சமூகநீதி மாநிலத்தின் மைல்கல்: ஆதிதிராவிடர்- பழங்குடியினர் ஆணையம்

By சி. லக்ஷ்மணன்

ஆதிதிராவிட, பழங்குடியின மக்களின் சமூகம், கல்வி, பொருளாதாரம், பண்பாட்டைப் பாதுகாக்க இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல ஆணையம் நிறுவப்பட்டுள்ளது. தமிழக அரசு சட்டரீதியாக இந்த மாநில ஆணையத்தை அக்டோபர் 15 அன்று நிறுவியது.

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஆணையத்தை அமைக்கக் கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பிற அமைப்புகள் 20 ஆண்டுகால நீண்ட போராட்டம் நடத்தியுள்ளன. அதன் மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூகங்களுக்கு அதிகாரமளிக்க வேண்டியதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்த திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் மாநில அவசரச் சட்டத்தின் அடிப்படையில், இவ்வாணையத்தை முதல்முறையாகத் தமிழகத்தில் நிறுவியுள்ளது.

அரசியல் சாசனத்தின் 338-வது சரத்து அடிப்படையிலான ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான தேசிய ஆணையமானது மனித உரிமைகளுக்கும் மகளிருக்கும் குழந்தைகளுக்கும் அமைக்கப்பட்ட ஆணையங்களைப் போன்றதாகும். இவ்வாணையம் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செயல்படுத்தும் போக்கை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்வதோடு ஆதிதிராவிடர், பழங்குடியினரின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி நிலையையும் ஆவணப்படுத்தும். நாட்டின் 11 மாநிலங்களில் ஆதிதிராவிட, பழங்குடியின மக்களுக்கான மாநில ஆணையம் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் ஆதிதிராவிடருக்கும் பழங்குடியினருக்கும் தனித்தனியாக இரு ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் சட்டபூர்வ ஆணையமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆணையம் வந்த பாதை!

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்காக அமைக்கப்பட்ட தேசிய, மாநில ஆணையங்களுக்கு நீண்ட வரலாறு உண்டு. பிரித்தானிய ஏகாதிபத்தியக் காலத்தில், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் எதார்த்த நிலையை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஆராய்ந்து அரசுக்கு அறிக்கையாகச் சமர்ப்பித்தனர். இவை அக்கால சென்னை மாகாணப் பேரவையிலும் விவாதிக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின் 1950-களில், நாடுமுழுவதும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களின் அவலநிலையைக் கணக்கெடுத்த தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் இளையபெருமாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது.

இம்மக்களின் நிலையைக் கண்டறிந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் சமர்ப்பிப்பது கட்டாயமாகும். 1990-களில் பாபாசாஹேப் அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவானது, ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தை உறுதியான அதிகாரத்தோடு நிறுவுவதில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், ஒன்றியத்தின் கூட்டணி அரசியல் ஆணையத்தின் செயல்பாட்டை நீர்த்துப்போகச் செய்தது.

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஆணையத்தை அமைக்கக் கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பிற அமைப்புகள் 20 ஆண்டுக்கால நீண்ட போராட்டம் நடத்தியுள்ளன. அதன் மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூகங்களுக்கு அதிகாரமளிக்க வேண்டியதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்த திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் மாநில அவசரச் சட்டத்தின் அடிப்படையில், இவ்வாணையத்தை முதல்முறையாகத் தமிழகத்தில் நிறுவியுள்ளது.

பல சமூகங்களைச் சேர்ந்தோரிடம் தமிழக முதல்வர் சமீபத்தில் நிகழ்த்திய உயர்மட்ட ஆலோசனையில், ஆதிதிராவிடர் மக்கள் மேல் ஏவப்படும் தீண்டாமையும் படுகொலையும் மாநிலத்தின் முன்னேற்றத்துக்குத் தீங்கு விளைவிப்பதாக அழுத்தமாகப் பதிவுசெய்தார்.


ஆணையத்துக்குத் தலைவர், துணைத் தலைவர் உட்பட உறுப்பினர்கள் ஐவரை முதல்வர் நியமித்துள்ளார். நிச்சயமாக இது, சாதியக் கட்டமைப்பில் புறக்கணிக்கப்பட்ட மக்களை நோக்கிய முற்போக்கான நடவடிக்கை ஆகும். அரசாங்கத்தின் இச்செயல் மக்களின் பாராட்டுதலைப் பெறத் தகுதியுடையதாகும். ஆதிதிராவிட, பழங்குடியின மக்களின் நிலையை அறிய பல சமூகங்களைச் சேர்ந்தோரிடம் தமிழக முதல்வர் சமீபத்தில் நிகழ்த்திய உயர்மட்ட ஆலோசனையில், ஆதிதிராவிடர் மக்கள் மேல் ஏவப்படும் தீண்டாமையும் படுகொலையும் மாநிலத்தின் முன்னேற்றத்துக்குத் தீங்கு விளைவிப்பதாக அழுத்தமாகப் பதிவுசெய்தார். இப்பின்னணியில் இவ்வாணையம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உதவிபெறும் பள்ளி, கல்லூரிகளில் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்குக் கணிதம், அறிவியல் போன்ற முக்கியப் பாடப்பிரிவுகளில் இடம் மறுக்கப்படும் போக்கு பரவலாக இருக்கிறது.

அடுத்து செய்ய வேண்டியவை!

ஆணையத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பணிகளைச் செயல்படுத்தத் தலைமைச் செயலகத்தின் துணையுடன் அலுவலகக் கட்டிடம், அலுவலகப் பணியாளர்கள், உபகரணங்கள் உட்பட அவசியமான உள்கட்டமைப்பு வசதிகளை முதலில் செய்ய வேண்டும். அலுவலக செயல்பாட்டுக்கும் ஆணையக் குழு இயங்குவதற்கும் தேவைப்படும் போதுமான நிதியை அரசின் வரவுசெலவு கணக்கில் ஆண்டுதோறும் ஒதுக்க வேண்டும். ஆணையத்தின் சுய செயல்பாட்டுக்குச் சுதந்திரம் இருக்க வேண்டும். சமூகநீதிக்கான முன்னோடி மாநிலம் எனக் கூறப்படும் தமிழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான காலிப் பின்னடைவு பணியிடங்களின் எண்ணிக்கை நிரம்பி வழிகிறது.

நலக் கல்விக்கூடங்கள் நலம் பெறட்டும்!

அரசு நடத்துகின்ற ஆதிதிராவிட, பழங்குடியின பள்ளி, கல்லூரி, நலவிடுதிகளில் அடிப்படை வசதி, பாதுகாப்பு, சுகாதாரம் போன்றவை போதுமானதாக இல்லை. இது மாணவர்களின் கற்றல் ஆர்வத்துக்கு இடையூறாக இருக்கிறது. தமிழக அரசின் உதவிபெறும் பள்ளி, கல்லூரிகளில் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்குக் கணிதம், அறிவியல் போன்ற முக்கியப் பாடப்பிரிவுகளில் இடம் மறுக்கப்படும் போக்கு பரவலாக இருக்கிறது. இந்நிறுவனங்களில் ஆதிதிராவிட, பழங்குடியினருக்கான வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது அல்லது மிகக் குறைந்த எண்ணிக்கையில் பணி நியமனம் வழங்கப்படுகிறது. அரசின் நிறுவனங்களில் பதவி உயர்வும் அதிகாரமிக்கப் பதவியும் வழங்குவதில் முட்டுக்கட்டை போடப்படுகிறது.

பூர்வகுடிகளின் நிலமும் உரிமையும்!

இச்சமூக மக்களின் முன்னேற்றத்துக்கு ஒதுக்கப்படும் நிதி மடைமாற்றம் செய்யப்படுவதும் அல்லது திருப்பி அனுப்புவதும் நிகழ்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டம், சிங்காரச் சென்னை திட்டம் இன்னபிறவற்றின் பெயரால் ஆற்றங்கரையோரங்களிலும் பிற பகுதிகளிலும் வசிக்கின்ற சென்னையின் பூர்வகுடிகளான ஆதிதிராவிட, பழங்குடியினர் வெளியேற்றப்படுகின்றனர். அம்மக்களின் நில உரிமை உறுதிசெய்யப்பட வேண்டும்.

ஆணவக்கொலைகளுக்கு நீதி!

தமிழகத்தில்தான், சாதி ஆவணப் படுகொலைகள் பட்டப்பகலில் அரங்கேற்றப்பட்டு சாதிவெறியர்களால் கொண்டாடப்படுகின்றன. ஆதிதிராவிட, பழங்குடியின மக்கள் மீது ஏவப்பட்ட வன்முறைச் சம்பவங்களை ஆராய அதிக எண்ணிக்கையிலான விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டபோதிலும் வன்முறையாளர்கள் மேல் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொடர்பான வழக்குகளில் அளவுக்கதிகமான காலதாமதமும் மிகக் குறைந்த அளவிலும் நீதி வழங்குவதாக இருக்கின்ற புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாணையம் தீண்டாமை, ஆணவப் படுகொலை போன்றவற்றை ஒழிக்கப் பாடுபட வேண்டும். சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்கி விரைவாக நீதி வழங்க வேண்டும்.

ஆதிதிராவிட, பழங்குடியினச் சமூகங்களின் முன்னேற்றம் பொருளாதாரத்தோடும் அரசியல் அதிகாரத்தோடும் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறது.

அறிவுத் தளம் விரியட்டும்!

தமிழகத்தில் செயல்படுகின்ற கல்லூரி, பல்கலைக்கழகங்களின் சமூகவியல், அரசியல் அறிவியல், வரலாறு போன்ற முதுகலை, ஆய்வுத் துறைகளோடு இவ்வாணையம் இணைந்து இம்மக்களின் எதார்த்த நிலையைக் கண்டறிந்து அவர்களை முன்னேற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஆராய்ச்சி மேற்கொள்ளுதல், கருத்தரங்கம் நடத்துதல் போன்ற அறிவார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டு இம்மக்களின் குறைகளைப் போக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆதிதிராவிட, பழங்குடியினச் சமூகங்களின் முன்னேற்றம் பொருளாதாரத்தோடும் அரசியல் அதிகாரத்தோடும் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறது. அம்மக்கள் பொருளாதாரத்தில் தற்சார்பு அடைகிறபோது தீண்டாமையிலிருந்தும் பிற ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுபட ஏதுவாய் இருக்கும்.

ஆகவே, ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான சிறப்பு உட்கூறு திட்டத்துக்கும் அதை அமல்படுத்தவும் சட்டம் இயற்ற முயல வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையம் வழி தமிழக அரசு பல்லாண்டுகளாகத் தொடர்ந்து நீடிக்கின்ற இக்குறைகளைப் போக்க, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழகத்தின் சமூகநீதியை நோக்கிய பயணத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையம் நிச்சயமாக ஒரு மைல்கல்!

கட்டுரையாளர்: சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன (எம்ஐடிஎஸ்) பேராசிரியர், 'தீண்டாமைக்குள் தீண்டாமை: வாழ்வும் இருப்பும்' புத்தக துணை ஆசிரியர். தொடர்புக்கு: laxman@mids.ac.in

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE