செய்தியாளர் சந்திப்பா... வாய்ப்பில்லை ராஜா!

By கே.கே.மகேஷ்

ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், ஆன்மிகவாதிகள், தொழில் நிறுவனத்தினர் போன்றோர் தங்களுடைய கருத்துகளை ஊடகங்கள் வழியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகச் செய்தியாளர் சந்திப்பு நடத்துவது வழக்கம். மற்றவர்கள் செய்தியாளர்களை அணுகுவதற்கும் மக்கள் பிரதிநிதிகள் அணுகுவதற்கும் ரொம்பவே வித்தியாசம் உண்டு. உதாரணமாக ஒரு நடிகரோ, தொழிலதிபரோ செய்தியாளர்களைச் சந்திக்க விரும்பவில்லை என்று தாராளமாகச் சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால், மக்கள் பிரதிநிதிகள் அப்படித் தப்பித்துக்கொள்ள முடியாது, கூடாது. ஜனநாயக நாட்டில் வாக்களித்த மக்களுக்கு அவர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

நம் நாட்டில் தலைசிறந்த ஜனநாயகவாதிகளாகப் போற்றப்படும் தலைவர்கள் எல்லோருமே, அடிக்கடி பத்திரிகையாளர்களைச் சந்தித்தவர்கள்தான். ஒவ்வொரு சந்திப்பிலும் சங்கடம் தரும் கேள்விகள் கேட்கப்படத்தான் செய்யும் என்றாலும், தன்னுடைய அமைச்சரவையில் இருப்பவர்களும், அதிகாரிகளும் மறைத்த விஷயத்தைச் செய்தியாளர்கள் மூலம் தெரிந்துகொள்ளும் நல்வாய்ப்பாகவே இதை அந்தத் தலைவர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள்.

முடியாட்சியின் மன்னர்களா?

மக்களிடம் கெஞ்சிக் கூத்தாடி வாக்குகளைப் பெற்று, ஆட்சி அதிகாரத்தில் அமரும் சிலரோ, அரியணையில் அமர்ந்ததும் தங்களை முடியாட்சியின் மன்னர்களாகவே கருதிக்கொள்கிறார்கள். கூடவே, தங்கள் பேச்சாற்றல், பொறுமை மீது இவர்களுக்கே சந்தேகமும் இருக்கிறது. விளைவாக, தங்களை விமர்சிப்பதையும், குறுக்குக் கேள்விகள் கேட்பவர்களையும் வெறுக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இவர்களை நாம் ஏன் சந்திக்க வேண்டும், இவர்களுக்காக எதற்கு நேரத்தை வீணாக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடுகிறது.

அதற்குப் பதிலாக ஆள்வைத்து எழுதிய அறிக்கைகளை வெளியிடுவது, எழுதிக்கொடுத்த உரையை வாசிப்பது போன்றவற்றையே தங்கள் ஊடகத் தொடர்பாக அவர்கள் மாற்றிவிடுகிறார்கள். ஆட்சியாளர்களுக்கும் செய்தியாளர்களுக்குமான உறவு இப்போது பெரும்பாலும் இப்படி ஒருவழிப் பாதையாகத்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா தொடங்கிவைத்த கலாச்சாரம் இது. பிரதமர் நரேந்திர மோடி இன்னும் மோசம். பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரியாகத் திட்டமிடாமல் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை மைல் கணக்கில் சாலையில் நடக்கவிட்ட ஊரடங்கு அறிவிப்பு, பெட்ரோல் கியாஸ் விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம், பொதுத் துறை நிறுவனங்கள் தனியார் மயம், சீனாவுடன் போர் மூளும் சூழல் என்று மிகமிக முக்கிய பிரச்சினைகள் ஏற்படும் தருணங்களிலும் பத்திரிகையாளர்களை அவர் சந்தித்ததே இல்லை.

ஜெ... ஓபிஎஸ்... ஈபிஎஸ்!

தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஜெயலலிதாவுக்குப் பிறகு, ஓர் அரசியல் மாற்றம் ஏற்படுவதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. முதல்வராகப் பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம் எந்த பந்தாவும் இல்லாமல், பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அடுத்து முதல்வரான பழனிசாமியும், எந்த ஊருக்குச் சென்றாலும் நேரம் வாய்த்தால் உள்ளூர்ப் பத்திரிகையாளர்களுடன் உரையாடினார். ஒருவகையில், தன்னை ஓர் ஆளுமையாக நிலைநிறுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாகவே அதைப் பார்த்தார்.

ஆனால், தமிழகத்தில் மிக அதிகமான பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தியவரும் பத்திரிகையாளர்களுடன் நெருங்கிப் பழகியவருமான கருணாநிதியின் மகனான மு.க.ஸ்டாலின், இவ்விஷயத்தில் ஜெயலலிதா, மோடி ஆகியோரின் பாணியைக் கடைப்பிடிக்கத் தொடங்கியிருப்பதுதான் வரலாற்று முரண். எதிர்க்கட்சியாக இருந்தபோது அடிக்கடி செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முதல்வரான பிறகு மொத்தமே நான்கைந்து முறைதான் பத்திரிகையாளர்களைச் சந்தித்திருக்கிறார். பழனிசாமியுடன் ஒப்பிட்டால், சென்னையிலும் சரி, சென்னைக்கு வெளியிலும் சரி இவர் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதும் அரிதாகவே இருக்கிறது.

மைக் நீட்டும் கத்துக்குட்டிகள்

செய்தியாளர்கள் பக்கமும் குறை இருப்பதை மறுக்க முடியாது. பேட்டி கொடுக்கும் தலைவர் யார், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதுகூட தெரியாமல் கேள்வி கேட்கிற கத்துக்குட்டிகளும் இன்று டி.வி செய்தியாளர் என்ற பெயரில் மைக் நீட்டுகிறார்கள். பேட்டி முடிந்தவுடன் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியனிடம், "உங்க பேரைச் சொல்லுங்க சார்..." என்று கேட்ட பெண் ஊடகவியலாளர், இசைஞானி இளையராஜாவிடம் சிம்புவின் ‘பீப் சாங்’ பற்றிக் கேள்வியெழுப்பிய இளம் செய்தியாளர் போன்ற சம்பவங்கள் எல்லாம் உதாரணங்கள்.

அப்படியே இருந்தாலும், இதுபோன்ற புரிதலற்ற கேள்விகளைத் தவிர்க்கவே பத்திரிகையாளர் சந்திப்பையே சில தலைவர்கள் தவிர்க்கிறார்கள் என்று சொல்வதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை.

அரசியல் அரங்கில் மட்டுமல்லாமல் வீட்டிலும்கூட தம்மைப் பற்றிய துதிகளையே கேட்டுப் பழகியவர்கள், பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ள விரும்புவதில்லை. ஜெயலலிதாவாவது தன்னை சர்வாதிகாரியாகவும், சகிப்புத்தன்மையற்றவருமாகவே வெளிப்படுத்தி வந்திருக்கிறார். ஸ்டாலின், அப்படிப்பட்டவராகத் தன்னை எந்த இடத்திலும் காட்டிக்கொண்டதில்லை. ஆனால், ஆட்சி மாறியதும் அவரது செயல்பாடு, ஜெயலலிதா, மோடி பாணியில் இருப்பதாகவே பத்திரிகையாளர்கள் சிலர் விமர்சிக்கிறார்கள்.

விஜயகாந்த் பாணி...

ஸ்டாலின் என்றில்லை, தமிழ்நாட்டின் எல்லாத் தலைவர்களுமே இப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஜெயலலிதா ஆகிக்கொண்டிருக்கிறார்கள். இல்லை என்றால் விஜயகாந்தாகிவிடுகிறார்கள். அதாவது, யார் என்ன கேள்வி கேட்டாலும், “நீங்க எந்த டி.வி?”, “எந்தப் பத்திரிகை?”, “எதிர்க்கட்சி டி.வி-யா? ” என்று கேட்டு, “உங்க முதலாளி மட்டும் யோக்கியமா?” அந்தச் செய்தியாளரைத் தனிப்பட்ட முறையில் கேவலப்படுத்தும் வேலையைச் சிலர் செய்கிறார்கள். குறிப்பாக எச்.ராஜா, அண்ணாமலை போன்ற பாஜக தலைவர்களே இதை அதிகம் செய்கிறார்கள்.

இதுபற்றி அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் வைகைச்செல்வனிடம் கேட்டபோது, ”பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்குவந்த ஸ்டாலின், இப்போது அவற்றை நிறைவேற்ற முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார். சில அமைச்சர்களும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்கள். இதுபற்றி எல்லாம் எங்கே பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டுவிடுவார்களோ, அப்படிக் கேட்டால் அதை எப்படி எதிர்கொள்வது என்று நினைத்தே அவர் பத்திரிகையாளர் சந்திப்பைத் தவிர்க்கிறார். இது ஜனநாயகத்துக்கு அழகல்ல” என்றார்.

மோடி வழியில்...

”எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஆளும் அதிமுக, பாஜக அரசுகள்மீது அவதூறுகளை அள்ளிவீசி, குற்றச்சாட்டுக்களை மனம்போல அள்ளிவிட்டு ஆளுங்கட்சியினரை இக்கட்டில் மாட்டிவிடும் நோக்கில், பத்திரிகையாளர் சந்திப்பு என்ற பெயரில் நிறைய பேசினார் மு.க.ஸ்டாலின். காரணம், எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்கிற துடிப்பு அப்போது அவரிடம் இருந்தது. ஆனால் இப்போது, பத்திரிகையாளர்களிடம் வாய்திறந்தால் ஏதாவது தேவையில்லாத சர்ச்சையில் மாட்டிவிடுவோமோ என்கிற அச்சம் அவரிடம் இருப்பதுபோல் தெரிகிறது” என்கிறார், பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

”இந்த விஷயத்தில் மோடியை அப்படியே பின்பற்றுகிறார் ஸ்டாலின் என்று சொல்லலாமா?” என்று கேட்டபோது, ”எதிர்க்கட்சியாக இருந்தபோது அடிக்கடி பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஸ்டாலின் ஆளுங்கட்சியானதும் அதைத் தவிர்க்கிறார் என்பதுதான் குற்றச்சாட்டு. ஆனால், மோடி அப்படியில்லையே? எதிர்க்கட்சியாக இருந்தபோது எப்படியிருந்தாரோ அப்படித்தானே ஆளுங்கட்சியானபோதும் இருக்கிறார்? ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததும் மாற்றம் ஸ்டாலினிடம்தான் வந்திருக்கிறது” என்றார் நாராயணன்.

திமுகவினர் என்ன சொல்கிறார்கள்?

”போயும் போயும் மோடி, ஜெயலலிதாவுடன் ஸ்டாலினை ஒப்பிடுகிறீர்களே? உங்கள் கருத்துப்படியே பார்த்தால்கூட, பதவியேற்ற 4 மாதத்திற்குள் நான்கைந்து முறை பத்திரிகையாளர்களைச் சந்தித்துவிட்டார் ஸ்டாலின். அதுவும் கரோனா காலத்தில். ஆனால், தொடர்ந்து 6 ஆண்டுகளாக முதல்வராக இருந்த ஜெயலலிதாவும், 7-வது ஆண்டாகப் பிரதமராகத் தொடர்கிற மோடியும் ஒருமுறை கூட பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லையே? தமிழ்நாட்டின் மூலைமுடுக்கில் இருந்து வருகிற எந்த அமைப்பினராக இருந்தாலும் சந்திக்க நேரம் ஒதுக்குகிறார் முதல்வர். ஆனால், ஜெயலலிதாவை அமைச்சர்களே சந்திக்க முடியாத நிலை இருந்தது. மோடியோ தமிழக முதல்வராக இருந்த ஓபிஎஸ்ஸுக்கே நேரம் ஒதுக்கவில்லையே?” என்கிறார்கள் திமுகவினர்.

கட்சிக்காரர்கள் அப்படித்தான் பேசுவார்கள். இவ்விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தினால்தான் பத்திரிகையாளர்களைத் தவிர்ப்பதில் மோடி, ஜெயலலிதா ஆகியோருக்கு நண்பராகிவிடும் நிலையைத் தவிர்க்க முடியும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE