடைவிதிக்கக் கேட்டு, திருவனந்தபுரம் குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. நீதிமன்றமும் அதை ஏற்று இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. இதுகுறித்து விரிவான அறிக்கையும் கேட்டிருக்கும் நீதிமன்றம், தேவைப்பட்டால் டி.என்.ஏ சோதனை செய்யவும் அனுமதி வழங்கியுள்ளது.

காலம் முழுவதும் சித்தாந்தப் பற்றுடன் செங்கொடி பிடித்து கட்சிப் பணி செய்த அஜித்தும், அனுபமாவும் அதே இடதுசாரிகளை எதிர்த்துப் போராட்டக்களம் வரை சென்ற நிகழ்வு, கேரள அரசியல் களத்திலும் அதிர்வுகளைக் கிளப்பியிருக்கிறது. இவ்விவகாரத்தை வைத்து பினராயி அரசுக்கு எதிராக வாள்வீசத் தொடங்கியுள்ளன எதிர்க்கட்சிகள். அனுபமாவோ தன் குழந்தையின் நினைப்பிலேயே தவிக்கிறார்.

தாயும் சேயும் விரைவில் ஒன்றிணைய வேண்டும் என்பதே, கேரளப் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE