கேரளத்தில், 2-வது முறை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் பினராயி விஜயனின் அரசு 100 நாட்களைக் கடந்திருக்கிறது. தமிழகத்தில் பத்தாண்டுகளுக்குப் பின்பு அரியணை ஏறிய திமுக, அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் தொடங்கி பெட்ரோல் விலையைக் குறைத்தது உட்பட பல அதிரடி திட்டங்களைச் செயல்படுத்திவரும் நிலையில், கேரளத்தில் கரோனாவுக்கு எதிரான போர்ப் பரணிக்கு மட்டுமே அதீத உழைப்பைச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் தோழர்கள்.
கேரளத்தில் பினராயி விஜயன் 2-வது முறையாக முதல்வராகத் தொடர்கிறார். கடந்த 40 ஆண்டுகால கேரள அரசியல் வரலாற்றில், மீண்டும் ஒருகட்சி ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டதும் இதுவே முதல்முறை! ஆனாலும் அந்த உற்சாகத்தைக் கொண்டாட முடியாதபடி, சுகாதாரத் துறைக் கட்டமைப்புகளுக்கே கேரளம் பெரும் உழைப்பைச் செலுத்த வேண்டியிருக்கிறது. அந்த வகையில் இப்போது குறைந்துவரும் கரோனா வைரஸ் தொற்று சின்ன ஆறுதல்!
இளையவரான சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், கரோனாவை எதிர்கொள்வதில் ஆரம்பத்தில் ரொம்பவே தடுமாறினார். தொடர்ச்சியான செயல்பாடுகளால் அதன் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார். இதேபோல், முற்றிலும் இளையவர்களையே அமைச்சராகக் களம் இறக்கியதால் அமைச்சரவையின் செயல்பாடுகளில் முந்தைய வேகம் இல்லை எனவும் இடதுசாரிகள் விமர்சனத்தை எதிர்கொள்கின்றனர். இது விமர்சன ரீதியாக எதிர்கொள்ளப்பட்டாலும் இடதுசாரிகள் அந்த விமர்சனத்தில் இருந்தே பாடம் கற்றுக்கொண்டுள்ளனர்.
‘முட்டில்’ மரமுறி சர்ச்சை
இதேபோல் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் தங்கக்கடத்தல் வழக்கைப் பிரதானமாக எடுத்தன. அது புஸ்வாணமானதைத் தொடர்ந்து இடதுசாரிகள் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் இப்போதைய சூழலில், ‘முட்டில்’ மரமுறி விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளனர். பினராயி அரசு மரம் வெட்டுவதில் கொடுத்திருக்கும் தளர்வுகள்தான் இந்தச் சர்சைக்குத் தூபம் போட்டுள்ளது.
ஈட்டி, தேக்கு, சந்தனம் உள்ளிட்ட 5 மரங்களைத் தங்கள் சொந்த பட்டா நிலங்களில் இருந்தாலும் வருவாய் மற்றும் வனத் துறை ஒப்புதலோடு மட்டுமே வெட்ட முடியும் எனக் கேரளத்தில் சட்டம் இருந்தது. பினராயி விஜயனின் அரசு, பட்டா நிலங்களில் இருக்கும் மரங்களை வெட்ட அனுமதி தேவையில்லை எனத் திருத்தம் கொண்டுவந்தது. இந்தத் திருத்தத்துக்குப் பின்பு, முட்டில் எனும் பகுதியில் மட்டும் ரூ.100 கோடி மதிப்பில் மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டிருப்பதாக எதிர்கட்சிகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. மரங்களைக் கடத்தும் சமூகவிரோதிகளுக்கே இந்தச் சட்டம் துணை போவதாகக் கடும் குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றனர் இடதுசாரிகள். பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள் பினராயி விஜயனின் அரசுக்கு, எதிர்கட்சிகளின் இந்தப் போராட்டம் கடும் நெருக்கடியைக் கொடுக்கிறது.
பெருந்தொற்று மரண எண்ணிக்கையில் பிரச்சினை
கரோனா உயிர் பலி எண்ணிக்கை விஷயத்திலும் கேரள இடதுசாரி அரசு தவறான கணக்கைச் சமர்ப்பிப்பதாக எழுந்த குற்றச்சாட்டை, இடதுசாரி அரசு எதிர்கொள்கிறது. கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் கேரள அரசு குறைத்துக்காட்டுவதாக, சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் குற்றம்சாட்டியிருந்தார். இதைத் தொடர்ந்து நீதிமன்ற வழிகாட்டுதலோடு, கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீட்டுக்குத் திரும்பிய பின் 30 நாட்களுக்குள் இறந்திருந்தாலும் கரோனா இறப்பாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்டதாகக் கடந்த ஆண்டு நற்பெயரைச் சம்பாதித்த பினராயி அரசுக்கு, இறப்பு எண்ணிக்கை சர்ச்சை தலைவலியாகிவிட்டது.
புதிய திட்டங்கள் இல்லை
தமிழகத்தைப்போல், புதிய மக்கள் நலத்திட்டங்கள் எதையும் பினராயி அரசின் புதிய ஆட்சி கொண்டுவரவில்லை. ஆனால் , அதேநேரம் கேரள அரசு வேறுசில பணிகளில் முனைப்பு காட்டுவதாகச் சொல்கிறார் கேரளத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகருமான அஜித்குமார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அஜித்குமார், “தமிழகத்தில் பெட்ரோல் விலையில் மாநில அரசு தன் வரியைக் குறைத்திருக்கிறது. பெண்களுக்குப் பேருந்துப் பயணத்தில் இலவசம், அரசுப் பணியில் அரசுப் பள்ளியில் படித்தோருக்கு முன்னுரிமை என பல அதிரடிகளை அறிவித்துவருகிறது. கேரளத்தில் முந்தைய மார்க்சிஸ்ட் ஆட்சியே தொடர்ந்ததால், அவர்கள் ஏற்கெனவே செயல்படுத்திவரும் மக்கள் நலத்திட்டங்கள் மட்டுமே தொடர்கின்றன. புதிதாக மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. கரோனா காலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளின் வழியே இலவசமாக மளிகைப்பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. அந்தத் திட்டம் இப்போதும் தொடர்கிறது. மற்றபடி மக்களுக்கு இலவசம், கவர்ச்சிகரமான திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வளர்ச்சிப் பணிகளுக்கு மட்டுமே பிரதான முக்கியத்துவம் கொடுத்துவருகிறது பினராயி அரசு.
ப்ளஸ் 1 வகுப்புக்கு தற்போது தேர்வுகள் நடந்துவருகின்றன. கரோனாவால் சரிந்துபோன கேரளத்தின் பொருளாதாரத்தை மீட்க சுற்றுலாத் துறையின் மீது தனிக்கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். கேரளத்தில் அதிக அளவு சுற்றுலாத் துறை சார்ந்த தொழில்கள் உள்ளன. அதை ஊக்குவிக்கும் வகையில் சுற்றுலா கிராமங்களைத் தேர்ந்தெடுத்து வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இடதுசாரி அரசின் அமைச்சர்கள் அனைவருமே புதியவர்கள் என்பதால், அவர்களுக்குப் பல்வேறு தொழில்சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு 3 நாள்கள் வகுப்பெடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், “தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்துக்கு இப்போதுதான் திமுக அரசு உயிர்கொடுத்துள்ளது. அதேநேரம் கேரள இடதுசாரி அரசு கடந்த ஆட்சியிலேயே கேரளத்தில் அதைச் செய்துகாட்டிவிட்டது. பட்டியல் இனத்தைச் சேர்ந்த யது கிருஷ்ணா கடந்த 4 ஆண்டுகளாக அறநிலையத் துறை கோயிலில் பூஜை செய்துவருகிறார். மாநிலங்களுக்கான வரிவருவாய் குறைந்துவிடும் என்பதால், பெட்ரோலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரக் கூடாது என்பதே தமிழகத்தைப் போல் கேரள அரசின் கருத்தாக உள்ளது. அதேபோல் நெய்யாறு இடதுகரை கால்வாய் உள்பட தமிழகத்தோடு இருக்கும் நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைகளைப் பேசித்தீர்க்கும் பணியை இடதுசாரி அரசும், தமிழக அரசும் சேர்ந்து தொடங்கியுள்ளது. இதெல்லாம் வளர்ச்சி, சமரசத்தை முன்னிறுத்திய முயற்சிகள்தான்” என்கிறார் அஜித்குமார்.
ஆனாலும் தமிழகத்தைப் போல் இலவசங்கள், சலுகைகள் எதுவும் இல்லை. 100 நாள் ஆட்சியில் விமர்சனம், சர்ச்சை, பாராட்டு என கலவையான விமர்சனங்களைச் சந்திக்கும் இடதுசாரிகள், முந்தைய அரசின் செயல்பாடுகளையே தொடர்வதால் புதிய மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் இல்லை. அந்தவகையில், கேரள மக்களும் ஆச்சரியமாகப் பார்க்கும் இடத்துக்கு இன்னும் ஒருபடி முன்னேறியிருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!