அதிருப்தியாளர்களை சமாதானம் செய்து காரியக்கமிட்டியைக் கூட்டும் காங்கிரஸ்!

By குள.சண்முகசுந்தரம்

காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று கட்சிக்குள் குரல்கள் வலுத்து வரும் நிலையில் காங்கிரஸ் காரியக்கமிட்டி இன்னும் சற்று நேரத்தில் டெல்லியில் கூடவிருக்கிறது. இன்றைய கூட்டத்தில் கட்சித் தலைவரை தேர்வு செய்ய வாய்ப்பில்லை என்றாலும் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்படலாம் என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரியக் கமிட்டிக் கூட்டத்தைக் கூட்டி கட்சியின் செயல்பாடுகள் குறித்து வெளிப்படையாக விவாதிக்க வேண்டும் என குலாம் நபி ஆசாத், கபில்சிபல் உள்ளிட்ட 23 காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து குரலெழுப்பி வருகிறார்கள். இந்தக் கருத்துகளை தெரிவித்தமைக்காக கபில்சிபல் வீட்டு முன்பாக அவ்வப்போது காங்கிரஸார் கூடி எதிர்ப்பு முழக்கமும் எழுப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில், இன்றைய காரியக் கமிட்டிக் கூட்டத்தை சுமூகமாக நடத்தி முடிக்கும் வகையில் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களான குலாம் நபி ஆசாத் உள்ளிட்டவர்களிடம் முன்கூட்டியே சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. கமல் நாத் மூலமாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக டெல்லி வட்டார காங்கிரஸ் தரப்பில் சொல்கிறார்கள்.

இதனால் இன்றைய கூட்டத்தில் காரசார விவாதம் ஏதும் இருக்காது என்கிறார்கள். அதேசமயம் காங்கிரஸுக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது. புதிய தலைவரை தேர்வு செய்வதற்கு முன்பாக கீழ்மட்ட அளவில் காங்கிரஸ் உட்கட்சித் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அதற்கு முன்னதாக தேசம் முழுவதும் புதிய உறுப்பினர் சேர்க்கையை நடத்திமுடிக்க வேண்டும். இதெல்லாம் முடிந்த பிறகே அகில இந்திய தலைவர் தேர்வு இருக்கும் என்கிறார்கள்.

இந்த நடவடிக்கைகளை எல்லாம் துரிதப்படுத்தும் வகையில் இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம். பாஜக அரசுக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்கான வியூகங்கள் தொடர்பாக இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அறிவிக்கப்படலாம். அதேசமயம் உட்கட்சி தேர்தலை நடத்துவதற்காக அனைத்து மாநிலங்களுக்குமான தேர்தல் பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படக்கூடும் என்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE