மின்சார வாரியமா? மரம் வெட்டி வாரியமா?

By கே.கே.மகேஷ்

மாதந்தோறும் பல ஆயிரம் டன் பச்சை மரங்களை வெட்டி வீழ்த்தியவர்களுக்கென்று ஒரு விருது வழங்குவதாக இருந்தால், அந்த விருதைப் போட்டியின்றி பெறுவது தமிழ்நாடு மின்சார வாரியமாகத்தான் இருக்கும். மாதாந்திர பராமரிப்புப் பணிகள் என்ற பெயரில், ஒவ்வொரு பகுதியிலும் மின்தடையை ஏற்படுத்தி மின்வாரியத்தினர் செய்கிற வேலை பெரும்பாலும் மரத்தை வெட்டுவதுதான். மாநகர் பகுதிகளில் ஒவ்வொரு வாரமும் ஒரு வீதியில் மரங்களை வெட்டி மலைபோல் குவித்துக் கொண்டிருக்கிறார்கள் மின்வாரிய ஊழியர்கள்.

மின்வாரியம்

1957-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு மின்சார வாரியம் காலத்திற்கும், அறிவியல் வளர்ச்சிக்கும் ஏற்ப பல்வேறு மாற்றங்களைச் செய்துவந்திருக்கிறது. ஆரம்பக்காலத்தில் வலுவான தேக்கு மரங்களை மட்டுமே மின்கம்பமாக மின்வாரியம் பயன்படுத்தியது. பிறகு பழைய ரயில் தண்டவாளத்தையும் மின்கம்பமாகப் பயன்படுத்தத் தொடங்கியது. நாளடைவில் 'ஐ ஜாய்ஸ்' (இந்தக் கம்பியின் குறுக்கு வெட்டுத் தோற்றம் ஆங்கில எழுத்தான ஐ வடிவில் இருக்கும்) என்ற இரும்பு கம்பியையும், பிறகு குழாய் மின்கம்பத்தையும் (ட்யூப்லர்) பயன்படுத்தியது. தற்போது மின்கம்பமாக ஆர்.சி.சி. எனப்படும் சிமென்ட் 'கான்ங்கிரீட்' கம்பமும், ஆர்.எஸ்.ஜே. எனப்படும் ஐ ஜாய்ஸ் கம்பமுமே பயன்படுத்தப்படுகிறது.

அதேபோல ஆரம்பக்காலத்தில் செம்புக் கம்பி மூலமாக மின்சாரம் செலுத்தப்பட்டது. இன்றுள்ள கயிறு போல திரிக்கப்பட்ட ஐந்துக்கும் மேற்பட்ட அலுமினிய கம்பிகளாக இல்லாமல், அன்று ஒற்றை செம்புக் கம்பியே பயன்படுத்தப்பட்டது. ஒரு மின்கம்பத்துக்கும் இன்னொரு கம்பத்துக்கும் இடையிலான தூரமும் அதிகமிருந்தது. அடிக்கடி கம்பி அறுந்து விழுவதும், மின்தடை ஏற்படுவதும் சகஜமாக இருந்தாலும் செம்புக்கம்பிகளின் விலை உயர்வு காரணமாகவும், நாளடைவில் இன்றைய அலுமினிய கம்பி வட முறைக்கு மாறியது மின்சார வாரியம்.

வெட்டிய மரங்களை அப்புறப்படுத்தும் வெட்டி வேலையில் மாநகராட்சி...

புதைவழி மின் கம்பி

ஆனால், புதைவழி மின்கம்பி விஷயத்தில் மட்டும் மிகமிக பின்தங்கியிருக்கிறது தமிழ்நாடு மின்சார வாரியம். அயல்நாடுகளில் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமாகிவிட்ட இந்த புதைவழி மின்கம்பி திட்டமானது தமிழ்நாட்டில் அறிமுகமாகி 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. என்றாலும் அதை முழுவீச்சில் செயல்படுத்த தமிழ்நாடு மின்சார வாரியம் தயங்குகிறது. இதன் காரணமாகவே, அணில் விளையாட்டால், பறவைகளால், பசும் மரக்கிளைகளால் போன்ற காரணங்களால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. கூடவே மாதாந்திர பராமரிப்புப் பணி என்ற பெயரில் மிகப்பெரிய மனித உழைப்பும், அரைநாள் மின்வெட்டும் தேவைப்படுகிறது.

கிராமங்கள் முதல் நகரங்கள் வரையில் வீடு கட்ட, கட்டிட அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும்போது வீட்டருகே இரண்டு மரக்கன்றுகளையாவது நட்டுப் பராமரிக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அந்த விதிமுறையைப் பூர்த்தி செய்யும் வகையிலும், நிழல் மற்றும் நல்ல காற்றுக்காகவும் நிறைய பேர் வீட்டருகே மரங்களை நட்டுப் பராமரிக்கிறார்கள். ஆனால், 8 அடி வரையில் மட்டுமே அந்த மரங்களை வளர அனுமதிக்கிறார்கள் மின்சார வாரியத்தினர். அதற்கு மேல் வளர்ந்தால், மேலே செல்கிற மின்கம்பியில் மரக்கிளை உரசிவிடும் என்ற காரணத்தைச் சொல்லி, வெட்டி வீழ்த்துகிறார்கள். வெட்ட வெட்ட மரக்கிளை வளர்கிறது என்பதால், சில நேரங்களில் அடிமரத்தை வெட்டி வீழ்த்துவதும் நடக்கிறது. இவர்கள் ஒரு பக்கம் வெட்டி வீழ்த்த, இன்னொரு பக்கம் நகராட்சி, மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் அந்த மரக்கிளைகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் குப்பை வண்டிகளில் ஏற்றி அப்புறப்படுத்த வேண்டியதாகிறது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேவையற்ற வேலைப்பளு ஏற்படுகிறது. எனவே, இந்தக் குளறுபடிகளைத் தவிர்க்கப் புதைவழி மின்கம்பி திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருக்கிறது.

ஒடிஷா மாநிலத்தில் தரைவழி மின்கம்பி பதிக்கும் பணி

நன்மைகள்

புதைவழி மின்கம்பி திட்டத்தால், மரங்கள் பாதுகாக்கப்படுவது மட்டுமின்றி வேறுசில நன்மைகளும் இருக்கின்றன. காற்று, புயல், பெருமழையால் மின்கம்பிகள் அறுந்துவிழுவதும், அதனால் ஏற்படும் மின்தடையும் தவிர்க்கப்படுகிறது. மின்சாரம் விரயமாவதும், திருட்டுத்தனமாகப் பயன்படுத்தப்படுவதும் தடுக்கப்படுவதுடன், மின்விபத்துக்கான வாய்ப்பும் குறைகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்று கோஷமிட்டுக் கொண்டே மரங்களை வெட்டி வீழ்த்துகிற வேலையை அரசு செய்ய வேண்டியதிருக்காது.

5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் இவ்வாறு புதைவழி மின்கம்பி திட்டத்தைச் செயல்படுத்த சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்களிடம் அனுமதி கோரியது தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம். அதற்கு சில மாநகராட்சிகள் அனுமதி வழங்கியதுடன், நம்முடைய மாநகராட்சியில் இனி தலைக்கு மேல் மின்கம்பியையே பார்க்க முடியாது என்று ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்டன. ஆனால், சென்னை மாநகராட்சியிலேயே இத்திட்டம் முழுமையாக நிறைவேறவில்லை. கோவை, மதுரை, திருச்சி போன்ற மாநகரங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே புதைவழி மின்கம்பி போடப்பட்டிருக்கிறது. உதாரணமாக மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி அப்படிப் பதித்திருக்கிறார்கள். அது அழகிற்காக. அதேபோல சில நெருக்கடியான இடங்களில் உயர் அழுத்த மின்கம்பிகளை போஸ்ட் நட்டுக் கொண்டு செல்வதில் சிரமம் இருப்பதால், அவற்றை பூமிக்கடியில் கொண்டு செல்கிறார்கள். உதாரணமாக, பழங்காநத்தம், புதூர், தெப்பக்குளம், அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள சில பகுதிகள்.

இடியாப்பச் சிக்கலில் மாநகர மின் விநியோகம்

என்ன காரணம்?

நிறைய பேர் வலியுறுத்தினாலும் ஏன் இதை செயல்படுத்த மின்சார வாரியம் தயங்குகிறது என்று தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்க மதுரை மண்டல தலைவர் சசாங்கனிடம் கேட்டபோது, "மின்கம்பம் (ஓவர் ஹெட் லைன்) பயன்பாட்டைவிட புதைவழி மின்கம்பி (கேபிள்) பயன்பாடு பல மடங்கு செலவுமிக்கது. எனவேதான் மின்வாரியம் இதுபோன்ற செலவினங்களுக்கு அதிகம் யோசிக்கிறது. அடுத்து நம்முடைய நகரங்களில் பெரும்பாலானவை திட்டமிடப்பட்டவை அல்ல. சாலையோரத்தில் தரை வழி மின்கம்பி போட்டால், அந்த இடத்தை வேறு யாரும் தோண்டக்கூடாது. அருகில் குடிநீர் குழாய்கள் செல்லக்கூடாது. அதிக நாட்கள் தண்ணீர் தேங்கும் இடமாகவும் இருக்கக்கூடாது. மதுரை போன்ற மாநகரங்களில் அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை" என்றார்.

உண்மைதான். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநகராட்சிக்கும் சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசு நிதி கிடைத்தது. அந்த நிதியை உருப்படியாகத் திட்டமிட்டுச் செலவழித்திருந்தால், ஒவ்வொரு மாநகரிலும் குறிப்பிட்ட சில வீதிகளை மட்டுமாவது நூலாம்படை மாதிரி தலைக்கு மேல் அசிங்கமாகவும், ஆபத்தாகவும் மின்வயர்கள் தொங்காத, ஸ்மார்ட்டான வீதிகளாக மாற்றியிருக்க முடியும். கோவை மாநகராட்சியில் அதற்கான முயற்சிகள் நடந்தன. "இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றால், கூடுதல் துணை மின்நிலையங்கள் அமைக்க வேண்டும். அதற்கு தமிழ்நாடு அரசு இடம் வழங்க வேண்டும்" என்று சொன்னது ஸ்மார்ட் சிட்டி நிறுவனம். அதற்கு அரசு ஒத்துழைப்பு இல்லாததால், அந்தத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த முடியாமல் போய்விட்டது.

இனியாவது, மின்வாரியம், தமிழ்நாடு அரசு, உள்ளாட்சி நிர்வாகங்கள் மூன்றும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால்தான், இந்தப் பிரச்சினை நல்ல முடிவுக்கு வரும். அதுவரையில் தமிழ்நாடு மின்சார வாரியம், மரம் வெட்டி வாரியமாகச் செயல்படுவதைச் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும். வேறு வழி?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE