பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன், தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தனது சமூக வலைதளத்தின் மூலம் பதிவிட்டதால், அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
முக்கிய தலைவர்கள், அரசியல் பிரமுகர்களைப் பற்றி அவதூறு பரப்பியது, மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கருத்துகளைப் பரப்பியது ஆகிய காரணங்களுக்காக சென்னை சிட்லப்பாக்கத்தில் ஒரு வழக்கும், சென்னை மத்திய குற்றப்பிரிவில் 2017, 2018-ம் ஆண்டுகளில் 2 வழக்குகளும் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கடந்த ஜனவரி மாதம் கோவை - மேட்டுப்பாளையத்திலும் இதேபோல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவதூறாகப் பேசி, பொது அமைதியைக் குலைக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டு வந்ததால், 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் குண்டர் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, அவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்தானது. அதன்பின் ஜாமீன் மனு தாக்கல் செய்யும்போது, ”மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கருத்துப் பதிவிட மாட்டேன்” என்று நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் எழுதிக்கொடுத்தார்.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாண பத்திரத்தை மீறி, மீண்டும் இரு மதத்தினருக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டதால், கடந்த 16-ம் தேதி மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார், கல்யாணராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் பாஜக பிரமுகர் கல்யாணராமனை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே, பாஜக ஆதரவாளரான கிஷோர் கே.சாமி, சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பி வந்ததாக குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.