முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழக முதல்வரை முகநூலில் முற்றுகையிடும் கேரளம்

By எஸ்.எஸ்.லெனின்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வது தொடர்பாக கேரளாவில் பரப்பப்படும் பீதியால், தமிழக முதல்வரின் முகநூல் பக்கத்தில் கேரள இணையவாசிகள் முற்றுகையிட்டு முறையிட்டு வருகின்றனர்.

நடிகர் பிருத்விராஜ்

கனமழை மற்றும் நிலச்சரிவு என வருடாந்திர இயற்கைச் சீற்றத்தின் விளைவாக கேரள மாநிலம் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. இதனிடையே கேரள எல்லையில் அமையப்பெற்று தமிழகத்தின் பொறுப்பில் உள்ள முல்லைப் பெரியாறு அணை குறித்த அச்சங்கள் அங்கே திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. மழைச் சேதத்தினால் தத்தளித்து வரும் கேரளாவில் இது மேலும் கொந்தளிப்பை உருவாக்கி வருகிறது. தமிழக-கேரள மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நீர்ப்பிடிப்பு பகுதியின் தொடர் மழை மற்றும் நீர்வரத்து அதிகரிப்பால் முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் ஞாயிறு மாலை 136 அடியை எட்டியது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி 142 அடி வரை நீரைத் தேக்கலாம். ஆனால் அணையின் நீர்மட்டம் உயரும்போதெல்லாம் கேரளாவில் பீதியைக் கிளப்பும் சிலரால் நேற்றும் பதட்டம் தொற்றியது. தமிழக மற்றும் கேரள நெட்டிசன்கள் இதுகுறித்து சமூக ஊடகங்களில் மாற்றுக் கருத்துக்களால் மோதிக்கொண்டனர். இவர்கள் மத்தியில் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன், முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக வெளியிட்ட பதிவால் இரு மாநில இணையவெளியில் பதட்டம் கூடியது.

’125 ஆண்டுகள் பழமையான அணை இன்னும் இருப்பதற்கு காரணம் எதுவும் இல்லை. அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களை ஒதுக்கிவைத்துவிட்டு சரியானதை செய்ய வேண்டியதற்கான நேரம் இது..’ என்று தொடங்கி அணைக்கு எதிரான ஆட்சேபகர் கருத்துக்களை பதிவு செய்திருந்தார். இதனை கேரள மக்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். பிருத்விராஜின் கருத்து தமிழக விவசாயிகளின் ஆட்சேபத்துக்கும் ஆளாகி உள்ளது. தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(அக்.25) தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக கூடியோர், அணை குறித்து கேரளாவில் விஷமப் பிரச்சாரம் மேற்கொள்வோரின் உருவப் படங்களை எரித்தனர்.

இதனிடையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் எழுதியுள்ள கடிதத்தில் ’முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கான முழு அளவு நீரையும் எடுத்துக்கொள்ளுங்கள்’ என தெரிவித்துள்ளார். ’தொடர்மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து விரைவில் அணை 142 அடியை எட்டிவிடும். எனவே வைகை அணைக்கு தேவையானதை திருப்பிவிடுவது உட்பட தமிழகத் தேவைக்கான நீரை எடுத்துக்கொள்ளுமாறும், ஒருவேளை கேரளாவுக்கு நீர் திறப்பதாக இருப்பின் 24 மணி நேரத்துக்கு முன்பாக தெரிவிக்க வேண்டும்’ என்றும் அந்த கடிதத்தில் கேரள முதல்வர் குறிப்பிட்டிருந்தார்.

தமிழக முதல்வர் முகநூல் பக்கத்தில் குவியும் கேரள கோரல்கள்

கேரள முதல்வரைத் தொடர்ந்து அம்மாநில மக்களும் தங்கள் பங்குக்கு தமிழக முதல்வரை சமூக ஊடகம் வாயிலாக தொடர்பு கொண்டனர். மு.க.ஸ்டாலின் என்ற முகநூல் கணக்கை முற்றுகையிட்ட கேரள நெட்டிசன்கள், அங்கே பதியப்பட்டிருந்த வெவ்வேறு பதிவுகளின் கீழ் தங்களது ’அணை எதிர்ப்பு’ கருத்துக்களையும், வேண்டுகோளையும் தொடர்ந்து பதிந்து வருகின்றனர்.

முகநூலில் தமிழக முதல்வரைத் தொடர்புகொண்டு முறையிடுமாறு கேரள மக்களுக்கு அறைகூவல் விடுக்கும் வாட்ஸ் அப் பதிவுகள் அங்கே அதிகம் சுற்றுகின்றன. அதனை நகலெடுத்து தமிழக முகநூலில் பின்னூட்டமாய் குவித்து வருகின்றனர். அதில் சிலர் மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சில பதிவுகளை கூகுள் மொழிபெயர்ப்பி வாயிலாக தமிழுக்கு மாற்றியும் பதிந்தனர். அவர்களின் பதட்டம் பொருளற்றது என தமிழக இணையவாசிகள் சிலர் பொறுமையாக பதிலளித்தும் வருகின்றனர்.

முல்லைப் பெரியாறு அணை

கேரள வெள்ளத்தின் நெருக்கடியில் முல்லைப்பெரியாறு திறந்ததின் மூலமே 2018ஆம் ஆண்டில் வெள்ள சேதம் அதிகரித்தது என்று பரப்பப்பட்ட தகவல்களால், இயற்கை சீற்றத்தால் அலைக்கழியும் போதெல்லாம் கேரள மக்களின் பதட்டம் கூடி வருகிறது. தொடக்கத்தில் 150 அடிக்கும் மேலாக பாவிக்கப்பட்ட அணையின் நீர்மட்டம் கேரளத்தின் அநாவசிய அச்சம் மற்றும் அரசியல் தலையீடுகளால், அந்த அளவிலிருந்து தற்போதைய மட்டத்துக்கு குறைத்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

கேரளத்தின் இயற்கையான புவியமைப்பு, அதன் மழைப்பொழிவு, நீர் சேகரம், வெள்ளப்பெருக்கு ஆகியவற்றை தொலைநோக்குப் பார்வையில் உத்தேசித்து திட்டங்கள் முன்னெடுப்பதில் கேரள அரசியல்வாதிகள் தொடர்ந்து இடறி வருகின்றனர். ஆனால் வருடந்தோறும் மழைக்காலம் வந்தாலே, கேரள மக்களை திசை திருப்புவதற்காக முல்லைப்பெரியாறு அணையை முன்னிறுத்தி தமிழகத்தின் மீது பழிபோடுவது வழக்கமாகி வருகிறது.

துறை நிபுணர்கள், உச்ச நீதிமன்றம் என தெளிவான வழிகாட்டுதலுடன் தமிழகம் மேற்கொள்ளும் பொறுப்பான நடவடிக்கைகளை, தனிப்பட்ட காரணங்களுக்காக தொடர்ந்து பிரச்சினைக்குள்ளாக்கும் சக்திகளை கேரள மக்கள் அடையாளம் காண்பது அவர்களுக்கு நல்லது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE