மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல்; மல்லுக்கட்டும் குரு-சிஷ்யன்

By கரு.முத்து

தனது வழக்கமான இயல்பை விட்டு, அதிரடி காட்டிய முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயாஸ்கரை, அதற்கு பதிலடியாக 2 முழு நாட்கள் விசாரணையில் உட்காரவைத்து அயர்ச்சி அடைய செய்திருக்கிறது தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை. தீபாவளிக்குப் பிறகும் விசாரணை தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பின்னணியில், உள்ளாட்சித் தேர்தல் இருக்கிறது என்கிறார்கள் கரூர்வாசிகள். கரூர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பதவியை கைப்பற்றிவிட வேண்டும் என்று களத்தில் குதித்திருக்கும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும், அந்தப் பதவியை தங்கள் கட்சிக்கே தக்கவைத்துவிட வேண்டும் என்று தவியாய்த் தவிக்கும் விஜயபாஸ்கருக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தின் விளைவுதான் இதெல்லாம் என்கிறார்கள்.

எடப்பாடியுடன் விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர் அமைதியான குணம் கொண்டவர். எதற்கும் பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டார். அமைச்சராக இருந்தபோதும் சரி, ஆட்சி மாற்றத்துக்குப் பின்பும்சரி அப்படித்தான் இருந்துவந்தார். ஆனால், அவரை அப்படி இருக்கவிடாமல் செய்தவர் செந்தில்பாலாஜிதான். அவரது சொத்து ஆவணங்களை தினம் ஒவ்வொன்றாக வெளியிடுவேன் என்றார். ஆனால், அப்படி எதையும் வெளியிடவில்லை. மாறாக வருமானவரித் துறையிடம் போட்டுக்கொடுத்திருக்கிறார். அதனால், தமிழகத்திலேயே முன்னாள் அமைச்சர்களில் முதல் ஆளாக விஜயபாஸ்கர் வீட்டுக்குத்தான் ரெய்டு வந்ததது. அதில்தான் விஜயபாஸ்கர் மிகுந்த கோபத்துக்கு ஆளானார்.

அடுத்ததாக அவரது கோபம் உச்சத்துக்குச் சென்றதற்குக் காரணமாக அமைந்துவிட்டது, இந்த மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல். தற்போது அதிமுகவின் எஸ்.எஸ்.கண்ணதாசன் மாவட்ட ஊராட்சித் தலைவராக இருக்கிறார். தானேஷ் என்கிற முத்துக்குமார் துணைத்தலைவராக இருந்தார். மொத்தமுள்ள 12 உறுப்பினர்களில் 9 பேர் அதிமுகவினர். அதில் தானேஷ், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கிருஷ்ணாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராகக் களமிறங்கியதால், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

தேர்தல் அதிகாரியை மிரட்டிய வழக்கில் கைதானவர்கள்

அதனால் அந்த 8-வது வார்டு உறுப்பினர் பதவியும், அவர் வகித்த மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பதவியும் காலியானது. தற்போது நடந்த தேர்தலில் 8-வது வார்டு உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த கண்ணதாசன் வெற்றி பெற்றிருக்கிறார். துணைத்தலைவர் பதவிக்கு கடந்த 22-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது வெற்றி பெற்றவரையும் சேர்த்து மொத்தம் 4 பேர் மட்டுமே திமுகவினர். மீதமுள்ள 8 பேரும் அதிமுகவினர் என்பதால், தேர்தலில் அதிமுக சுலபமாக வென்றுவிடும். அதனாலேயே, செந்தில்பாலாஜியின் உத்தரவின்பேரில் தேர்தலை நடத்தாமல் ஒத்திவைத்தாராம் தேர்தல் அதிகாரி மந்திராசலம்.

’’வெற்றி கண்ணுக்கு எதிரே இருந்தபோதிலும் அது கைக்குக் கிடைக்காமல் தள்ளிப்போனதை விஜயபாஸ்கர் எதிர்பார்க்கவில்லை. இதிலும் சும்மா விட்டுவிட்டால், மாவட்டத்திலும் சரி, கட்சியிலும் சரி நமக்கு இனி மரியாதை இருக்காது என்பதை உணர்ந்துகொண்டுதான் உடனடியாக களமிறங்கினார். தேர்தலை ஒத்திவைத்துவிட்டுக் கிளம்பிய தேர்தல் நடத்தும் அதிகாரியின் காரை மறித்து போராட்டத்தில் இறங்கி கைதானார். அவரிடமும், காவல் துறையினரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்தத் தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும். அதில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி. இவர்களின் போக்கில்தான் இனி நாங்களும் போகவேண்டும். அதனால் எங்கள் முன்னாள் அமைச்சரின் செயல்பாடுகளும் இனி அதிரடியாகத்தான் இருக்கும்” என்கிறார் அதிமுக புள்ளி ஒருவர்.

