பெயர்தான் புலிகள் காப்பகம்... உள்ளிருப்பது வன ஆக்கிரமிப்பாளர்கள்!

By கே.கே.மகேஷ்

இன்னும் வடகிழக்குப் பருவமழை தொடங்கவில்லை. ஆனாலும், வெப்பச்சலனம் காரணமாக கேரளத்திலும், தமிழ்நாட்டிலும் மழை வெளுத்துவாங்குகிறது. ஆறுகளில் எல்லாம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கேரளத்தில் வெள்ள பாதிப்பு கடுமையாக இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சிமலையின் மேகமலை உச்சியில் கேரளப்பக்கம் வெளுத்து வாங்குகிற மழை, தமிழ்நாட்டுப் பக்கம் அடக்கி வாசிக்கிறது. மூல வைகையின் ஊற்றுக்கண் பகுதி பிரவாகம் எடுக்காமல் பிசுபிசுத்து தண்ணீர் வடிகிறது. தப்பித்தவறி பெருமழை பெய்தால், மண்ணரிப்பு ஏற்பட்டு ரத்தம்போல சிவப்பு வண்ணத்தில் காட்டாற்று வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஒரேநாளில் நின்றுவிடுகிறதே தவிர, அதைப்பிடித்துவைத்து வற்றாத ஜீவநதியாக வெளியிடத் தேவையான புல்லோ, மரங்களோ அங்கில்லை. வன அழிப்பும், ஆக்கிரமிப்புமே அனைத்துக்கும் காரணம்.

இதைத் தடுக்கவும், வைகையை மீண்டும் உயிர்ப்பிக்கவும் மேகமலை வனப்பகுதியை புலிகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியது தமிழக வனத் துறை. சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இதைச் சொன்னார்கள்.

“தாமிரபரணி ஆறு உற்பத்தியாகும் மேற்குத்தொடர்ச்சி மலையில், நெல்லை மாவட்டப் பகுதியான பொதிகை மலையில், 1970-களுக்குப் பிறகு காடு அழிப்பு மிக மோசமாக நடைபெற்றதால், ஒரு கட்டத்தில் அந்த ஆறும் இதேபோல வறண்டுவிட்டது. ஆண்டு முழுக்க தண்ணீர் ஓடும் அந்த நதி, கோடைகாலத்தில் 4 மாதம் சுத்தமாக வறண்டு போகத் தொடங்கியது. இந்த நிலையில்தான் வனத் துறை ஏற்பாட்டில் 1980-ல் முண்டந்துறை புலிகள் சரணாலயம் உருவாக்கப்பட்டது. இதனால் காடு பாதுகாக்கப்பட்டதோடு, காட்டை நம்பியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மாற்று வாழ்வாதார ஏற்பாட்டுக்கு நிறைய நிதியும் ஒதுக்கப்பட்டது. விளைவாக 1990-க்குப் பிறகு தாமிரபரணி மீண்டும் வற்றாத ஜீவநதியாக மாறிவிட்டது” என்று அதற்கு வலுவான முன் உதாரணத்தையும் சொன்னது வனத் துறை.

2008-ல் தேனி வனக்கோட்டத்தை இரண்டாகப் பிரித்து, மேகமலை பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவித்த தமிழ்நாடு வனத் துறை, அதைப் புலிகள் சரணாலயமாக அறிவிக்கக் கோரி தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தியது. 2020 இறுதியில்தான் இதற்கான அனுமதி கிடைத்தது. அதைத் தொடர்ந்து, இந்தியாவின் 51-வது மற்றும் தமிழகத்தின் 5-வது புலிகள் சரணாலயமாக மேகமலையை அறிவித்து, கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. இதன் மூலம் 1 லட்சம் ஹெக்டர் நிலப்பரப்பு, 63 வகையான பாலூட்டிகள், 323 பறவையினங்கள் பாதுகாக்கப்படும் என்றது வனத் துறை. உண்மையில், அதையெல்லாம்விட முக்கியமாக வைகை காப்பாற்றப்படும் என்பதை வெளிப்படையாகச் சொல்லவில்லை அரசு.

