வாக்கு தவறுகிறாரா மு.க.ஸ்டாலின்?

By கே.கே.மகேஷ்

'சொன்னதைச் செய்வோம்... செய்வதையே சொல்வோம்' என்பது திமுகவின் தேர்தல் முழக்கம். அதிமுகவுடன் ஒப்பிடுகையில் கொடுத்த வாக்குறுதிகளை ஓரளவுக்கேனும் நிறைவேற்றுகிற கட்சியான திமுக, இந்த முறை வழக்கத்தைவிட வேகமாகத் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக இருப்பதால், "பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை" என்று திரும்பத் திரும்பக் குற்றம்சாட்டியது. ஒரு கட்டத்தில், திமுக அரசைக் கண்டித்து ஜூலை 28-ம் தேதி மாநிலம் முழுக்கப் போராட்டமும் நடத்தியது.

இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையிலும் சரி, அரசு விழாக்களிலும் சரி திமுக அரசு எவ்வளவு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது, ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின்கீழ் எவ்வளவு மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறது என்று பட்டியலிட ஆரம்பித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அண்மையில் மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் பேசிய முதல்வர், "திமுக அரசு கொடுத்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டது" என்று பெருமிதத்துடன் சொன்னார். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேரம் என்பதால், அதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "202 வாக்குறுதிகளை ஸ்டாலின் நிறைவேற்றியிருப்பதாகக் கூறியிருப்பது பொய்" என்றார். "உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர திமுகவுக்கு வாக்களியுங்கள்" என்று முதல்வர் கோர, "திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகச் சொல்வது பொய்" என்று திரும்பத் திரும்பச் சொன்னார் பழனிசாமி. இவர்கள் சொல்வது இருக்கட்டும் உண்மை நிலவரம் என்ன?

நிறைவேறிய வாக்குறுதிகள்

2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தால், உண்மையிலேயே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளில் கணிசமானவற்றை மிகக் குறுகிய காலகட்டத்துக்குள் நிறைவேற்றியிருக்கிறது திமுக. அரிசி அட்டைதாரர்களுக்குக் கரோனா நிவாரணமாக ரூ.4,000, ஆவின் பால் விலை ரூ.3 குறைப்பு, நகர் பேருந்துகளில் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயணம், ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன், மீத்தேன், கூடங்குளம் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீதான பொய் வழக்குகள் ரத்து, பத்திரிகையாளர்கள் மீதான வழக்கு ரத்து, பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர், கோயில்களில் தமிழில் அர்ச்சனை திட்டம் விரிவாக்கம், அறநிலையத் துறை இடங்கள் கணிசமாக மீட்பு, உங்கள் தொகுதியில் முதல்வர் மனுக்களுக்கென தனித் துறை, வேளாண்மைக்கு தனி பட்ஜெட், மகளிர் சுய உதவிக் குழு கடன் ரத்து, கூட்டுறவு கடன்களில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி, மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், புதிய குடும்ப அட்டை, விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு உயர்வு, அரசுப் பள்ளி மாணவர்கள் தொழிற்கல்வி படிக்க தனி இடஒதுக்கீடு, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம் அமைப்பு, காவலர் குறைகேட்புக் கூட்டங்கள் போன்றவை பளிச்சென கண்ணில் படுகின்றன.

ஸ்டாலின் சொல்வது போல 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்குமா என்பது சந்தேகம் என்றாலும், கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதைவிட, 4 மாத திமுக ஆட்சி வேகவேகமாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

செல்வப்பிரீத்தா

நிறைவேறாத வாக்குறுதிகள்

திமுக தேர்தல் அறிக்கையின் கதாநாயகனாக இந்த முறை பார்க்கப்பட்டது, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை என்பது. அதேபோல பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி, அரசு ஊழியர்களை திமுகவின் வெற்றிக்காக உழைக்க வைத்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த இரண்டையுமே நிதி நிலையைக் காட்டி திமுக அரசு நிறைவேற்றாமல்விட்டது, வாக்களித்தவர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம்.

மாதா மாதம் மின்கட்டணம் கணக்கிடப்படும் என, கடந்த தேர்தலிலிருந்தே திமுக முன்வைத்துவந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததும் ஏமாற்றமே. நீட் விலக்கு, சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிரப்பு, பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் தரமான அரிசி வழங்கப்படும், எடையையும், சுகாதாரத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் நியாயவிலைக் கடைகளில் வழங்கும் அனைத்துப் பொருட்களையும் பாக்கெட்டுகளில் வழங்குவது ஆகிய எளிய மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புகூட நிறைவேற்றப்படவில்லை. இதேபோல, பெரிய அளவில் நிதி நெருக்கடி தராத பல திட்டங்களை நிறைவேற்றாமல் இருப்பதும், அதுகுறித்து விளக்கம் தராமல் இருப்பதும் விமர்சனத்துக்கு வழிவகுத்திருக்கிறது.

நேரடி சாட்சியம்

தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் மனுக்களைப் பெற்றார் மு.க.ஸ்டாலின். அதில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டதாக அவரே சொல்கிறார். ஆனால், அதெல்லாம் அதிகாரிகள் சொல்லும் கணக்குதான் என்பதை முதல்வர் உணர வேண்டும். மதுரை கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடையில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ கூட்டத்துக்கு பத்திரிகையாளராகச் சென்ற நானே, தொகுதி வாக்காளன் என்ற முறையில் 2 மனுக்களை எழுதிப் போட்டேன். முதல் மனு, நான் குடியிருக்கும் யா.கொடிக்குளம் கிராமத்துக்குத் தெருவிளக்கு, சாலை, கூடுதல் அரசுப் பேருந்து போன்ற வசதிகளைக் கோரும் மனு. இன்னொன்று, மதுரையில் மாவட்ட அறிவியல் மையம் அமைக்க வேண்டும் என்பது.

அடிப்படை வசதி கோரிய எனது மனு முதல்வரின் தனிப்பிரிவு தொடங்கி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கடைசியாக உள்ளூர் பஞ்சாயத்து அலுவலகம் வரையில் நகர்ந்து வந்தது, அவர்களின் தொலைபேசி அழைப்புகளின் வழியே தெரிந்தது. இதெல்லாம் ஒன்றரை மாதத்துக்குள்ளேயே நடந்து முடிந்துவிட்டது. ஆனால், நான் கேட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இன்னும் வரவில்லை. ஆனால், கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக மனு முடித்து வைக்கப்பட்டது. அறிவியல் மையம் கோரும் எனது மனு, ரொம்பப் பெரிய கோரிக்கை(?!) என்பதால் நிராகரிக்கப்பட்டுவிட்டது போலும். அதுகுறித்த எந்த விசாரிப்போ, குறுந்தகவலோ எனக்கு வரவில்லை.

‘ஸ்டாலின் செய்த துரோகம்'

திமுக தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் மட்டுமே இருந்தாலும்கூட, தேர்தல் பிரச்சாரத்தின்போது இடத்துக்கேற்ப சில வாக்குறுதிகளையும் கொடுத்தார் ஸ்டாலின். அவற்றையும் சேர்த்தால் கணக்கு ஆயிரத்தைத் தொடும். அவை அனைத்தையும் நிறைவேற்றாவிட்டால்கூட பரவாயில்லை. ஆனால், கொடுத்த வாக்குறுதிக்கு நேர் எதிராகச் செயல்படுவதை மக்கள் எப்படி ஏற்பார்கள்?

உதாரணமாக, சீர்மரபினர் எனப்படும் டி.என்.டி. சமூகத்தினர் குறித்த வாக்குறுதி. அதைப் பற்றி நம்மிடம் பேசிய சீர்மரபினர் உரிமைக் குழுவைச் சேர்ந்த பெருங்காமநல்லூர் செல்வப்பிரீத்தா, “எடப்பாடி தொகுதியில், தான் வெற்றிபெற வேண்டும் என்கிற குறுகிய நோக்கத்தில், சாதிவாரிக் கணக்கெடுப்புகூட நடத்தாமல் அவசர அவசரமாக வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. ‘எம்பிசி பிரிவில் இருந்த 93 சாதிகளுக்கு 7 சதவீதம், 28 சாதிகளுக்கு 2.5 சதவீதம், ஆனால் ஒரே ஒரு சாதிக்கு மட்டும் 10.5 சதவீதமா?’ என்று அந்தப் பிரிவில் உள்ள சாதிகள் அனைத்தும் போராட்டத்தில் இறங்கின. குறிப்பாக, சீர் மரபினரில் வருகிற பிரமலைக்கள்ளர்கள் அதிமுகவுக்கு எதிராகத் தேர்தல் பிரச்சாரமே செய்தோம். இந்த வாக்குகளை கவர்வதற்காக தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய மு.க.ஸ்டாலின், 'பன்னீர்செல்வம் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி, நாற்காலிச் சண்டைக்காக ஒரு சமூகத்தின் உண்மையான கோரிக்கையைப் புறக்கணிக்கிறார் பழனிசாமி. நாங்கள் வந்தால் டி.என்.டி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம்' என்றார். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் வன்னியர் உள்ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்வார் என்று எதிர்பார்த்தால், அதற்கு அரசாணை பிறப்பித்து நடைமுறைப்படுத்திவிட்டார். இது வாக்களித்த எங்களுக்கு ஸ்டாலின் செய்த துரோகம்" என்றார்.

ரவீந்திரன் துரைசாமி

திமுகவின் வாக்குறுதிகள் குறித்து கேட்டபோது, "தேர்தல் வாக்குறுதிகளை 5 ஆண்டுகளில் நிறைவேற்றுவோம் என்றுதான் சொல்லியிருக்கிறது திமுக. குறிப்பாக, பெண்களுக்கு 1,000 ரூபாய் உரிமைத்தொகை என்பது 505 வாக்குறுதிகளின்கீழ் வரவில்லை. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட ஐந்தாண்டு திட்டங்களுடன் திருச்சியில் தலைவர் ஸ்டாலின் அறிவித்த 10 ஆண்டு தொலைநோக்குத் திட்டத்துக்கான வாக்குறுதிகளில் ஒன்றாகத்தான் (பக்கம் எண் 112) இடம்பெற்றுள்ளது. இருந்தாலும் இந்த 5 ஆண்டுகளுக்குள் அதை நிறைவேற்ற இந்த அரசு முயற்சிக்கும்" என்கிறார்கள் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தரப்பினர்.

‘ஸ்டாலினை நம்பலாம்’

அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் கேட்டபோது, "திமுக அரசு, தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முடிந்தவரையில் நிறைவேற்றிவிட வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் செயல்படுகிறது. காரணம், தொடர்ந்து 10 ஆண்டுகள், அதாவது 2-வது முறையும் ஆட்சிக்கு வர வேண்டும் என்கிற அக்கறையும், கவனமும் ஸ்டாலினிடம் வெளிப்படுகிறது. அரசு நிர்வாகத்திலும், அரசியல் வியூகத்திலும் அது தெரிகிறது. எனவே, போகப்போக வாக்குறுதிகளை நிறைவேற்றிவிடுவார்கள் என்றே நினைக்கிறேன்" என்றார்.

“2000-ல் இப்படித்தான் திமுக ஆட்சியை பொற்கால ஆட்சி என்றார்கள். ஆனால், மறுமுறை அதனால் ஆட்சிக்கு வர முடியவில்லையே?” என்று கேட்டபோது, "பொதுவாக எல்லோரும் நம்புகிறபடி, தேர்தல் விஷயத்தில் கலைஞர் ஒன்றும் பெரிய ராஜதந்திரி கிடையாது. வாக்காளர்களைக் கவர்கிற விஷயத்தில் அவர் நிறைய தவறுகளைச் செய்தவர்தான். ஆனால், கலைஞரின் தவறுகளில் இருந்தே பல பாடங்களைப் படித்தவர் என்கிற முறையில் ஸ்டாலினிடம் நிறைய கவனமும், துல்லியமான செயல்பாடும் வெளிப்படுவதைப் பார்க்க முடிகிறது. எனவே, இப்போது போலவே தொடர்ந்து செயல்பட்டால் 10 ஆண்டுகள் ஸ்டாலின் ஆட்சி நடைபெற வாய்ப்பிருக்கிறது" என்கிறார் ரவீந்திரன் துரைசாமி.

மக்கள் என்ன நினைக்கிறார்களோ?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE