விலங்குக்கு உள்ள மரியாதைகூட மனித உயிருக்கு இல்லையா?

By கே.கே.மகேஷ்

செம்மரக் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள் என்று கூறி, தமிழுகத் தொழிலாளர்கள் 20 பேரை கடந்த 2015-ல் ஏப்ரல் 7 அன்று ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்றது ஆந்திர காவல்துறை.

அதற்கு நீதி கேட்டு, வைகோ, தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நாம் தமிழர் சீமான், கொங்குநாடு ஈஸ்வரன், ஐ.ஜே.கே. ரவி பச்சமுத்து, சரத்குமார், சிவகாமி ஐஏஎஸ்., ஜான் பாண்டியன், வணிகர் சங்கம் வெள்ளையன், கம்யூனிஸ்ட்கள், ஆம் ஆத்மி, தமுமுக, என அனைத்துக் கட்சிகளும் போராட்டம் நடத்தின. சிபிஐ விசாரணை கோரின.

கடந்த 2012 பிப்ரவரி 22 அன்று நள்ளிரவில் வங்கிக்கொள்ளையர்கள் என்று கண்டறியப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டபோது, யாருமே வாயைத் திறக்கவில்லை.

பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையில் சென்ற உண்மை கண்டறியும் குழுவினர், உயிரோடு பிடிக்க வாய்ப்பிருந்தும் வேண்டுமென்றே அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்ற உண்மையைப் போட்டு உடைத்தார்கள். கூடவே, "வட மாநிலத்தவர் எனும் குற்றவாளி அடையாளத்தை காவல்துறையினர் அழுத்தம் கொடுத்து உச்சரிப்பது தேவையற்றது. இதன் மூலம் தமிழர் தமிழரல்லாதார் எனும் பகை உணர்ச்சி விதைக்கப்படுகிறது. இந்தப் பகை உணர்ச்சி விதைப்பு என்கவுன்டரை நியாயப்படுத்தும் உளவியல் கருவியாக பயன்படுகிறது" என்பதையும் சுட்டிக்காட்டினர்.

இப்போது மீண்டும் அதேபோன்ற ஒரு போலி என்கவுன்டர் கடந்த 11-ம் தேதி சென்னை ஸ்ரீபெரும்புதூரில் நடந்தேறியிருக்கிறது. வீதியில் விரட்டிச் சென்றுபிடித்தவர்களில் ஒருவரை போலீஸாரே கண்மாய்க்குள் அழைத்துச் சென்று சுட்டிக்கொன்றார்கள் என்று மனித உரிமைகள் அமைப்புகள் குற்றம் சாட்டின. ஆனால், அது பெரிய விவாதமாக மாறவில்லை.

அதிமுக ஆட்சியில் 5 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்த முற்போக்கு அமைப்புகள்கூட, திமுக ஆட்சியில் ஒரு வடமாநிலத் தொழிலாளர் கொல்லப்படதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. செத்தது வடமாநிலத்தவர் என்பதால் கேள்வி கேட்க ஆளில்லாமல் போனது. ஆந்திராவில் தமிழர்களுக்கு என்ன கதியோ, அதே கதிதான் தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு என்பது உண்மையிலேயே நமக்குத் தலைகுனிவை ஏற்படுத்துகிற விஷயம்.

ஆந்திரப் படுகொலை

அதிகார வர்க்கம்

இந்தச் சம்பவங்களை நம்முடைய வெகுஜன மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிற அதே வேளையில்தான், நாட்டின் இன்னொருபுறம் ஓர் அதிர்ச்சிச் சம்பவம் நடந்தேறியது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கறுப்புக்கொடி பேரணி நடத்திய விவசாயிகளின் மீது, வேண்டுமென்றே காரை மோதி 4 பேரைக் கொன்றார்கள் பாஜகவினர்.

அப்படி மோதிய கார்களில் ஒன்று மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்குச் சொந்தமானது. மற்றவர்களைக் கைது செய்த போலீஸார், ஆஷிஷ் மிஸ்ராவை மட்டும் கைது செய்யத் தயங்கினார்கள். தமிழ்நாட்டிலும் அதே கதைதான். கடலூர் எம்.பி. ரமேசுக்குச் சொந்தமான முந்திரித் தொழிற்சாலையில் வேலைபார்த்த கோவிந்தராசு மீதான திருட்டுக் குற்றச்சாட்டை விசாரிக்கிறோம் பேர்வழி என்று எம்.பி.யும், சிலரும் சேர்ந்து அவரை அடித்தே கொன்றனர். இந்த வழக்கில் மற்ற ஐந்து பேரைக் கைதுசெய்த போலீஸார், ஆளுங்கட்சி எம்பி என்பதால், ரமேஷை மட்டும் கைது செய்யத் தயங்கினார்கள். கடைசியில் அவரே போய் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இங்கே மக்களுக்கு ஒரு நீதி, மக்கள் பிரதிநிதிகளுக்கு வேறொரு நீதி, ஏழைகளுக்கு ஒரு நீதி, உயர் வர்க்கத்தினருக்கு இன்னொரு நீதி என்பதே எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. பிரச்சினை பெரிதான பிறகே பெரிய இடத்து ஆட்கள் மீது வழக்கே பதிவாகிறது. அப்படியே வழக்கில் சிக்கினாலும் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி முடிந்தவரையில் விசாரணையைத் தாமதப்படுத்துகிறார்கள். பிறகு தங்கள் அரசியல், பணபலத்தைப் பயன்படுத்தி விடுதலையும் ஆகிவிடுகிறார்கள். இப்படி இன்னாள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மீது இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை சுமார் 5 ஆயிரத்தைத் தாண்டும் என்கிறார்கள். ஆனால், கீழ்த்தட்டு குற்றவாளிகளோ விசாரணையே இல்லாமல், நாதியின்றி தெருவில் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள்.

பிரபா கல்விமணி

விலங்கிலும் கீழானவனா மனிதன்?

இத்தகைய என்கவுன்டர்கள் குறித்து மக்கள் கல்வி இயக்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் பிரபா கல்விமணியிடம் 'காமதேனு இணையதளம்' சார்பில் பேசியபோது, "3 மனிதர்களைக் கொன்ற புலியைப் பிடிக்கும் தேடுதல் வேட்டையில் பெரும் ஆயுதப்படையே களமிறங்கினாலும், 20 நாட்கள் பொறுமை காத்து, மயக்க ஊசியைச் செலுத்தி உயிருடன் பிடித்திருக்கிறது வனத்துறை. ஆனால், கையில் அரிவாள் வைத்திருந்தான், கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தான் என்று சொல்லி ஒரு குற்றவாளியை எளிதாகச் சுட்டுக்கொன்றுவிடுகிறார்கள் போலீஸார். இங்கே கொல்லப்படுவது மனிதன் மட்டுமல்ல, அவனுடன் சேர்த்து உண்மையும் கொல்லப்படுகிறது. கொன்றதுடன் நிற்காமல் அதற்கான காரணத்தையும், கதைபோல் ஜோடித்துவிடுகிறார்கள் போலீஸார்.

போலீஸார் நடத்துகிற ஆயிரம் என்கவுன்டரில் ஒன்றே ஒன்றில் மட்டும் வேண்டுமானால், தங்கள் உயிரைப் பாதுகாப்பதற்காகச் சுட்டோம் என்ற கூற்றில் உண்மையிருக்கலாம். மற்றவை அனைத்துமே போலி என்கவுன்டர்கள்தான். வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டதும்கூட அப்படித்தான். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள அத்தனை எதிர்க்கட்சிகளும் சேர்ந்து அதை வரவேற்றன. இன்று வீரப்பன் புகழ்பாடும் பாட்டாளி மக்கள் கட்சி கூட அன்று அதை வரவேற்றது. சுட்டுக்கொன்றதை நியாயப்படுத்துவதும், என்கவுன்டர் செய்த போலீஸை கொண்டாடுவதும் நம்முடைய மக்கள் இன்னும் நாகரீக சமூகமாக வளரவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. அதற்காக வீரப்பன் தொடங்கி சென்னை ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்ட முர்தாஷா ஷேக் வரையில் தவறு செய்யவே இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை. வேண்டுமென்றே குற்றம் கண்டுபிடித்து காவல் துறையை விமர்சிப்பதோ, அவர்களுடைய சேவையை முற்றிலும் நிராகரிப்பதோ, கொள்ளையர்களை, கொலைகாரர்களை ஆதரிப்பதோ எங்கள் நோக்கமில்லை. மனித உயிர் மகத்தானது. எந்த மதம், மொழி, இனத்தைச் சேர்ந்த மனித உயிராயினும் அது பாதுகாக்கப்பட வேண்டும். கம்யூனிஸ்ட் அல்ல, ஆர்.எஸ்.எஸ்.காரர் கொல்லப்பட்டாலும் நாங்கள் கண்டிப்போம். குற்றம் செய்தவர் முறையான நீதி விசாரனைக்கு உட்படுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். தண்டனைகளும் குற்றவாளியை திருத்தவும், மேற்கொண்டு தவறுகளில் ஈடுபடா வண்ணம் அவரது மனசாட்சியை தட்டி எழுப்பும் விதமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அப்போதுதான் நம்மை நாம் நாகரீக சமூகம் என்று சொல்லிக்கொள்ள முடியும்" என்றார்.

ஹென்றி திபேன்

திமுக அரசுக்கு எதிரானவர்கள் அல்ல

'மக்கள் கண்காணிப்பகம்' நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேனிடம் கேட்டபோது, "ஸ்ரீபெரும்பதூர் போலி என்கவுன்டர் தொடர்பாக எங்களது உண்மை கண்டறியும் குழு வெளியிட்ட அறிக்கைக்கு இன்னும் காவல்துறை பதில் தரவில்லை. அதற்குள்ளாக தூத்துக்குடியில் இன்னொரு போலி என்கவுன்டர் நடந்திருக்கிறது. கொல்லப்பட்டவர் நல்லவரில்லை என்பதும், அவர் மீது நிறைய வழக்குகள் இருக்கிறது என்பதும் உண்மைதான். தென்தமிழகத்திற்கென ஒரு வரலாறு உண்டு. ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த ரவுடியைச் சுட்டுக்கொன்றால், அந்தச் சமுதாயத்தினரைச் சமாதானப்படுத்துவதற்காக மாற்று சமுதாயத்தில் அதிக வழக்கு இருப்பவர்களை அடுத்தடுத்து கொல்வார்கள். இப்போது இறந்திருப்பவர் நாடார் என்றால், அடுத்து தேவர், தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவரைச் சுட்டுக்கொல்வார்கள் என்பதுதான் சரித்திரம்.

இன்று இந்த தவறான கலாச்சாரத்தை குற்றவாளிகளுக்கு எதிராகப் பயன்படுத்துகிற அரசு, அடுத்து தங்கள் அரசியல் எதிரிகள் மீதும் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. எனவே, இதுபோன்ற மனிதத்தன்மையற்ற செயல்கள் தொடராமல் இருக்க முதல்வர் அவர்கள், டிஜிபி சைலேந்திரபாபுவை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். இதுபோன்ற தவறான பாதையில் செல்லும் அரசியல் கட்சிகளுக்கு, நீண்டகால அரசியல் வாழ்வு இருந்தது கிடையாது என்பதையும் பணிவுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தக் கருத்தைக் கூறுவதால் நாங்கள் திமுக அரசுக்கு எதிரானவர்கள் அல்லர். திமுக அரசை வாழ்த்தியவர்கள், இந்த அரசு வர வேண்டும் என்று விரும்பியவர்கள். எனவேதான் மற்றவர்கள் அமைதி காத்தாலும், அந்த அமைதியைக் கலைத்து உண்மையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும் என்கிற பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது" என்றார்.

காக்கிச் சட்டைக்கு இதயம் இல்லாமல் இருக்கலாம். அந்தத்துறையைத் தன்கையில் வைத்திருக்கும் முதல்வர் கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விஷயம் இது. மிசா காலத்தில் காவல்துறையின் அத்துமீறலால் நேரடியாகப் பாதிக்கப்படவருக்கு இந்த விஷயம் எளிதில் விளங்கும் என்றே நம்புவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE