சுகாதாரத்தில் முன்னோடி மாநிலமே... கல்வியில்?

By ம.சுசித்ரா

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள, அரசு மருத்துவமனைக்குள்ளும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்ளும் முதன்முறையாக அடியெடுத்துவைத்த தமிழகத்தின் மேல்நடுத்தர வர்க்கத்தினர் அநேகர். அவர்களில் பெரும்பாலோரின் உதடுகள் ஆச்சரியம் அடங்காமல் உச்சரித்த சொற்கள்: “பரவாயில்லையே இவ்வளவு சுத்தமா இருக்கே!”. அசாதாரண சூழ்நிலையிலேயே தமிழகத்தின் பொது மருத்துவமனைகள் தூய்மையாகப் பராமரிக்கப்படுமானால், அதற்கு முன்பாக மட்டும் மோசமாக இருந்திருக்குமா என்ற தர்க்க ரீதியான கேள்வியை எழுப்பினாலே விடை கிடைத்துவிடும்.

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், கல்வியிலும் பொது சுகாதாரத்திலும் இந்தியா மிகவும் பின்தங்கியே உள்ளது. ஆனாலும் நாட்டின் பல மாநிலங்களைவிடவும் தமிழகம், சமூக நிலையில் முன்னேறிய மாநிலமாகவே திகழ்கிறது. இந்த கூற்றைப் பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் உட்பட பலர் ஆமோதித்தது மட்டுமல்லாமல், ஆதாரபூர்வமாகவும் விளக்கியுள்ளார்கள். இருப்பினும், திராவிட கட்சிகள் தமிழகத்துக்கு என்ன நன்மை செய்துவிட்டன என்ற கேள்வியும் ஒலிக்காத நாளில்லை!

போய் சேர்ந்ததா?

இதில், கல்வி, சுகாதாரத்தை பற்றிய விவாதம் தலைதூக்கும்போதெல்லாம் ‘சென்றடைதல்’ (access) என்ற சொல்லாடல் மேடையேற்றப்படுகிறது. இந்தச் சொல், எதையெல்லாம் உள்ளடக்கியது என்பது குறித்த விரிவான ஆராய்ச்சி அவசியம் என்பதை உணர்ந்து, புதிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த, ஓபி ஜிண்டால் குளோபல் யூனிவர்சிட்டி என்ற தனியார் பல்கலைக்கழகத்தின் புதிய பொருளாதார ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வு இது. அடிப்படை சமூக மற்றும் பொருளாதார சேவைகளில், முன்னேறிய மற்றும் பின்னடைவில் இருக்கும் இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை இந்த ஆய்வு அடையாளம் கண்டுள்ளது. ஒவ்வொரு வீடுகளிலும் சென்றடைய வேண்டிய அடிப்படை 5 தூண்கள் இதில் விவாதிக்கப்பட்டுள்ளன. சென்றடைதல் என்பதில் விலைகொடுத்து வாங்கக்கூடியதாக இருத்தல், நெருங்கக்கூடியதாக இருத்தல், கிடைக்கும்படியாக இருத்தல், உரிய நேரத்தில் கிடைத்தல், தரமானதாகக் கிடைத்தல் ஆகியவை கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன.

கல்வியும் சுகாதாரமும் நீதியும் அடிப்படை வசதிகளும் சென்றடைகிறதா என்பதை, மேற்கூறிய 5 அம்சங்களையும் அலசி ஆராய்ந்துதான் முடிவு செய்ய வேண்டும் என்கிறது இந்த ஆய்வு. அடிப்படை வசதிகள் எனும்போது குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, குடியிருப்பு, ஊட்டச்சத்து, சமையல் எரிவாயு, இணையம் உள்ளிட்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியன கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

3-வது முன்னோடி மாநிலம்!

0.67-லிருந்து 0.23 வரை மதிப்பெண்கள் பெற்றிருக்கும் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன. 0.42-க்கு மேல் மதிப்பெண்கள் குவித்தவை ’முன்னோடி’ மாநிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 0.42-லிருந்து 0.33-க்குள் எடுத்தவை வெற்றியாளர்களாகவும் 0.33-க்கு கீழே இருப்பவை முன்னேற வேண்டியவையாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இப்படியாக நடத்தப்பட்ட ஆய்வில், தமிழகம் 0.55 மதிப்பெண் எடுத்து நலத்திட்டங்கள் சிறப்பாகச் சென்றடையும் 3-வது ’முன்னோடி’ மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவா, சிக்கிம் மாநிலங்களுக்கு அடுத்த நிலையில் ‘முன்னோடி’ அந்தஸ்தை தமிழகம் உறுதி செய்துள்ளது.

மருத்துவ சேவையில் கம்பீரம்!

இதில், மருத்துவ வசதிகள் பொதுமக்களைச் சென்றடைவதில் மொத்தமுள்ள 28 மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் கம்பீரமாக நிற்கிறது. கோவா முதலிடத்திலும் சிக்கிம், கேரளா, இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், மிசோரம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா ஆகியவை 3-வது, 4-வது என்ற வரிசையில் வருகின்றன.

அதிலும் கரோனா காலத்தில், இந்திய பொதுச் சுகாதாரத்தின் லட்சணத்தை நேரடியாக சோதித்துவிடுவோம் என்றே இந்த ஆய்வு முடுக்கிவிடப்பட்டுள்ளது. இருப்பினும் கரோனா பெருந்தொற்றுக்கான சிகிச்சை, தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றுக்கு அப்பால் மகப்பேறு சார்ந்த மருத்துவ சேவைகள், மாநில மக்கள்தொகைக்கு ஏற்ப அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள், சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில்தாம் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதேபோல, குடியிருப்பு பகுதிகளில் இருந்து எவ்வளவு தொலைவில் மருத்துவ மையங்களும் மனைகளும் அமைந்துள்ளன என்பதும் முக்கிய புள்ளியாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. மருத்துவக் காப்பீடு வசதிகள் மூலம் உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து காப்பாற்றப்பட்ட உயிர்கள், தடுத்து நிறுத்தப்பட்ட இறப்பு விகிதமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகம் பாராட்டுக்குரிய இடத்தை அடைந்திருக்கிறது.

இடைநிற்றலை தடுக்கும் கழிப்பிடம்!

ஆனால், கல்வியைப் பொறுத்தமட்டில் தமிழகம் 10-வது இடத்தில்தான் உள்ளது. ஏனெனில், இந்த ஆய்வில் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல, ‘சென்றடைதல்’ என்பது எத்தனை மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் சேர்ந்துள்ளனர் என்பதை மட்டும் குறிக்கவில்லை.

மாணவர் பள்ளி வருகைப்பதிவு விகிதாச்சாரம், கல்வி தடைபட்டுப்போகும் குழந்தைகளின் எண்ணிக்கை, வீடுதோறும் குழந்தைகளுக்கான சராசரி செலவினம், எத்தனை மாணவர்களுக்கு எத்தனை ஆசிரியர்கள் என்ற விகிதாச்சாரம், 2 கிலோ மீட்டர் தொலைவுக்குள் பள்ளிக்கூடங்கள் உள்ளனவா என்ற கணக்கு, பள்ளிக்கூடங்களில் பெண் குழந்தைகளுக்கான கழிப்ப்பிட வசதி, தொழிற்கல்வி வழங்கப்படும் கல்விக்கூடங்களின் எண்ணிக்கை, கல்விக்கு மாநிலத்தின் நிதி ஒதுக்கீடு, இணைய வசதி கணினி வசதி உள்ளிட்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகள் என இத்தனை அம்சங்களும் சோதிக்கப்பட்டுள்ளன.

அப்படிப் பார்த்தால், பஞ்சாபில்தான் அதிகப்படியான மாணவர் சேர்க்கையும் குறைந்தபட்ச இடைநிற்றலும் உள்ளது. அதிலும் இடைநிலை, மேல்நிலை படிக்கும் பெண் குழந்தைகள் எவருமே படிப்பிலிருந்து அங்கு விலகுவதில்லையாம். அதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? அங்குள்ள பெரும்பாலான பள்ளிகளில், தூய்மையாக பராமரிக்கப்படும் தண்ணீர் வசதியுடன்கூடிய கழிப்பிடங்கள் உள்ளனவாம்.

அதேபோல, பெண் குழந்தைகள் தவறாமல் பள்ளிக்கூடம் செல்லும் முதல் மாநிலமாக தெலங்கானா உள்ளது. பிற மாநிலங்களில் பதின்பருவத்தை எய்திய பெண் குழந்தைகள் வீட்டு வேலைகளை செய்ய நிர்ப்பந்திக்கப்படுவதால், அவர்களது கல்வி தடைபடுவதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

அடுத்தபடியாக, அடித்தட்டு நிலையைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் இலவச கட்டாய கல்வியை உறுதிப்படுத்தும் கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் பஞ்சாபில் 81.5 சதவீத மாணவர் சேர்க்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதிலும் தமிழகம் இன்னமும் செல்ல வேண்டிய தொலைவு அதிகம் உள்ளது. வகுப்புக்கு 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரத்தை கடைப்பிடிக்கும்படி, கல்வித் திட்டங்கள் வலியுறுத்துகின்றன. ஆனால், 200 மாணவர்கள் படிக்கும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஓராசிரியரும் ஈராசிரியரும் திண்டாடும் நிலை இன்றும் தமிழகத்தில் நீடிப்பது பேரவலம்.

தமிழகம் சுதாராத்தில் முன்னோடி மாநிலமே. ஆனால், கல்வியில் முன் நகர வேண்டிய பல கட்டங்கள் உள்ளன. இவற்றை மனத்தில் நிறுத்தி, தமிழக அரசுக் கல்வியிலும் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக உயர்த்த உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE