வைகை ஆற்றில் குளித்த தீயணைப்புத் துறை ஊழியர் நீரில் மூழ்கி மரணம்

By என்.கணேஷ்ராஜ்

ஆண்டிபட்டி: வைகை அணை அருகே உள்ள தடுப்பணையில் நேற்று நண்பர்களுடன் குளித்த சென்னை தீயணைப்புத் துறை ஓட்டுநர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரின் உடலை மீட்க முடியாததால் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று காலை அவரது உடல் மீட்கப்பட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நாடார் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (33). சென்னை தாம்பரம் தீயணைப்புதுறையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சொந்த ஊரில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்காக இரண்டு நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் ஆண்டிபட்டிக்கு வந்திருந்தார்.

நேற்று மதியம் சதீஷ்குமார் தனது நண்பர்களுடன் வைகை அணை அருகே ஆற்றில் குளிக்கச் சென்றார். அணையில் இருந்து வெளியேறும் நீர் பிக்அப் அணை எனும் இடத்தில் கால்வாய், ஆறு என்று இரண்டு பகுதிகளாக பிரிந்து செல்லும். இதற்காக இங்கு பெரிய அளவிலான தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

அங்கு சதீஷ்குமார் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். தற்போது சிவகங்கை மாவட்டத்துக்காக வைகை அணையில் இருந்து கூடுதல் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதை அறியாது ஆற்றில் குளித்த சதீஷ்குமார் எதிர்பாராதவிதமாக நீரில் இழுத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து அவரது நண்பர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டு சதீஷ்குமாரைத் தேடும் பணி நடைபெற்றது. ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு, பெரியகுளம் ஆகிய இடங்களில் இருந்து மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்த இருபதுக்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் நேற்று மாலை வரை தேடியும் சதீஷ்குமாரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், இன்று (வெள்ளி) காலையிலிருந்து இரண்டாவது நாளாக தீவிரமாக தேடும் பணி நடைபெற்றது.

அப்போது, ஆற்றில் சதீஷ்குமார் குளித்த இடத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவில் கருங்கற்களுக்கு இடையில் அவரது உடல் சிக்கி இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து உடலை மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக வைகை அணை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இறந்த சதீஷ்குமாருக்கு ராஜேஸ்வரி (33) என்ற மனைவியும், ராஜமித்திரன் (6), கவீந்திரன் (3) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.

சம்பவம் குறித்து நீர்வளத்துறையினர் கூறுகையில், “வைகை அணையில் தண்ணீர் திறப்பது குறித்து தொடர்ந்து எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. நீரோட்டம் அமைதியாக இருப்பது போல தோன்றினாலும், ஆழம், சுழி, பாறைகள், சேறு உள்ளிட்ட ஆபத்துக்கள் அதில் உள்ளன. ஆகவே நீரோட்ட காலங்களில் ஆற்றில் இறங்குவதைத் தவிர்க்க வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE