பஞ்சாப் முன்னாள் முதல்வரான அம்ரீந்தர் சிங், விரைவில் 80 வயதை எட்ட இருக்கிறார். அதேநேரம் புதுக்கட்சி, புதிய கூட்டணி என தனது அரசியல் வாழ்க்கையில் அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகிறார்.
அம்ரீந்தர் சிங் நாளை(அக்.27) சண்டிகரில் புதுக்கட்சியை தொடங்க உள்ளதாகத் தெரிகிறது. அதற்கான ஏற்பாடுகளில், இன்று அவரது ஆதரவாளர்கள் மும்முரமாக உள்ளனர். நிகழ்வை முகநூலில் நேரலை வழங்கவும் முடிவு செய்துள்ளனர்.
கட்சி தொடக்கம் எனக் குறிப்பிடாது, அம்ரீந்தர் தரப்பிலிருந்து ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியிலும், மாநிலத்திலும் அம்ரீந்தரின் அரசியல் நகர்வுகள் கூர்மையாக கவனிக்கப்படுகின்றன. முன்னதாக, நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் அம்ரீந்தருக்கும் இடையிலான உட்கட்சி மோதலில், டெல்லி காங்கிரஸ் மேலிடத்தின் அழுத்தம் காரணமாக அம்ரீந்தர் கடந்த மாதம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்பு, ஆதரவாளர்களுடன் ஆலோசனை என அம்ரீந்தர் பரபரப்பாக இருந்தார். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரும் விவசாயிகளின் போராட்டத்தை பஞ்சாபியர்களே முன்னெடுப்பதால், மத்தியில் ஆளும்கட்சியான பாஜகவில் அவர் சேரத் தயங்கினார். ஆனால், விவசாயிகள் போராட்டத்துக்கு சுமூகத் தீர்வு எட்டப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என அறிக்கை விட்டார்.
இந்நிலையில், அம்ரீந்தர் சிங் புதுக்கட்சியை நாளை தொடங்க இருப்பதாகத் தெரிகிறது. விவசாயிகளுக்கு ஆதரவான தேர்தல் வாக்குறுதிகளை பாஜக வழங்குவதன் மூலம், அம்ரீந்தரின் புதுக்கட்சியும் பாஜகவும் கூட்டணி அமைக்க அமோகமான வாய்ப்புகள் தெரிகின்றன.
முன்னதாக தனது அரசியல் எதிரிகளால் ஐஎஸ்ஐ உளவாளியாக சித்தரிக்கப்படும் தனது பாகிஸ்தான் தோழியான அரோசா ஆலம் என்ற பெண் பத்திரிக்கையாளர் மீதான குற்றச்சாட்டுக்கு முகநூலில் விளக்கம் ஒன்றை அளித்திருந்தார். அதில் காங்கிரஸ், பாஜக கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்களுடன் அரோசா ஆலம் இருக்கும் படங்களை வெளியிட்டு இவர்கள் அனைவரும் ஐஎஸ் ஐ அமைப்புடன் தொடர்புடையவர்களா எனவும் அமரிந்தர் சிங் கேள்வி எழுப்பியிருந்தார். இதே பதிவில் தனது முதிர் வயதையும் அமரிந்தர் குறிப்பிட்டிருந்தார். இந்த வயதிலும் அடுத்த அரசியல் இன்னிங்ஸுக்கு சளைக்காது தயாராகிறார் பஞ்சாப் கேப்டன்.