தனது மணாளனுக்குக் காதலை வெளிப்படுத்தும் விதமாக மணப்பெண்கள் எத்தனையோ பரிசுகள் அளித்திருக்கிறார்கள். ஆனால், வேதாரண்யத்தைச் சேர்ந்த ஹனியா ஜெஸ்ரின் கொடுத்த பரிசோ மிகவும் வித்தியாசமானது. அதைக் கண்ட மணமகன் மட்டுமல்ல, மணவிழாவுக்கு வந்திருந்தோரே ஆச்சரியத்தால் ஆனந்தப்பட்டார்கள்.
அப்படி என்ன பரிசு வழங்கினார் ஹனியா ஜெஸ்மின்?
வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையை சேர்ந்தவர் ஜனாப் அப்துல் மாலிக். அவருடைய மகள் ஹனியா ஜெஸ்ரினுக்கும், அதேபகுதியைச் சேர்ந்த ஜனாப் பகுருதீன் என்பவருடைய மகன் சிக்கந்தர்ஷாவுக்கும் திருமணம் முடிவுசெய்யப்பட்டுக் கடந்த 14 ஆம் தேதி தோப்புத்துறையில் நிக்காஹ் நடைபெற்றது. அப்போது ஹனியா ஜெஸ்ரின் மணாளனுக்கு அழகிய பரிசு ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதை அங்கேயே பிரித்துப் பார்க்கவேண்டும் என்று அவர் சொல்லி அனுப்பியதன் பேரில் சிக்கந்தர்ஷா மேடையில் வைத்தே அதை பிரித்தார். அதனுள் மிக அழகான கையெழுத்தில் திருக்குர் ஆன் முழுவதும் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதி இருந்தது. அது ஹனியா ஜெஸ்ரின் முழுக்க முழுக்க தன் கைப்பட எழுதியது. அதைக் கண்ட அனைவருமே ஆச்சரியத்தால் உறைந்தனர். உண்மையில் திருமணப் பரிசென்றால் இதுதான் என்று அவர்கள் மணமக்களை வாழ்த்தினர்.
“எனக்கு கணவராக வரப்போகிறவருக்கு அவர் மறக்கமுடியாத ஒரு மாபெரும் பரிசைத்தான் தரவேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். அது மார்க்கத்தின் பாதையில் இருக்கவேண்டும் என்று முடிவுசெய்து குரானை கையால் எழுத ஆரம்பித்தேன். வீட்டில் வேலைநேரம் போக மற்ற நேரமெல்லாம் சிறு சோம்பலோ, அலட்சியமோ, அசதியோ, இல்லாமல் கடந்த ஒருவருடமாக உழைத்து இதை எழுதி முடித்தேன்” என்கிறார் ஹனியா ஜெஸ்மின்.
சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம், தொலைக்காட்சியின் ஆக்கிரமிப்புகள், மற்றும் பரபரப்பான வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியில் ஒரு பெண், நேரம் ஒதுக்கி, கை வலி பாராமல் முழு குர்ஆனையும் எழுதியிருப்பது ஒரு மாபெரும் பணியாகும். அதுவும் பிழையின்றி, சீரான கையெழுத்தில் நேர்த்தியாக அதை தயாரித்திருப்பது அவரது அயராத விடா முயற்சியையும், வித்தியாசமான சிந்தனைகளையும் வெளிக்காட்டுகிறது. தொழில் நுட்ப வசதிகள் பல இருந்தும் ஈடுபாடு காரணமாக தியாகப்பூர்வ பணியை மேற்கொண்ட ஹனியா ஜெஸ்ரினை இஸ்லாமியப்பெரியவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள்.