ஆனால், அந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பாகவே இருக்கிறது. காரணம், வனத்துக்குள் இருக்கிற 25 ஆக்கிரமிப்பு கிராமங்களும் இதுவரையில் காலி செய்யப்படவில்லை. அதேபோல பல ஆயிரம் ஹெக்டேரில் சட்டவிரோதமாக காட்டை அழித்து நடந்துகொண்டிருக்கும் விவசாயமும் தடையின்றித் தொடர்கிறது. ஆங்காங்கே கல்குவாரிகளும் நடக்கின்றன. ‘வனம் என்பது புல், பூண்டு, மரம், புதர், செடி, கொடிகள் எல்லாம் சேர்ந்தது. ஆனால், விவசாயம் என்ற பெயரில் ஒரே தாவரத்தை ஏக்கர் கணக்கில் வளர்த்தால், அது பல்லுயிர்ச் சூழலுக்குப் பெரும் கேட்டை விளைவிக்கும்’ என்று மாதவ் காட்கில் கஸ்தூரி ரங்கன் அறிக்கை சொல்கிறது. ஆனால், அதைச் செயல்படுத்த தேனி மாவட்ட நிர்வாகம் தயங்குகிறது.

காரணம், ஆண்டிப்பட்டி தொகுதியின் உள்காட்டுப் பகுதி வாக்காளர்களில் இந்த ஆக்கிரமிப்பு விவசாயம், ஆக்கிரமிப்பு கிராமங்களைச் சேர்ந்தோரே அதிகம். அவர்களின் ஓட்டுதான் வெற்றிதோல்வியைத் தீர்மானிக்கும் என்பதால், எம்ஜிஆர் ஆட்சிக்காலம் தொடங்கி அந்தக் கிராம மக்களை மகிழ்விக்கும் வேலைகளையே நமது அரசியல்வாதிகள் செய்கிறார்கள். ஜெயலலிதா வென்ற இடைத்தேர்தலில் அது உச்சம் பெற்றது. பிறகு, தங்கதமிழ்ச்செல்வன் இந்த மக்களைச் செல்லப்பிள்ளை போல பார்த்துக்கொண்டார். இப்போது அந்தத் தொகுதி திமுக வசம், தங்கதமிழ்ச்செல்வனும் திமுகவில் இருக்கிறார். நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது மாவட்ட நிர்வாகம்.

இந்தச் சூழலில் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றவும் துரித நடவடிக்கை எடுக்கும்படி வனத் துறைக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்தது உயர் நீதிமன்றம். தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும் சட்டப்பேரவையில், இந்த ஆக்கிரமிப்பு பற்றிப் பேசினார். ஆனால், ஆக்கிரமிப்பு விவசாயிகள் கிளர்ந்தெழுந்தார்கள். அந்த ஒரு தாலுகா விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது உண்மைதான். ஆனால், ஒரு தாலுகா விவசாயிகள் ஆற்றின் ஊற்றுக்கண்ணைக் கெடுப்பதால் 5 மாவட்ட விவசாயிகள் எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அரசாங்கமும், மாவட்ட நிர்வாகங்களும், அரசியல்வாதிகளும் சிந்திக்க வேண்டும். ஓட்டுக்காக எதையும் விட்டுக்கொடுப்பார்கள் என்றால், 5 மாவட்ட வாக்காளர்களும் விழிப்புணர்வு பெற்றால், அது அரசுக்குப் பெருந்தொந்தரவாக மாறும் என்பதையும் உணர வேண்டும்.

காடு என்பது ஒரு கிராமத்துக்கோ, ஒரு தாலுகாவுக்கோ, ஒரு மாவட்டத்துக்கோ, ஒரு நாட்டுக்கோ, ஒரு கண்டத்துக்கோ சொந்தமானதல்ல. ஒட்டுமொத்த உலகிலுள்ள உயிர்களுக்கெல்லாம் சொந்தமானது என்று உலக நாடுகளின் ஒப்புதலுடன் ஐக்கிய நாடுகள் சபையே தீர்மானம் போட்டிருக்கிறது. வனம் எங்கு அழிந்தாலும் அந்தப் பகுதியை மட்டும் பாதிக்காது, ஒட்டுமொத்த பூமியையே பாதிக்கும் என்பதே சுற்றுச்சூழல் தத்துவம்.

மேகமலையை புலிகள் சரணாலயமாக மத்திய அரசு அறிவித்துவிட்டது. மாநில அரசும் அரசாணை பிறப்பித்துவிட்டது. வனச்சட்டமும் தெளிவாக இருக்கிறது. உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுவிட்டது. இதற்குப் பிறகும் அதை அமல்படுத்தவில்லை என்றால், இங்கே நடப்பது சட்டத்தின் ஆட்சியா என்ற கேள்வி எழவே செய்யும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE