சிவகங்கையும் சிதம்பரமும்... 14

By ஒய்.பழனியப்பன் - காங்கிரஸ்

"அரச குடும்பத்தவர்கள் எல்லாம் கோட்டையை விட்டு இறங்கிவந்து, இன்றைக்கு சாதாரணமாக மக்களோடு அண்ணன் தம்பியாய்ப் பழகி டீ குடித்துக் கொண்டு இருக்கக்கூடிய இந்த காலத்தில், இப்படி உச்சத்தில் உட்கார்ந்து கொண்டு நம்மை மதிக்கத் தெரியாதவர்களுடன் எப்படி நாம் தொடர்ந்து அரசியலில் பயணிப்பது" என்று 2 நாட்களுக்கு முன்பாக கோபமாக என்னிடம் கேட்கிறார், திருப்புவனம் ஒன்றிய பெருந்தலைவராக ஆகியிருக்கும் காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சின்னையா.

ப.சிதம்பரம்

காங்கிரஸில் இருந்து திமுகவுக்கு சென்று ஒன்றிய பெருந்தலைவராக வெற்றி பெற்றிருக்கும் சின்னையாவின் அப்பா, தூதை பாலகுரு சேர்வை சிவகங்கை தாலுகா காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர். 1975-ல் திருப்புவனம் ஒன்றியப் பெருந்தலைவராக ஒரு வருடம் இருந்தார். 1984-ல், ஒன்றிய பெருந்தலைவர் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. சுயேச்சையாக மீன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தனது தனிப்பட்ட செல்வாக்கை நிரூபித்து திரும்பவும் காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர் அவர்.

1980-ல் தலைவர் சிதம்பரத்துக்கு, சிவகங்கை தொகுதியை தரவில்லை என்ற வருத்தத்தில் பாலகுரு சேர்வை 3 நாட்கள் தூக்கம் வராமல் தவித்து பெரிதும் வேதனைப்பட்டதாக சொல்கிறார், அவருடைய நெருங்கிய நண்பரும் இன்றைக்கு மாங்குடி அம்பலத்தாடியின் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கக்கூடிய போஸ்.

பாலகுரு சேர்வை

2019-ல், உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை வலியக் கேட்டு நின்றார் பாலகுரு சேர்வையின் மகன் சின்னையா. தனித்து நின்றால் வெற்றி பெறக்கூடிய அளவுக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருந்தாலும்கூட, தான் காங்கிரஸ்காரன், காங்கிரஸ் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று ஆழமாய் உள்ளத்தில் பதிந்திருந்த விருப்பத்தின் காரணமாக, அவர் காங்கிரஸ் சின்னத்தைக் கேட்டு காரைக்குடியில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் காத்திருந்தார்.

ஆனால் அப்போது, சீட்டுக் கேட்டிருந்த இன்னொருவரை சமாதானப்படுத்திவிட்டு வாருங்கள் உங்களுக்கு சீட் தருகிறோம்” என்று சொல்கிறார்கள். “நீங்கள் எனக்கு முதலில் சின்னத்தைக் கொடுத்து விடுங்கள், நான் வேட்புமனு தாக்கல் செய்து விடுகிறேன். அதன் பிறகு, நான் அவரை சமாதானம் செய்து கொள்கிறேன்” என்று சொன்னார் சின்னையா. அப்படியும் அவரை இரவு 11 மணிவரை காக்கவைத்தார்கள்.

பொறுமையாகக் காத்திருந்த சின்னையா, "நாங்கள் உங்களிடம் பணம் கேட்கவில்லை. உங்களை ஓட்டு கேட்டு வரச் சொல்லவில்லை. கை சின்னம் மட்டும் கொடுத்தால் போதும் நான் வெற்றி பெறுவேன்" என்று அழுத்தமாகச் சொன்னார். அப்படி போராடி கை சின்னத்தைப் பெற்ற சின்னையா, தேர்தலில் போராடாமல் எளிதாக வெற்றி பெற்றார்.

சின்னையா

கூட்டணியில், திருப்புவனம் ஒன்றிய பெருந்தலைவர் பதவியை காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்தது திமுக. ஒன்றிய பெருந்தலைவராக சின்னையா முன்னிறுத்தப்பட்டார். ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்தல் முடிந்து தலைவருக்கான மறைமுக தேர்தல் நடக்க வேண்டும். ஆனால், தேர்தல் நடந்தால் எப்படியும் திமுக அணி வென்றுவிடும் என கணக்குப் போட்ட அதிமுக, கவுன்சிலர்களைக் கடத்திவைக்கும் அளவுக்குப் போனது. இதனால் 3 முறை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

அந்த நேரத்தில் காங்கிரஸ் எம்பி-யானவர் போதிய அழுத்தம் கொடுத்திருந்தாலோ அல்லது போராட்டம் ஆர்ப்பாட்டம் என ஆட்களைத் திரட்டி இருந்தாலோ, அப்போதே இந்தப் பிரச்சினைக்கு ஒரு விடிவு பிறந்திருக்கும். ஆனால், அதையெல்லாம் யாரும் அக்கறையோடு செய்யவில்லையே என்பதுதான், சின்னையாவின் ஆதங்கம்; வருத்தம்.

அப்போது சட்டப்பேரவையில், இந்த விஷயத்தைப் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவர் அண்ணன் கே.ஆர் .ராமசாமி, “திருப்புவனத்தில் நீங்கள் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். எங்களிடம் போதிய பலம் இருக்கிறது. நாங்கள் வெற்றிபெறுவோம் என்பதால் தேர்தலை நடத்தாமல் தள்ளி வைக்கிறீர்கள்” என்று குற்றம் சாட்டினார். இந்த விஷயத்துக்காக கார்த்தி ஒரே ஒருமுறை கடிதம் மட்டுமே எழுதினார்.

கார்த்தி சிதம்பரம்

இதையெல்லாம் என்னிடம் நேற்று ஆதங்கப்பட்டு சொன்ன சின்னையா, “இந்த விஷயத்தில் கார்த்தி மட்டுமில்லை... மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சத்தியமூர்த்தியும் கண்டுகொள்ளவில்லை. நான் வெற்றிபெற்றால் அது காங்கிரஸ் கட்சியின் வெற்றி என்பதை ஏனோ அவர்கள் உணரவில்லை.

இப்போது தேர்தல் நடைபெறப் போகிறது. நான் திமுக வேட்பாளராக ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்கு நின்று வெற்றி பெறப்போகிறேன் என்றவுடன், தனது பரிவாரங்களைக் கூட்டிக் கொண்டு ஒன்றுக்கு 2 முறை எனது வீட்டுக்கு வருகிறார் மாவட்ட தலைவர்” என்றார்.

காங்கிரஸை விட்டு விலகுவது என்றவுடன் சின்னையாவின் மனைவி பூமாதேவி (அவரும் ஒன்றிய கவுன்சிலர்) “இத்தனை ஆண்டுகாலம் வளர்த்த கட்சியை விட்டுச் செல்கிறோமே” என்று கண்ணீர் வடித்ததாகச் சொல்கிறார், இவர்களோடு திமுகவுக்குப் போன மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் முத்துராமலிங்கம்.

கடைசியாக என்னிடம் போனில் சின்னையா சொன்ன வாசகங்கள், என்னை இன்னும் நிலைகுலைய வைத்துவிட்டன.

"நம்ம தலைவர், பிள்ளைய நல்லா படிக்க வெச்சிருக்காரு. ஆனா, மரியாதையச் சொல்லி வளர்க்கல. காங்கிரஸ் கட்சிங்கிறது கம்பெனியும் இல்லை; கார்த்தி சிதம்பரம் அதுக்கு முதலாளியும் இல்லை. நாங்க இடுப்புல துண்டைக் கட்டிக்கிட்டு கைகட்டி சேவகம் பண்ணுன ஆளுகளும் இல்லை. எப்படியெல்லாமோ இருந்த கட்சியைக் கொஞ்சம் கொஞ்சமா தேச்சுத் தேச்சு கரைச்சுட்டாங்க. இப்படியே போச்சுன்னா... மானாமதுரை திருப்புவனம் ஏரியாவுல நோட்டாவோடதான் இவர் போட்டி போடணும். எங்கள மாதிரி ஆளுங்க ஒரு மரியாதைக்காகத்தான் கட்சியில இருக்கோம். அந்த மரியாதை இல்லைன்னா அப்புறம் எதுக்கு அங்க இருக்கணும். இப்ப நான் சொன்னதுல எதையும் விட்டுடாம அப்படியே போடுங்க பழனியப்பன்” என்றார் சின்னையா.

அவருக்குப் பக்கத்தில் இருந்து பேசிய (முன்னாள்) மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் முத்துராமலிங்கம், “இது எல்லாத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கும், அகில இந்திய செயலாளர்கள் குண்டுராவ், வேணுகோபால், தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி எல்லாருக்கும் எழுதினோம். ஆனால், இவுக இங்கே இருக்காங்கன்னு யாருமே இதுல தலையிடல” என்றார்.

கடந்த ஆட்சியில் சாக்கோட்டையில் 2 ஒன்றிய கவுன்சிலர்கள், கல்லலில் ஒன்றிய துணைப் பெருந்தலைவர், புதுக்கோட்டை மாவட்ட பஞ்சாயத்துத் துணை தலைவர் என வரிசையாக காங்கிரஸை விட்டு அதிமுகவுக்குப் போனார்கள். இப்போது திருப்புவனம் ஒன்றிய பெருந்தலைவர் வேட்பாளராக காங்கிரஸால் முன்னிறுத்தப்பட்டவர், அது நடக்காமல் போனதால் திமுகவுக்குச் சென்று ஒன்றியப் பெருந்தலைவராகவும் ஆகிவிட்டார். இன்னும் எத்தனை பேரை நாம் இப்படி ‘வாழ்த்தி’ வழியனுப்பப் போகிறோம்?

(2014 பாராளுமன்றத் தேர்தலின் போது, நிதியமைச்சராக இருந்த தலைவர் சிதம்பரம் ஏனோ அப்போது போட்டியிட விரும்பவில்லை. ஆனாலும், தாங்கள் சொல்வதைக் கேட்கும் இன்னொருவரை வேட்பாளராக்க முடிவெடுத்தார்கள். அப்படி அவர்களால் முன்னிறுத்தப்பட்ட ஒரு குடும்பத்தின் இன்றைய நிலையை அடுத்து பார்ப்போம்)

முந்தைய அத்தியாயத்தை படிக்க:

சிவகங்கையும் சிதம்பரமும்... 13

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE