அன்புத் தலைவர் ப.சிதம்பரத்தின் சொந்த ஒன்றியம் சாக்கோட்டை. இந்த ஒன்றியத்தில் தலைவரை அதிகம் நேசித்த, ஐயா நாட்டுச்சேரி வீரப்பன்தான் இந்த அத்தியாயத்தின் நாயகன்.
இளைஞர் காங்கிரஸ் தொடங்கி, பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் நாட்டுச்சேரி வீரப்பன். நிலக்கிழார் என்று சொல்லப்படும் மிகப் பெரிய விவசாயக் குடும்பம். ஆரம்ப காலங்களில், தங்கள் குல வழக்கப்படி ஐயா சின்னதாய் குடுமி வைத்திருப்பார். இவர் தன்னகத்தே சம்பாதித்து வைத்திருந்த மக்கள் செல்வாக்கும், கப்பலூர் ஐயா கரியமாணிக்கம் அம்பலம் குடும்பத்துடன் இவருக்கு இருந்த நெருக்கமும் இவரை காங்கிரஸை நோக்கித் தள்ளியது. நாட்டுச்சேரி ஊராட்சி மன்றத் தலைவராகவும், சாக்கோட்டை வட்டார காங்கிரஸ் தலைவராகவும் பல ஆண்டுகள் இருந்தார் நாட்டுச்சேரியார்.
1977-ல், தலைவர் சிதம்பரம் காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட போது, அவருக்காக களப்பணி ஆற்றியவர்களில் முக்கியமானவர் நாட்டுச்சேரியார். இவரது குடும்பம் அந்த வட்டாரத்தில் செல்வாக்கான குடும்பங்களில் ஒன்று. அதனால்தான், தலைவர் சிதம்பரம் இவரை தனது முக்கிய தளபதிகளுள் ஒருவராய் நீண்ட காலம் வைத்திருந்தார்.
புதுவயலில், ஒரு நகரத்தார் வீட்டின் முகப்பைத்தான் தனது அலுவலகமாகப் பயன்படுத்தி வந்தார் நாட்டுச்சேரியார். அங்கே, வந்தால் போனால் ஓய்வெடுக்க ஒரு மரக்கட்டில் வைத்திருந்தார். அதன் மீது யார் போய் உட்கார்ந்தாலும், “ஜாக்கிரதையா உக்காரணும்... இது என் தலைவர் சிதம்பரம் படுத்த கட்டில்பா” என்று சொல்லி, யாரையும் அதில் அவ்வளவு சீக்கிரம் உட்கார விடமாட்டார் நாட்டுச்சேரியார். தனக்கும் தலைவர் சிதம்பரத்துக்குமான அன்பின் அடையாளமாகவே, அந்தக் கட்டிலை அவர் கருதினார்.
தலைவர் சிதம்பரம் வர்த்தக அமைச்சராக இருந்தபோது, ஜனார்தன் பூஜாரியை கூட்டி வந்து, காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் லோன் மேளா நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்த உறுதுணையாக இருந்தவர் நாட்டுச்சேரியார். வாடகைக்கு கார் எடுத்துக்கொண்டு சுற்றிவந்து, கட்சி வேலைகள் பார்ப்பதில் அலாதி பிரியம் அவருக்கு. காங்கிரஸ் கட்சியின் மீது இருந்த பிடிப்பு, ஒரு கட்டத்தில் அவரை வயல் வரப்பையும் விற்று கட்சிக்காக செலவு செய்யவைத்தது. பார்ப்பதற்கு மிரட்டும் தொனியில் கம்பீரமாக இருந்தாலும் மென்மையாகவே பேசிப்பழக்கப்பட்டவர்.
1989 தேர்தல் சமயத்தில் தனக்கு தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக, காரைக்குடியில் ஒரு மருத்துவமனையில் நாட்டுச்சேரியார் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரைப் பார்க்க மருத்துவமனைக்கே வந்த தலைவர் சிதம்பரம், “இதெல்லாம் சரிப்பட்டு வராது வீரப்பன். நாளைக்கே புறப்பட்டு சென்னைக்கு வந்திருங்க. அங்க உங்க வைத்தியத்துக்கு நான் ஏற்பாடு பண்றேன்” என்று சொன்னார். இதைக் கேட்டு நடுஉச்சி குளிர்ந்து போனது நாட்டுச்சேரியார் குடும்பம்.
தண்டுவடப் பாதிப்புக்குள்ளான ஒருவர் பேருந்தில் பயணம் செய்வது சரியில்லை என்பதால், ரயிலில் டிக்கெட் எடுத்து நாட்டுச்சேரியாரை சென்னைக்கு அனுப்பி வைத்தது அவரது குடும்பம். அவரும் அவருடைய புதல்வர் பாண்டியும் சென்னை செல்கிறார்கள். சென்னையில், தலைவரின் வீட்டுக்குச் சென்று பார்க்கிறபோது தலைவர் டெல்லி சென்று விட்டார். அதிர்ந்து போன நாட்டுச்சேரியார், தனது கஷ்டத்தையும் வருத்தத்தையும் மகனிடம் காட்டிக்கொள்ளாமல் அப்படியே மூப்பனார் வீட்டுக்கு மகனை அழைத்துக்கொண்டு செல்கிறார்.
நாட்டுச்சேரியாரை அன்போடு வரவேற்று உபசரித்த மூப்பனார், உடனடியாக சென்னை அரசு பொது மருத்துவமனையின் டீன் கல்யாணராமனுக்கு போன் செய்து, "எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவர், மிக முக்கியமானவர் வருகிறார். அவருக்கு தண்டுவடத்தில் பிரச்சினை. நீங்கள் அவருக்கு மருத்துவம் செய்தாக வேண்டும்" என்று சொல்லி உடனடியாக அனுப்பி வைக்கிறார்.
நாட்டுச்சேரியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின், அன்புத் தலைவர் சிதம்பரத்திடமிருந்து ஒரு தபால் வருகிறது. ‘நான் அவசர காரியமாக வெளியூர் வந்துவிட்டேன். நீங்கள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறீர்கள் என்பதை நான் அறிந்தேன். தங்களின் மருத்துவம் தொடர்பாக திருமதி நளினி சிதம்பரம் தங்களைத் தொடர்பு கொள்வார்’ என்று அதில் இருந்தது. கடிதம் தான் வந்ததே தவிர அன்புத் தலைவர் வீட்டிலிருந்து வேறு எந்தத் தகவலும் இல்லை. அதன் பிறகு நாட்டுச்சேரியார் பூரண குணம்பெற்று, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு தலைவருடன் சுற்றுப்பயணத்தில் போக முடியாத சமயத்தில், அண்ணன் சுந்தரத்தை (பின்னாள் எம்எல்ஏ) தலைவரின் சுற்றுப்பயணத்தில் உதவியாளராக அனுப்பி வைத்தார் நாட்டுச்சேரியார்.
1996-ல் தமாகா உருவானபோது, அன்புத் தலைவர் சிதம்பரம் நாட்டுச்சேரியாரையும் காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை வேட்பாளராக வேட்புமனுவை தாக்கல் செய்யச் சொல்லி இருந்தார் என்று ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன். அந்த சமயத்தில் நாட்டுச்சேரியார் சென்னைக்கே சென்று தலைவரைச் சந்தித்தபோது, தலைவர் செல்லமாக இவருடைய வயிற்றிலே தட்டி, “இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க... போய் தேர்தல் செலவுக்கு பணத்தை ரெடி பண்ணுங்க சார்” என்று சொல்லி அனுப்பினார். ஆனால், கடைசியில் அந்த வாய்ப்பு அங்கே சுத்தி இங்கே சுத்தி எங்கோ சுத்தி என்.சுந்தரத்துக்குப் போனது.
அடுத்து 1996 உள்ளாட்சி தேர்தலில் , சாக்கோட்டை ஒன்றிய தலைவருக்கு நாட்டுச்சேரியார் தமாகா வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அப்போது நடந்த மறைமுக வாக்கெடுப்பில், தமாகாவைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் ஒருவரே நாட்டுச்சேரியாருக்கு எதிராக வாக்களிக்க வைக்கப்பட்டார். அப்படி வாக்களித்ததற்கு பிரதிபலனாக அவர் ஒன்றிய துணைத் தலைவரானார். அறமாய் ஜெயித்திருக்க வேண்டிய நாட்டுச்சேரியார் புறமாய் தோற்கடிக்கப்பட்டார். நாட்டுச்சேரியாரை தோற்கடித்து நற்பலன்களைத் தேடிக்கொண்டவர், தலைவர் சிதம்பரத்துக்கும் அப்போது எம்எல்ஏ-வாக இருந்த அண்ணன் சுந்தரத்துக்கும் அதிதீவிர விசுவாசி. அப்படி இருந்தும், எதற்காக கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து, திமுக - தமாகா கூட்டணியின் போட்டி வேட்பாளரை ஜெயிக்க வைத்தீர்கள் என்று கேட்க எந்த நீதிமானும் அப்போது நானென்று நிற்கவில்லை. இது, நாட்டுச்சேரியாரின் அடிமனதை அறுத்தது.
2001-ல், மீண்டும் உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. அப்போது தமாகாவுக்கு நாட்டுச்சேரியார் மட்டுமே கவுன்சிலர். முந்தைய தேர்தலில், சொந்தக் கட்சிக்காரர் ஒருவர் கடைசி நேரத்தில் நம்பவைத்துக் கழுத்தறுத்ததால் ஒன்றிய தலைவர் பதவியை பறிகொடுத்த நாட்டுச்சேரியார், இந்தமுறை தான் ஒருவர் மட்டுமே ஜெயித்திருந்தும் தந்திரமாய் செயல்பட்டு தலைவர் பதவிக்கு வந்தார். அதுதான், அவரது தனிப்பட்ட செல்வாக்குக்கும் வைராக்கிய குணத்துக்கும் சான்று.
அதன் பிறகும் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை எல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு, தேர்தலுக்குத் தேர்தல் அன்புத் தலைவரின் வெற்றிக்காக அரும்பாடுபட்டு உழைத்தார் நாட்டுச்சேரியார். 2004 பாராளுமன்ற தேர்தலின்போது நாட்டுச்சேரியாரின் வீட்டுக்கே வந்த தலைவர் சிதம்பரம், “நீங்கள் எனக்காக தேர்தல் வேலை செய்ய வேண்டும்; வாருங்கள்” என்று அழைத்துவிட்டுப் போகிறார்.
சிதம்பரம் போனபிறகு, அங்கே அப்போது இருந்த தமாகா வர்த்தக அணி பிரமுகர் சி.டி.பழனியப்பன் கேட்கிறார், “உங்களுடைய மனைவி தவறுனதுக்கு தலைவர் துக்கம் விசாரிக்கக்கூட வரலியே... அதையெல்லாம் மறந்துட்டு நீங்க அவருக்கு மறுபடியும் தேர்தல் வேலை பாக்கப்போறீகளா?” என்று.
அதற்காக கொஞ்சமும் ஆத்திரப்படாத நாட்டுச்சேரியார், “நம்முடைய குடும்பத்து நல்லது கெட்டதுகளுக்கு அவங்க வர்றதும் போறதும் அவங்களோட விருப்பம். அது வேற. கட்சிக்காக வேலை செய்யுறது வேற” என்று சொல்லிவிட்டு, அந்தத் தேர்தலிலும் தலைவருக்காக வேலைபார்த்தார்.
எம்.காம். படித்துவிட்டு, வேலை தேடிக்கொண்டிருந்த நாட்டுச்சேரியாரின் புதல்வர் பாண்டி, ஆரம்ப நாட்களில் தலைவரின் சுற்றுப்பயணங்களில் அவருக்கு உதவியாக வந்து கொண்டிருந்தார். பின் நாட்களில் அவர் தனியார் வங்கி ஒன்றில் பணிக்குச் சேர்ந்து, இப்போது அதன் மேலாளராகவும் ஆகி ஓய்வும் பெற்றுவிட்டார்.
நாட்டுச்சேரியார் மாதிரியான, மக்கள் செல்வாக்குள்ள மனிதர்களுக்குக் கிடைக்கவேண்டிய அரசியல் அங்கீகாரங்களை எல்லாம் இடையில் வழிப்போக்கர் போல் வருபவர்கள் தட்டிப்பறித்துச் செல்வதும், அதிகாரத்தில் இருக்கும் தலைவர்கள் அதைத் கண்டும் காணாமல் ரசிப்பதும் காலங்காலமாகவே தொடரத்தான் செய்கிறது. நாட்டுச்சேரியார், உடல் நலம் பாதித்து படுத்தபடுக்கையாகிப் போனபோதும் கட்சி அவரைக் கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் கடைசிவரை கதர்ச்சட்டையை மறக்காமல் இருந்தவர், அண்மையில் தமாகா என்ற அடையாளத்துடன்தான் காலமானார்.
இதே சாக்கோட்டை ஒன்றியத்தில்தான், அன்புத் தலைவரின் சொந்த ஊரான கண்டனூர் பேரூராட்சியும் உள்ளது. எனக்குத் தெரிந்து இங்கே கடந்த 30 ஆண்டுகளாக கை சின்னத்தின் வேட்பாளரை பேரூராட்சி தலைவர் இருக்கையில் அமரவைக்க முடியவில்லை. அகில இந்திய அளவில் ஏன்... உலக அளவில் மதிப்பும் மரியாதையும் வைத்துப் பேசப்படுகின்ற ஓர் காங்கிரஸ் தலைவரின் ஊரில், கட்சிக்கான செல்வாக்கு இப்படி இருக்கிறது. இதற்கு என்ன காரணம்; யார் பொறுப்பு என்று இனியாவது நாம் சிந்திக்க வேண்டும்!
(“உனக்குத் திராணி இருந்தா நில்லு... இல்லாட்டி வெலகிக்க. நான் வேற ஆளப்போட்டு ஜெயிச்சுக்கிறேன்” பொறுப்பான பிள்ளை இப்படிச் சொன்னர். இதைக்கேட்டு, அவரிடம் நிதி உதவி கேட்டு வந்த காங்கிரஸ்காரர் ஏமாற்றத்துடன் திரும்பினார். ஆனாலும் வைராக்கியத்துடன் ஒன்றிய துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வென்று, அதிமுகவுக்குப் போயே போய்விட்டார் தன்மானமுள்ள அந்த காங்கிரஸ்காரர். இது, இந்த உள்ளாட்சித் தேர்தலில் நடந்த இன்னொரு வழியனுப்பு வைபவம். அதை அடுத்து பார்ப்போம்!)
முந்தைய அத்தியாயத்தை படிக்க:
சிவகங்கையும் சிதம்பரமும்... 15