செந்தில்பாலாஜி

இந்த மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பதவியை எப்படியும் கைப்பற்றி விடவேண்டும் என்று உறுதியாக இருக்கும் செந்தில்பாலாஜி, இது மறைமுக வாக்கெடுப்பு என்பதால் அதிமுக உறுப்பினர்கள் சிலருக்கு வலை விரித்திருக்கிறாராம். தான் யார் என்பதை தனது முன்னாள் சிஷ்யரான விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினருக்கு உணர்த்திட நல்ல சந்தர்ப்பமாகத் தேர்தலை பயன்படுத்தப் பார்க்கிறார் என்கிறார்கள். பெரும்பான்மை இல்லாத நிலையில், இதில் பெறப்போகும் வெற்றி எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் தனது ஆளுமையைப் பிரதிபலிக்கும் என்று அவர் கருதுகிறாராம்.

’நம்மிடம் மூன்றில் இரண்டுபங்கான 8 உறுப்பினர்கள் இருக்கும்போது திமுகவை வெற்றிபெற விட்டுவிடக்கூடாது’ என்ற வைராக்கியத்தோடு இருக்கும் விஜயபாஸ்கர், அதிமுக மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களை பாதுகாப்பாக அடைகாத்து வருகிறார். அதனால், அவரை அப்புறப்படுத்தும் முயற்சியாக சென்னைக்கு விசாரணைக்கு அழைத்து அலைக்கழிக்க ஆரம்பித்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத் துறை. விசாரணைக்குச் சென்றவரிடம் அன்று முழுநாள் முடிந்து 2-வது நாளும் விசாரணை தொடரப்பட்டது. விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட ஏராளமான சொத்து ஆவணங்களை எடுத்துப்போட்டு விஜயபாஸ்கரை அயரடித்திருக்கின்றனர். எல்லாவற்றுக்குமே ”தெரியாது, நினைவில்லை” என்பதுமாதிரியான பதில்களையே அதிகம் சொல்லியிருக்கிறார் விஜயபாஸ்கர்.

கைது செய்து அழைத்துச் செல்லப்படும் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர்

விஜயபாஸ்கர் சென்னையில் விசாரணையில் இருந்த நேரம் பார்த்து, கரூரில் அவரது படைத்தளபதிகளை விரட்டிவிரட்டி கைது செய்தது காவல் துறை. தேர்தல் அதிகாரிக்குக் கொலைமிரட்டல் விடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், அதிமுக மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் திருவிகா, கரூர் ஒன்றிய கவுன்சிலர் தமிழ்ச்செல்வன், செல்லாண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 41-வது வார்டு செயலாளர் சுந்தரம் ஆகிய 4 பேரை தாந்தோணிமலை போலீசார் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அந்த வழக்கில் விஜயபாஸ்கர் உட்பட மொத்தம் 35 பேரின் பெயர்கள் இருக்கின்றன.

தீபாவளிப் பண்டிகை வருவதாலும் தங்கள் மாவட்டச் செயலாளர் சென்னையில் இருப்பதாலும் இதை எதிர்த்துப் போராட்ட களத்துக்கு வராமல் புறமுதுகு காட்டியிருக்கின்றனர் அதிமுகவினர். மேலும் சிலரைக் கைதுசெய்துவிட்டு, மற்றவர்களுக்கு தாங்களும் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தை ஏற்படுத்தி ஒதுங்கச் செய்துவிட்டு, விஜயபாஸ்கரையும் விசாரணையால் முடங்கவைத்துவிட்டு, தேர்தலை நடத்தினால் எளிதாக மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பதவியைக் கைப்பற்றி விடலாம் என்று கணக்குப் போட்டிருக்கிறார் செந்தில்பாலாஜி. என்ன நடந்தாலும் அதைச் சாத்தியமாக்க விடமாட்டேன் என்று சவால்விட்டுச் சந்திக்கக் காத்திருக்கிறார் விஜயபாஸ்கர்.

குருவுக்கும் சிஷ்யனுக்குமான போட்டியில் யார் வெல்வார்கள் என்று காத்திருக்கிறது கரூர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE