மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட, வைகோவின் மகன் துரை வைகோ 25-ம் தேதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ஆசிபெறுவார் என்று காமதேனு இணையத்தில் முன்கூட்டியே நாம் சொல்லி இருந்தோம். அதன்படியே 25-ம் தேதி, தந்தை வைகோவுடன் சென்று ஸ்டாலினிடம் ஆசிபெற்றார் துரை வைகோ. இதைத் தொடர்ந்து மதிமுகவுக்கு புத்துணர்வூட்டும் அடுத்தகட்டப் பணிகள் வேகமாக திட்டமிடப்பட்டு வருகின்றன.
திமுகவில் தனக்கு நெருக்கடி ஏற்பட்ட போது, நடைபயணத்தைத் தொடங்கி நாடறிந்த நாயகனானார் வைகோ. தற்போது, அவரது மகனுக்கும் அதே பாணியில் பயணத் திட்டம் வகுக்கப்படுகிறது. துரை வைகோவை தலைமைக் கழகச் செயலாளர் ஆக்கியது தொடர்பாக, கொங்கு பகுதியில் சலசலப்பு இருந்தாலும் பெருவாரியான மாவட்டச் செயலாளர்கள் துரை வைகோவை ஆதரிக்கிறார்கள். இத்தனை காலமும் வைகோவுக்குப் பின்னால் இருந்துவிட்ட இவர்கள், இப்போது காலத்துக்கு ஏற்ற மாற்று அரசியலை விரும்புகிறார்கள். அத்தகைய அரசியலை, துரை வைகோ கையிலெடுப்பார் என்ற நம்பிக்கை அவர்களில் பலருக்கும் இருக்கிறது. அதனால்தான், அவர்கள் துரையை வழிமொழிந்து கொண்டாடுகிறார்கள்.
இந்நிலையில், வைகோ நடைபயணம் தொடங்கி தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கியதுபோல், துரைக்கும் உருவாக்க ஒரு பயணத் திட்டம் உருவாக்கப்படுகிறது. ஆனால், நடைபயணம்போல் திட்டமிடாமல் வாகன வழிப் பயணமாக இதை வடிவமைப்பதாக மதிமுக தரப்பில் சொல்கிறார்கள். இதன்படி விரைவிலேயே மதிமுக தொண்டர் தரிசன யாத்திரையைத் தொடங்க இருக்கிறார் துரை வைகோ. இந்தப் பயணத்தின்போது முக்கிய சாலைகளை மட்டும் கடக்காமல், ஒன்றிய அளவில் குக்கிராமம் வரை சென்று மதிமுக நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசுவார் துரை என்கிறார்கள்.
வைகோ மீது அபிமானம் கொண்டிருந்தாலும், இப்போது அரசியல் நடவடிக்கைகளை விட்டு ஒதுங்கி இருக்கும் மதிமுகவின் பழைய நிர்வாகிகளை எல்லாம் தேடிப் போய் சந்தித்து, அவர்களை மீண்டும் மதிமுகவுக்கு திருப்புவது, இந்தப் பயணத்தில் துரையின் முக்கிய திட்டம். அதேபோல், கிராம அளவில் புதிய இளைஞர்களையும் மதிமுகவுக்கு கொண்டுவந்து கட்சிக்கு புதிய எழுச்சியை உண்டாக்குவதும் இந்தப் பயணத்தின் நோக்கம் என்கிறார்கள் மதிமுக வட்டாரத்தில்.
மகன் அரசியலுக்கு வருவதில் தனக்கு விருப்பமில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த வைகோ, உண்மையில் இப்போது ரெட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கிறார். வாரிசு அரசியல் என்ற வாதத்தை தனது வாதத்தால் சாதித்திருக்கும் வைகோ, அடுத்தகட்டமாக தனது இடத்தில் மகனை உட்கார வைப்பதற்கான வியூகங்களைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டார். அநேகமாக, துரை வைகோ தொண்டர் தரிசனத்தை முடித்துவிட்டு திரும்பும் சமயத்தில், அதற்கான வியூகங்கள் தயாராய் இருக்கும் என்றும் மதிமுக நிர்வாகிகள் சிலர் சொல்கிறார்கள்.
இதனிடையே, வைகோ தனது மகனுக்கு மகுடம் சூட்டிய நிகழ்வில், மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கலந்துகொள்ளாத விஷயம், மதிமுகவுக்குள் இன்னமும் பிரதானமாக விவாதிக்கப்படுகிறது. வைகோவின் வாரிசு அரசியலை கொங்கு மண்டலத்தில் உள்ள மதிமுக நிர்வாகிகள் சிலர் எதிர்க்கிறார்கள். அவர்களால் வெளிப்படையாக அதைப் பேசமுடியவில்லை. ஆனால், தனது எதிர்ப்பைக் காட்டும்விதமாக துரைசாமி அந்த நிகழ்வை புறக்கணித்துவிட்டார் என்கிறார்கள்.
அதேசமயம், கட்சிக்குள் ஒரு சிறிய வட்டத்தினர் கிளப்பும் இந்த எதிர்ப்பை மதிமுக தலைமை பெரிதாக எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. அதிருப்தியில் இருக்கும் மதிமுகவினர் திமுக அல்லது அதிமுகவுக்குப் போகக்கூடும் என்ற பேச்சும் இருக்கிறது. அப்படி கட்சி மாறக்கூடியவர்கள் பட்டியலில், திருப்பூர் துரைசாமியின் பெயரை பிரதானமாகச் சொல்கிறார்கள். ஒருவேளை அப்படி அவர் கட்சி மாறினால், என்ன காரணம் சொல்வார் என்பதையும் யோசிக்கத்தான் வேண்டி இருக்கிறது.