வாங்கினத திருப்பிக் குடுக்கலைன்னா கோயில்ல முட்டை மந்திரிச்சு வெச்சிருவோம்!

By எஸ்.நீலவண்ணன்

“பணத்தைப் போடாதவன் ரத்தம் கக்கிச் சாவான்” என்ற வடிவேல் பட காமெடிக்கு நிகராக, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு கிராமப் பஞ்சாயத்தில் சூப்பர் காமெடி காட்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

விஷயம் இதுதான்... சிரிக்காம படிங்க. செஞ்சி தொகுதிக்குள் வரும் அந்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு, மொத்தம் 3 பேர் போட்டியிட்டார்கள். இதில் ஒருவர் பணம் காசு செலவழிக்க வழியில்லாததால் ரேஸில் ரொப்பவே பின்தங்கிப் போனார். மற்ற இருவருக்கும் இடையில் போட்டி ‘பலமாக’ இருந்தது. ஒருவர் ஒரு ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் (அது என்ன கணக்கோ!) கொடுத்துவிட்டு, காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டார். இதைப் பார்த்துவிட்டு அடுத்தவர்ரூ. 8 ஆயிரத்து 10 (8 ராசியான எண் இல்லையாம்... அதனால் 10 ரூபாயை டிப்ஸாகச் சேர்த்துக் கொண்டாராம்!) எடுத்துவிட்டார். சில பகுதிகளில், கூடுதலாக ஒரு கிராம் மூக்குத்தியும் கொடுத்து பளிச்சிட்டார் இந்தப் பார்ட்டி.

நியாயமாய்(!) பார்த்தால் 8 பார்ட்டிதான் ஜெயித்திருக்க வேண்டும். அதுதான் ஒலக வழக்கம். ஆனால், 8 பார்ட்டியை ஓவர் டேக் செய்த 6 தந்த அண்ணாச்சி, 51 வாக்குகள் வித்தியாசத்தில் ஊராட்சி மன்றத் தலைவராகி விட்டார். சும்மா இருக்குமா 8? ‘கொடுத்த பணத்தையும் மூக்குத்தியையும் மரியாதையாய் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்’ என்று வீடு வீடாய் போய் கதவைத் தட்ட ஆரம்பித்துவிட்டார்கள் 8 பார்ட்டியின் ஏவல் தம்பிகள். ஆனால், மொத்தம் சுமார் 1,300 பேருக்கு பட்டுவாடா செய்திருந்த நிலையில், 60 பேர் மட்டுமே வாங்கியதைத் திருப்பிக் கொடுத்தார்களாம். மற்றவர்கள், “வாங்கின மூக்குத்திக்கும் , காசுக்கும் உங்களுக்குத்தான் ஓட்டுப் போட்டாச்சுல்ல... அப்புறமென்ன?” என்று சத்தாய்க்க ஆரம்பித்து விட்டார்களாம். அதுவும் நியாயம்தானே... என வாய்மூடி திரும்பிய அண்ணனின் விழுதுகள், அங்கே போய் விஷயத்தைச் சொல்லி இருக்கிறார்கள். இதைக்கேட்டு டென்ஷன் ஆன 8 பார்ட்டி கையில் இருந்த கிளாஸை தூக்கி அடித்திருக்கிறார். அதற்கு மேல் அங்கே நிற்கமுடியாமல் யு-டர்ன் அடித்த விழுதுகள் இப்போது, “மரியாதையா... வாங்கின காசையும் மூக்குத்தியையும் திருப்பிக் குடுக்கலைன்னா எல்லைச்சாமி கோயில்ல முட்டைய மந்திரிச்சு வைக்கிறத தவிர எங்களுக்கு வேற வழியில்ல. அப்புறம் ஐயான்னாலும் வராது அப்பான்னாலும் வராது பாத்துக்குங்க” என்று ‘வாங்கிய’ வாக்காளர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறார்களாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE