பிரியங்காவின் புதிய புறப்பாடு!

By எஸ்.எஸ்.லெனின்

தொய்வடைந்திருந்த காங்கிரஸ் கட்சியினர், கடந்த சில நாட்களாக நிமிர்ந்து உட்கார்ந்துள்ளனர். புயலென பிரியங்கா காந்தி செயல்படும் விதமும் அவரை முன்னிறுத்தும் அரசியல் களங்களும் மூச்சுத் திணறும் காங்கிரஸ் கட்சிக்கு, ஆக்சிஜன் தரும் என்று நம்புகிறார்கள். காட்சிகள் அரங்கேறுவது உத்தர பிரதேசத்தில் என்றபோதும், நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது பிரியங்கா காந்தியின் புதிய புறப்பாடு!

காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம்

தலையின்றி தடுமாறும் கட்சி

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, “நானே கட்சியின் முழு நேரத் தலைவர்” என்றார் பரிதாபமாக. கட்சிக்குத் துடிப்பான தலைமை வேண்டும் என்று அழுத்தமாகக் கோரிவரும் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு, இந்தப் பதில் நிச்சயம் திருப்தி தந்திருக்காது. அசுர பலத்துடன் ஆட்சிக்கட்டிலில் வீற்றிருக்கும் பாஜகவுக்கு எதிராகக் களமாட, தீர்க்கமான தலைமை வேண்டும் என்றுதான் காங்கிரஸ்காரர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால், தலைவர்களுக்குப் பஞ்சமில்லாத கட்சியில், மக்களை வசீகரிக்கும் தலைமையைத் தர ஆளில்லை. கடைசியில் ‘காந்தி’ குடும்பத்தை விட்டால், அவர்களுக்கு வேறு கதியும் இல்லை.

அந்த வகையில் ராகுல் விட்டுச்சென்ற இடத்தில் அவரது தங்கை பிரியங்காவைப் பரிசீலிக்க, காங்கிரஸ் ஏற்கெனவே தயாராகிவிட்டது. தலையின்றி தடுமாறும் கட்சிக்குப் பிரியங்கா தலைமை ஏற்பாரா, 2024 மக்களவைத் தேர்தலில் முழுமூச்சாகக் களமிறங்கும் திடம் அவருக்கு வாய்க்குமா என்ற கேள்விகளுக்கான பதில், நெருங்கும் 2022 உத்தர பிரதேசத் தேர்தல் முடிவில் காத்திருக்கிறது. அதற்கான அடித்தளப் பணிகளில் கடந்த 2 வருடமாகத் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் பிரியங்காவுக்கு தனக்கான அரசியல் பாதை, மக்கள் செல்வாக்கு ஆகியவற்றை அறிந்துகொள்ளவும் இந்தத் தேர்தல் உதவக் காத்திருக்கிறது.

உ.பி போராட்டக் களமொன்றில் உடன்பிறப்புகள்...
அடுத்த மக்களவைத் தேர்தலில் தங்கையை முன்னிறுத்தி அண்ணன் வலம் வருவதற்கான வாய்ப்புகள் தெரிகின்றன. நெருங்கும் உ.பி சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகளே இதையும் இறுதி செய்யும்.

உடன்பிறப்புகளின் உ.பி புரிதல்

அண்ணன் ராகுலைவிட அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவர் தங்கை பிரியங்கா காந்தி. தாய் மற்றும் அண்ணனின் தொகுதிகளில் மட்டும் பிரச்சாரத்துக்கு தலைகாட்டிவந்த பிரியங்காவை இந்திராவின் பிம்பமாகவே தரிசித்து நெக்குருகும் காங்கிரஸார் உண்டு. அரசியலிலிருந்து தன்னைச் சுருக்கிக்கொண்டதில் அவரது தனிப்பட்ட மற்றும் புக்ககத்துக் காரணங்கள் அதிகமிருந்தன. ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலில் அதை மாற்றிக்கொண்டார். மோடிக்கு எதிராக ராகுல் காந்தியை முன்னிறுத்திய அந்தத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் முழுக் கவனம் செலுத்தினார். கிழக்கு உ.பி பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டபோதும் மாநிலம் முழுக்க வலம் வந்தார்.

தேர்தலின் முடிவில் மக்கள் தீர்ப்பு வேறானதில் ராகுல் தலைமை பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள, சுக்கான் இல்லாத கப்பலானது காங்கிரஸ் கட்சி. மூழ்கிக்கொண்டிருக்கும் கட்சியை கரைசேர்க்க 2024 மக்களவைத் தேர்தலைக் கடைசி வாய்ப்பாக நம்புகிறார்கள். ஊடக பலத்துடன் ‘பப்பு’ எனும் பிம்பத்தை ராகுல் மீது கட்டமைக்க முடிந்த பாஜகவினரால், பிரியங்காவின் அதிரடிகளை அப்படி சுலபமாக ஒதுக்க முடியவில்லை. அதற்கு உ.பியில் தற்போது அரங்கேறி வரும் அரசியல் களேபரங்களே சாட்சி. கடந்த மக்களவைத் தேர்தலில் அண்ணனுக்கு சாரதியாய் வலம் வந்தார் தங்கை. அடுத்த மக்களவைத் தேர்தலில் தங்கையை முன்னிறுத்தி அண்ணன் வலம் வருவதற்கான வாய்ப்புகள் தெரிகின்றன. நெருங்கும் உ.பி சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகளே இதையும் இறுதி செய்யும்.

பிரியங்கா

அடுத்தடுத்த அதிரடிகள்

லக்கிம்பூர் கெரி விவசாயிகள் படுகொலை நிகழ்ந்த தினத்தன்று அடுத்த விமானம் பிடித்து, பிரச்சினைக்குரிய நள்ளிரவில் அந்தப் பகுதியை நெருங்கினார் பிரியங்கா. அவர் கைதானதும், வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதும், அங்கே அறையைப் பெருக்கியதும் , உண்ணாவிரதம் இருந்ததுமாக... பிரியங்காவின் ஒவ்வொரு நகர்வும் பெரிய அளவில் பேசுபொருளானது. உத்தர பிரதேசத்தின் அன்றாட அவலங்களில் ஒன்றாக முடிந்திருக்கக்கூடிய லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை விவகாரம், பிரியங்காவின் தலையீட்டில் பெரிதாக வெடித்தது. அது உச்ச நீதிமன்றம்வரை சர்ச்சையானதன் பின்னணியில், பிரியங்காவின் களமாடலும் அடங்கும். பிரியங்காவை மறிப்பது இன்னும் பிரச்சினையை வலுக்கச்செய்யும் என்று மாநில அரசு அதன் பின்னர் ஒதுங்கிக்கொண்டது. லக்கிம்பூர் உட்பட பிரியங்காவின் போராட்டங்கள் பலவும் தனியாவர்த்தனமாய் செல்வதும், அவற்றில் ராகுல் தாமதமாகக் கலந்துகொள்வதும் ஊன்றி கவனித்தால் மட்டுமே தட்டுப்படும்.

லக்கிம்பூர் சம்பவத்தைக் கண்டித்து லக்னோவில் தர்ணாவில் ஈடுபடும் பிரியங்கா

பூஜ்ஜியத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு!

இந்தியாவின் மிகப்பெரும் மாநிலமான உ.பி, அதிக எண்ணிக்கையிலான எம்எல்ஏ-க்கள்(403), எம்பி-க்கள் (மக்களவை-80, மாநிலங்களவை-31) கொண்டது. காங்கிரஸ் அங்கே அரியணை இழந்து 37 ஆண்டுகளாகப் போகிறது. இந்தப் பின்னணியில் 2019 மக்களவைத் தேர்தலில் தொடங்கி, 2 வருடங்களாகப் பிரியங்கா தலைமையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பூர்வாங்கப் பணிகள் தொடர்ந்து வருகின்றன. பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த அஜய் குமார் லாலுவை மாநிலத் தலைவராக்கியதில் தொடங்கி, செயற்குழு உறுப்பினர்களில் இள ரத்தம் பாய்ச்சியதுவரை பல நிர்வாகக் களையெடுப்புகளை நிகழ்த்தினார் பிரியங்கா. அண்மையில், உபி காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெண்களுக்கு 40 சதவீத ஒதுக்கீடு அறிவித்தும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். சில தினங்களுக்கு முன்னரான உ.பி பத்திரிக்கையாளர் சந்திப்பில், ’தான் வேட்பாளராக களமிறங்கப் போவதையும், உத்தர பிரதேசத்தின் அடுத்த முதல்வர் ஒரு பெண்ணாக இருக்கலாம்’ என்பதையும் கோடிட்டுக் காட்டினார்.

ஆனால், உத்தர பிரதேசத்தில் அரியணையைப் பிடிப்பது அத்தனை எளிதல்ல என்பதைப் பிரியங்காவும் உணர்ந்திருப்பார். 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதியுடனான கூட்டணியில் காங்கிரஸ் களமிறங்கியது. அந்தத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றியடைய, எதிர்க்கட்சி வரிசையிலும் கடைசி இடமே காங்கிரஸுக்குக் கிடைத்தது. ஆனபோதும் 50-க்கும் மேலான இடங்களில் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி இழந்திருந்தது காங்கிரஸ். இத்துடன் வெற்றிவாய்ப்புள்ளதாக 70 கூடுதல் இடங்களையும் குறிவைத்திருக்கிறார்கள். உ.பி-யில் ’காங்கிரஸ் பூஜ்ஜியத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு குறிவைப்ப’தாக பாஜகவினர் எள்ளி நகையாடுகின்றனர். கடந்த தேர்தலோடு சமாஜ்வாதி கூட்டணியை முறித்துக்கொண்டதில், தனித்து நிற்கும் அமில சோதனைக்கும் காங்கிரஸ் தயார்.

காசி விஸ்வநாதர் கோயிலில் பிரியங்கா

அதிசயங்கள் நிறைந்த அரசியல்

பெருவாரி வெற்றியைவிட சோர்ந்திருக்கும் கட்சிக்குத் தெம்பளிக்கும் கணிசமான வெற்றியே போதுமென்றிருக்கும் காங்கிரஸார், பிரியங்காவின் புறப்பாடு அதையும் மீறி சாதிக்கும் என்ற நப்பாசையிலும் இருக்கிறார்கள். அதற்கேற்ப தனது பிரச்சார செயல்பாடுகளை மோடியின் கோட்டையான வாராணசி பேரணியில் அண்மையில் தொடங்கினார் பிரியங்கா. அங்கே பாஜகவின் அடியை உலுக்கும் விதத்தில் மாறியிருந்தார். காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபட்ட கையோடு மேடையேறியவர் நெற்றிகொள்ளாத திலகங்கள் துலங்க துர்க்கை வழிபாட்டில் பேச்சை ஆரம்பித்தார். சிறுபான்மையினர், பட்டியலினச் சமூகத்தினர் மட்டுமன்றி பெருவாரி இந்துக்களின் ஓட்டுகளையும் குறிவைக்கும் பிரியங்காவின் புதிய போக்கை பாஜக கவலையுடன் கவனிக்கிறது. மோடியின் சரியும் பிம்பம், உ.பி-யில் ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி அலை, அடக்கி வாசிக்கும் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கட்சிகள் என காங்கிரஸுக்கு அனுகூலமான அம்சங்களுக்கும் அங்கே குறைவில்லை.

அரசியல் என்பது எதிர்பாரா அதிசயங்கள் நிறைந்தது. நிதானமாக முன்னேறும் பிரியங்காவின் எதிர்பார்ப்பு, இப்போதைக்கு கட்சியை மீட்டெடுப்பதிலேயே இருக்கிறது. பாஜகவின் போக்கைப் பொறுத்தும், மக்களின் வரவேற்பைப் பொறுத்தும் அது ஆட்சி மாற்றம் வரை நீளக்கூடும். அப்படியான அதிசயம் நிகழ்ந்தால், நிச்சயம் காங்கிரஸ் புத்துயிர் பெறும்; 2024 மக்களவைத் தேர்தலில் முழுமூச்சாய் இறங்குவதற்கான பலமும் பெறும். கூடவே தலைமைப் பொறுப்புக்குப் பிரியங்கா தகுதியானவரா என்பதும் தெளிவாகிவிடும். அதற்கு, முதலில் அந்த அதிசயம் நடந்தாக வேண்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE