விலகி இருக்கிறாரா...விவேகம் காக்கிறாரா?

By கரு.முத்து

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரான முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், அண்மைக் காலமாகக் கட்சி செயல்பாடு களிலிருந்து ஒதுங்கியிருப்பதாகப் பேச்சு எழத் தொடங்கி யிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த வைத்திலிங்கம், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு திமுக தலைவர் களுடன் நெருக்கம் காட்டுவதாகவும் தகவல்கள் வருகின்றன. வைத்திலிங்கத்தின் வியூகம்தான் என்ன? அலசுவோம்.

வளர்த்துவிட்ட சசிகலா

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள தெலுங்கன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த வைத்திலிங்கம், அந்த ஊர் கிளைச் செயலாளராக அரசியலைத் தொடங்கி, அதிமுக அமைப்புச் செயலாளர் வரைக்கும் உயர்ந்தார். 2001 தேர்தலில் முதன்முறையாக ஒரத்தநாடு தொகுதியில் வென்று, அமைச்சராகவும் ஆனார். அதைத் தொடர்ந்து 2006, 2011 ஆகிய தேர்தல்களிலும் வென்றார். ஜெயலலிதா இருக்கும்போது கட்சியில் நியமிக்கப்பட்ட நால்வர் அணி, ஐவர் அணியில் இவருக்கும் முக்கிய இடம் தரப்பட்டது. தற்போதும், கட்சியின் முக்கிய பொறுப்பான துணை ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்.

ஜெ.வுடன் வைத்திலிங்கம்

இத்தனை முக்கியத்துவமும் வைத்திலிங்கத்துக்குக் கிடைக்க, இவர் சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்தவர், ஒருவகையில் அவரது உறவினர் என்பதும்தான் காரணம். இவர்மேல் சசிகலாவின் கரிசனம் எந்த அளவுக்கு இருந்தது என்பதற்கு, ஒரேயொரு உதாரணத்தைச் சொன்னால் போதும்.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில், வைத்திலிங்கத்துக்குத் தேர்தல் செலவுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பணம் களவுபோனது. இதனால் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திக்குமுக்காடிக்கொண்டிருந்தார் வைத்தி. இத்தகவல் தலைமைக்குப் போனது. அதே அளவிலான தொகை அதிமுக தலைமையால் மீண்டும் தரப்பட்டது. ஆனாலும் ஒரத்தநாட்டில் தோல்வியடைந்தார். அதனால் சோர்ந்திருந்தவருக்கு, அடுத்த சில நாட்களிலேயே மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேடிவந்தது.

இதற்கெல்லாம் சசிகலாதான் காரணம் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. அப்படி தனக்கு அரசியல் வாழ்க்கையைத் தந்த சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்கும் அறிவிப்பை, இதே வைத்திலிங்கத்தை வைத்தே வெளியிட்டது எடப்பாடி தலைமை. 2017 ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி, சென்னையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைப்பு முடிந்ததும், மாநிலங்களவை உறுப்பினராக இருந்த வைத்திலிங்கம்தான், “சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அறிவித்தார்.

என்னதான் தஞ்சை மாவட்டத்தில் இருந்த சீனியர்களையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு, சசிகலா இவருக்குப் பதவிக்கு மேல் பதவி கொடுத்து அழகு பார்த்தாலும், சசிகலா சிறைக்குச் சென்றதும் இவர் அதிமுகவின் பக்கமே உறுதியாக நின்றுவிட்டார். அந்த அளவுக்கு அதிமுகவின் தீவிர விசுவாசியான வைத்திலிங்கம், சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு சற்று விலகியே இருப்பதாகச் சொல்லப்படுவது ஆச்சரியம் தருகிறது.

அப்படியெல்லாம் ஒதுங்கி நிற்பவரா வைத்திலிங்கம்?

எடப்பாடியிடம் நேருக்கு நேராக வாதாடுகின்ற, தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்ற துணிச்சல் கொண்டவர் வைத்திலிங்கம். நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது வேட்பாளர் பட்டியலை முழுக்க முழுக்க எடப்பாடியே தயார் செய்தார். அவரைச் சந்திக்கச் சென்றபோது, அவர் கையிலிருந்த வேட்பாளர் பட்டியலை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிய வைத்திலிங்கம், டெல்டா பகுதியில் தான் சொல்லும் நபர்களைத்தான் வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திப் பட்டியலை மாற்றினார் என்று அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் பணிகள் அதிமுக அரசின் ஆட்சியின் கடைசிக் காலத்தில் அவசர அவசரமாக நடந்தபோது, அது கூடாது என்றும், அதனால் மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்றும் அழுத்தம்திருத்தமாக எடப்பாடியிடம் மல்லுக்கு நின்றவரும் இந்த வைத்திலிங்கம்தான்.

குறைக்கப்பட்ட அதிகாரங்கள்

அப்படிப்பட்ட குணம் கொண்ட வைத்திலிங்கம் இப்போது விலகியிருப்பதற்குக் காரணம், தனக்கு, முன்பிருந்த முக்கியத்துவம் கட்சியில் இப்போதில்லை என்று நினைப்பதுதான் என்கிறார்கள். வேலுமணியும், தங்கமணியும் சொல்வதைத்தான் எடப்பாடி கேட்கிறார். ஒப்புக்குக்கூட தன்னிடம் கலந்தாலோசிப்பது இல்லை என்பதைப் புரிந்துகொண்டு, கோபத்தில் ஒதுங்கியிருக்கிறார் வைத்தி என்கிறார்கள் தஞ்சை அதிமுகவினர். தலைமைக் கழகத்தில் இருந்து அழைப்பு வந்தால் மட்டுமே அங்கே செல்கிறாராம் வைத்தி.

தற்போது மத்திய மண்டலத்தில் வைத்திலிங்கத்தின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, திருச்சி உட்பட பல்வேறு பகுதிகள் வேலுமணியின் பொறுப்பில் இருக்கின்றன. அது இவருக்குக் கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் தற்போது ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவான மனநிலையில் இருக்கும் வைத்திலிங்கம், ஒருவேளை ஓபிஎஸ் சசிகலா பக்கம் சென்றால், அவரோடு செல்லவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் அதிமுக சீனியர்கள்.

மேலும், ஓபிஎஸ் போலவே இவரும் திமுகவிடம் நெருக்கம் காட்டத் தொடங்கி இருப்பதாகவும் சொல்கிறார்கள். அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் எ.வ.வேலு மூலமாக திமுக தலைமையிடம் சுமூக தொடர்பில் இருக்கிறார் வைத்தி என்கிறார்கள். அதிமுக தரப்பில் என்ன நடக்கிறது என்பதை அறிய, திமுகவும் இவரைப் பயன்படுத்திக்கொள்வதாகவும் சொல்கிறார்கள். திமுக தயவோடு, இவரது மகன் பிரபு நெடுஞ்சாலைத் துறையில் பல ஒப்பந்தங்களைப் பெற்று தற்போதும் பணிகள் செய்துவருகிறாராம். தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கான சரக்கு ஏற்றிச்செல்லும் ஒப்பந்தமும் இவரது ஆதரவாளர் வசமே இன்னும் இருக்கிறது.

திமுகவில் இணைந்த தம்பி தேவரத்தினம்

திமுகவுக்குத் தாவும் அதிமுக பிரமுகர்கள்

’’திமுகவில் கோ.சி.மணி இருந்ததுபோல, அதிமுகவில் மத்திய மண்டலப் பொறுப்பாளராக இருந்த வைத்திலிங்கம், டெல்டாவில் தன்னை மிஞ்சி வேறு யாரும் கட்சியில் இருக்கக்கூடாது, நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் தனது கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்று நினைப்பவர். ஏரியாவில் வேறு யாரையும் வளரவிட மாட்டார். அதனாலேயே தஞ்சையின் முன்னாள் எம்பி-யான பரசுராமன் உள்ளிட்டவர்கள் கட்சியைவிட்டு விலகி திமுகவில் இணைந்தார்கள்.

பட்டுக்கோட்டை சேகர் போன்றவர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். கட்சியின் மூத்த முன்னோடியும், பல முக்கியப் பொறுப்புக்களை வகித்தவருமான கும்பகோணம் தம்பி தேவரத்தினம் தனது ஆதரவாளர்களுடன் திமுகவுக்குப் போய்விட்டார். மேலும் பல முக்கிய பிரமுகர்களைத் திமுகவுக்குக் கொண்டுசெல்லப் போவதாகவும் தேவரத்தினம் சபதம் செய்திருக்கிறார். இப்படிப் பலரும் வைத்திலிங்கத்தால் கட்சியிலிருந்து ஒதுங்கிக்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார்கள் அதிமுக முன்னோடிகள்.

’’தற்போது வைத்திலிங்கம்தான் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளராகவும், வடக்கு மாவட்டப் பொறுப்பாளராகவும் இருக்கிறார். ஆனால், மாவட்டத்தில் கட்சி செயல்பாடுகள் எதுவும் முன்புபோல நடப்பதில்லை. இவரும் அதிகம் சென்னையிலேயே தங்கிவிடுகிறார். முக்கியமான தேவைகளுக்கு மட்டுமே தஞ்சைக்கு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். தஞ்சையில் உள்ள தமிழ்நாடு ஓட்டலுக்கு நிர்வாகிகளை வரவழைத்து அங்கேயே பேசி முடித்து அனுப்பிவிட்டு சென்னைக்குத் திரும்பிவிடுகிறார். ஒரத்தநாட்டுக்கும் முன்புபோல அதிகம் வருவதில்லை” என்கிறார்கள் வைத்திலிங்கத்தை நன்கறிந்த தொகுதிவாசிகள்.

காந்தி

எல்லாமே பொய்!

கேள்விகளுக்கு விடைகாண வைத்திலிங்கத்தைத் தொடர்புகொள்ள முயன்றோம். முடியவில்லை. எனவே, வைத்தியின் தீவிர ஆதரவாளரும், தஞ்சை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவருமான ஒரத்தநாடு காந்தியிடம் பேசி்னோம்.

“வைத்திலிங்கத்துக்குக் கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை; ஒதுங்கியிருக்கிறார் என்பதெல்லாம் பொய்யான தகவல்கள். ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இவருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கிறார்கள். அனைவரும் சேர்ந்துதான் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார்கள். இந்தவாரம் கூட சென்னை சென்று பொன்விழா கொண்டாட்டம் குறித்த ஆலோசனையில் வைத்திலிங்கம் கலந்துகொண்டார்.

சென்னையிலேயே வைத்திலிங்கம் இருக்கிறார் என்பதும் தவறான தகவல்தான். கரோனா வந்தபோது கொஞ்ச நாட்கள் சென்னையில் இருந்தாரே தவிர, மற்றபடி ஒரத்தநாட்டில்தான் இருக்கிறார். இங்குள்ள நல்லது கெட்டதுகளில் தவறாமல் பங்கேற்கிறார். தஞ்சையில் கட்சி அலுவலகத்தும் அவ்வப்போது சென்று நிர்வாகிகளைச் சந்தித்துவருகிறார். தலைமை அறிவிக்கும் அனைத்து நிகழ்வுகளும் தஞ்சை மாவட்டத்தில் நடத்தப்படுகின்றன. இப்போது மட்டுமில்லை, எப்போதுமே அதிமுகவில்தான் வைத்திலிங்கம் இருப்பார். கட்சியையும், எங்களையும் வழிநடத்துவார்” என்று விளக்கம் கொடுத்தார் காந்தி.

ஆனாலும் வைத்தியின் ஆரவாரமில்லாத அமைதி அதிமுகவினரை மட்டுமல்ல... தஞ்சை மக்களையும் சந்தேகக் கண்கொண்டுதான் பார்க்க வைக்கிறது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE