தமிழகத்தில் கரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருக்கின்றன. வாரத்தின் எல்லா நாட்களிலும் கோயில்களைத் திறக்கச் சொல்லி பக்தர்களின் சார்பில் பாஜக குரல் எழுப்பிவருகிறது. கூடவே, இந்த விஷயத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்த கிண்டல் பதிவுகளை சமூக வலைதளங்களில் நிறையவே காண முடிகிறது. தியேட்டர்கள் தொடங்கி காய்கறிக் கடைகள் வரை எல்லா இடங்களும் திறந்துவிடப்பட்டிருக்கும் நிலையில், கோயில்களுக்கு மட்டும் ஏன் இந்தக் கட்டுப்பாடு என்பது பக்தர்களின் வாதம்.
முக்கியமாக, பிற மதங்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு இல்லாத கட்டுப்பாடு இந்துமதக் கோயில்களுக்கு மட்டும் ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மறுபுறம், வாரத்தின் கடைசி 3 நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதாலேயே இந்த நடவடிக்கை என்கிறது தமிழக அரசு. இதற்கிடையே, நாளை மறுநாள் (அக்.15) விஜயதசமி அன்று கோயில்களைத் திறக்கச் சொல்லி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
இந்தச் சூழலில், ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. கோயில் திறப்பு குறித்து இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரம் க்ளைமாக்ஸை நெருங்கியிருக்கும் நிலையில் இதுதொடர்பாகச் சிலரிடம் பேசினோம்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் ஆன்மிகப் பேரவையின் தலைவர் ஆட்டோ சந்திரசேகரன், “தமிழக அரசு ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புவரையில் பள்ளிகளைத் திறப்பதற்கும்கூட ஏற்பாடுகளை அறிவித்துள்ளது. முன்னேற்பாடுகளோடு திரையரங்குகள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் கடைகள், பேருந்துகள் என எல்லாமும் செயல்பாட்டில் இருக்கின்றன. அதேபோல பக்தர்களுக்கும் ஏற்பாடுகளைச் செய்திருக்கலாம். புரட்டாசி சனியில் கோவிலுக்குச் சென்று பெருமாளை தரிசிப்பது பெருமாள் பக்தர்களின் வழக்கம். அதுபோல புயலோ, மழையோ... எதுவானாலும் நான் ஒவ்வொரு நாளும் இங்குள்ள பூலோகநாதர் கோயிலுக்குப் போகாமல் இருக்கவே மாட்டேன். அப்போதுதான் அன்றைய பொழுது எனக்கு அர்த்தமுள்ளதாக இருக்கும். என்னைப் போன்ற பக்தர்கள் இப்போது வருத்தத்தில் இருக்கிறோம்.
தமிழகப் பெண்கள் தலைக்குக் குளித்துவிட்டு அருகிலுள்ள கோயிலுக்கு போய் வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். குறிப்பாக வெள்ளிக்கிழமை கோயிலுக்குப் போகாமல் இருக்கவே மாட்டார்கள். ஆனால், இப்போது அவர்களுக்கு அந்த வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறது. தெய்வத்தைக் காணமுடியாமலும், அவர்களின் கஷ்டங்களை தெய்வத்திடம் இறக்கிவைக்க முடியாமலும் தவிக்கிறார்கள். தொற்று அதிகமிருந்த காலத்தில் திறங்கள் என்று யாரும் கேட்கவில்லை. ஆனால், இப்போது எல்லாம் இயங்கும்போது கோவில்களையும் சில ஏற்பாடுகளோடு திறக்கலாமே என்பதுதான் ஆதங்கம்” என்கிறார்.
இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் கும்பகோணம் டி.குருமூர்த்தி, “ஏ.சி. தியேட்டர், ஏ.சி. பேருந்து போன்றவையெல்லாம்கூட இயங்கும்போது விஸ்தாரமான காற்றோட்டமான கோயில்கள் பூட்டிவைக்கப்படுவது மிகவும் வேதனையானது. இது இந்துவிரோதச் செயல். யாரோ சிலரைத் திருப்திப்படுத்துவதற்காகத் தமிழக அரசு இப்படிச் செய்கிறது. வேண்டுமானால் ஒரு மணி நேரத்துக்கு இத்தனை பேர்தான் அனுமதி, ஒரு நாளைக்கு இவ்வளவு பேர்தான் தரிசிக்கலாம் என்றெல்லாம் கட்டுப்பாடுகளை அதிகரித்து அனுமதி வழங்க வேண்டும். அதை விடுத்து பூட்டிவைத்திருப்பது என்ன நியாயம்?” என்று கேட்டார்.
அத்துடன், “பண்டிகைக் காலமான இந்த நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதன் உள்நோக்கத்தை இந்துக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். திமுகவுக்கு போட்ட ஒவ்வொரு ஓட்டும் கோயில்களுக்குப் போட்ட பூட்டு என்பதாக நினைத்து அவர்கள் வருந்துகிறார்கள். இந்த விஷயத்தில் இந்துக்கள் வேகமாக ஒன்றுதிரளுகிறார்கள். அதன்மூலம் இந்த பூட்டுக்கள் தானாகவே திறக்கும்” என்றும் கொந்தளிக்கிறார் குருமூர்த்தி.
பக்தர்களின் இந்தக் கோபம், ஆதங்கம் குறித்து அறநிலையத் துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வட்டாரங்களில் கேட்டபோது, “இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவர்களோ அளவில் குறைவானவர்கள். அதனால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும்தான் சர்ச்சுக்கோ, மசூதிக்கோ வருவார்கள். அதைத் தாண்டி பெரும் எண்ணிக்கையில் அவர்கள் கூட வாய்ப்பில்லை. ஆனால், பெரும்பான்மை மக்களான இந்துக்கள் வார விடுமுறையில் கோயில்களுக்குக் கூட்டமாகக் கிளம்பிவிடுகிறார்கள். அப்படி அதிகப்படியாகக் கூடும் கூட்டத்தால் கரோனா பரவிவிடக்கூடாது என்பதற்காகத்தான் வார இறுதிநாட்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. மற்ற நாட்களிலெல்லாம் எல்லாக் கோயில்களும் திறந்துதானே இருக்கின்றன. பக்தர்கள் அப்போது போய் வழிபட்டு வரலாமே, அதனை யார் தடுக்கிறார்கள்? மக்களின் நலனுக்காக மத்திய அரசின் வழிகாட்டுதல்படி விதிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டுப்பாடுகளை சிலர் அரசியல் செய்வதற்காக விமர்சிக்கிறார்கள். கோயில் சொத்துக்கள் மீட்பு உட்பட இந்த அரசாங்கம் இந்து கோயில்களையும், இந்துக்களையும் பாதுகாக்கவே விரும்புகிறது. தொற்று இன்னும் கொஞ்சம் கட்டுக்குள் வந்ததும் கோயில்கள் எல்லா நாட்களிலும் திறக்கப்படும்” என்று அறநிலையத் துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வட்டாரங்கள் விளக்கமளிக்கின்றன.
அதற்குள் முதல்வரே இவ்விஷயத்தில் முடிவெடுக்கவிருக்கிறார். அவரது அறிவிப்புக்காக பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.