தேவர் குருபூஜையையொட்டி, அவரது நினைவிடத்தில் உள்ள மார்பளவு சிலைக்கு அணிவிப்பதற்காக அதிமுக சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு தங்கக்கவசம் வழங்கினார் ஜெயலலிதா. அதிமுக பெயரில் வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் உள்ள அந்த 13.5 கிலோ தங்கக்கவசத்தை பெற்று, தேவர் நினைவிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைப்பதற்காக அதிமுக பொருளாளரும், ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று மதுரை அண்ணாநகரில் உள்ள 'பேங்க் ஆஃப் இந்தியா' வங்கிக்கு வந்தார்.
அப்போது பேட்டியளித்த அவரிடம், "சசிகலா மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா?" என்ற கேள்விக்கு, "கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள் இதுகுறித்து கலந்துபேசி முடிவெடுப்பார்கள்" என்று சசிகலாவுக்குச் சாதகமான பதிலைச் சொன்னார். அவர் சொல்லச் சொல்ல அருகில் நின்ற முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ முகத்தில் புன்னகையும், ஆர்.பி.உதயகுமார் முகத்தில் குறுநகையும் மலர்ந்தது.
எடப்பாடி பழனிசாமி குறித்து பத்திரிகையாளர்கள் எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை என்றாலும், "சசிகலா பற்றிய கேள்விக்குப் பதில் சொல்லும்போதே எடப்பாடியை ஒரு குத்து குத்தினார் ஓபிஎஸ். “அண்ணா நமக்குச் சொல்லித்தந்தது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. அந்த கண்ணியத்துடன்தான், அரசியல் நாகரிகத்துடன்தான் பேச வேண்டும் என்பது நமது கொள்கை. எவ்வளவு பெரிய, உயர்ந்த நிலையில் இருந்தாலும் கண்ணியத்தோடு, அரசியல் நாகரிகத்தோடுதான் பேச வேண்டும்" என்பது எங்கள் நிலைப்பாடு என்று சொன்னார் ஓபிஎஸ்.
கல்லெறிக்குப் பயமா?
ஓபிஎஸ்ஸின் இந்தக் கருத்து அதிமுகவினரில் ஒரு தரப்பினருக்கு மகிழ்ச்சியையும், இன்னொரு தரப்பினருக்கு வருத்தத்தையும் தந்திருக்கிறது. அவரது இந்தக் கருத்து பற்றி ராமநாதபுரத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, "தேவர் ஜெயந்திக்கு சசிகலாவும் 30-ம் தேதி பசும்பொன்னுக்கு அஞ்சலி செலுத்த வருகிறார். எனவே, வழக்கத்தைவிட அதிகமாக தேவரின மக்கள் அங்கு கூட வாய்ப்புள்ளது. அதேநாளில் எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் அங்கே அஞ்சலி செலுத்த வருவார்கள். குடல் இறக்கப் பிரச்சினையைக் காரணம் காட்டி, கடைசி நேரத்தில் எடப்பாடி பழனிசாமி இந்தப் பயணத்தைத் தவிர்க்கவும் வாய்ப்பு உள்ளது. அப்படி அவர் வராமல் போனால், ஓபிஎஸ்தான் எல்லா எதிர்ப்பையும் வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டியதாய் இருக்கும். சசிகலா ஆதரவாளர்கள் 'துரோகி' என்றும் கூச்சலிடலாம் அல்லது கல்வீசித் தாக்குதலும் நடத்தலாம். இதை எல்லாம் எதிர்கொள்ள முடியாது என்பதால்தான், இப்போதே நானும் சசிகலா ஆள் என்று வெள்ளைக்கொடி காட்டியிருக்கிறார் ஓபிஎஸ்” என்றார்.
வேறு சிலரோ, "ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையிலான கருத்து வேறுபாடு முற்றிக்கொண்டே போகிறது. எடப்பாடி நண்பர் இளங்கோவன் வீட்டில் நடந்த ரெய்டு தொடர்பாக, அதிமுக வெளியிட்ட கண்டன அறிக்கையில் ஓபிஎஸ் கையெழுத்திடவில்லை. ஆளுநரைச் சந்திக்க பழனிசாமி சென்றபோதும், ஓபிஎஸ் உடன் செல்லவில்லை. எப்படியும் கோடநாடு கொலை வழக்கில், எடப்பாடியை ஸ்டாலின் சிக்கவைத்துவிடுவார் என்று மலைபோல நம்பியிருக்கிறார் ஓபிஎஸ். அப்படி நடந்தால், நாம்தான் கழகத்தின் ஒற்றைத் தலைமையாக வெளியில் இருப்போம் என்று கனவு காண்கிறார் ஓபிஎஸ். அதற்கு சசிகலாவின் ஆதரவு தேவை என்பதால், இப்படியெல்லாம் பேசுகிறார்" என்றும் சொல்கிறார்கள்.