“2019 தேர்தலை விட ஒரு சதவீதம் கூடுதல் வாக்கு; இது அதிமுகவுக்கு வெற்றியே” - இபிஎஸ்

சேலம்: “சசிகலா, ஓபிஎஸ் பிரிந்து சென்றதால் தான் அதிமுகவுக்கு ஒரு சதவீதம் வாக்கு கூடுதலாக கிடைத்துள்ளது. 2019 தேர்தலை விட, அதிமுகவுக்கு ஒரு சதவீதம் வாக்கு கூடுதலாக கிடைத்துள்ளது. இது அதிமுகவுக்கு வெற்றியே” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தேர்தல் தோல்வி குறித்து முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “தேர்தல் பிரச்சாரத்தை பொறுத்தவரை பிரதமர் மோடி 8 முறை தமிழகம் வந்து பாஜக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் பலர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்தனர். பாஜக கூட்டணியின் அங்கம் வகிக்கின்ற பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர். திமுக கூட்டணியில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் தமிழகம் முழுவதும் அவர்களது கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அவர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார். திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் பிரச்சாரம் செய்தனர்.

ஆனால், அதிமுக சார்பில் நான் ஒருவன் தான் எங்களது கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்தேன். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிரச்சாரம் செய்தார். தேர்தலின் அதிமுகவின் கூட்டணி பலம் உள்ளிட்டவை குறித்து அவதூறு பிரச்சாரங்கள் அதிகமாக வெளியிடப்பட்டன. மக்களை குழப்பும் விதமாக தேர்தல் யுக்திகளை எதிரிகள் கையாண்டார்கள். இவ்வளவுக்கு இடையிலும் அதிமுக இந்த தேர்தலை சந்தித்து 2019 தேர்தலில் பெற்ற வாக்குகளை விட ஒரு சதவீதம் கூடுதலான வாக்குகளை பெற்றுள்ளது. இது அதிமுகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கிறேன்.

இன்றைக்கு வாக்கு சதவீதத்தை வைத்து பாஜக வளர்ந்துவிட்டதாக சொல்கிறார்கள். 2014ல் பாஜக கூட்டணி வைத்து போட்டியிட்டது. அப்போது பாஜக கூட்டணி 18.80 சதவீத வாக்குகள் பெற்றது. 2024ல் பாஜக கூட்டணி பெற்ற வாக்குகள் 18.28 சதவீதம். 0.62 சதவீதம் வாக்குகள் குறைவாக தான் பெற்றுள்ளது. ஆக, பாஜக கூட்டணி அதிக வாக்குகளை பெற்றதாக தவறான செய்திகள் வெளியிடப்படுகின்றன.

திமுக, 2019ல் 33.52% வாக்குகள் பெற்றது. ஆனால் தற்போதைய தேர்தலில் 26.93% வாக்குகளே பெற்றது. 2019ல் வாக்குகளை விட இந்த தேர்தலில் திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. இந்த இரண்டு கட்சிகளையும் ஒப்பிடும்போது அதிமுகவே அதிக வாக்குகளை பெற்றுள்ளது. தென்மாவட்டங்களில் அதிமுக வலுப்பெறும். இது நாடாளுமன்றத் தேர்தல். சட்டமன்ற தேர்தல் வேறு, நாடாளுமன்ற தேர்தல் வேறு. மக்கள் பிரித்து பார்த்து தான் வாக்களிக்கிறார்கள். தமிழக மக்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள். எந்த தேர்தலுக்கு எப்படி வாக்களிக்க வேண்டும் என அவர்களுக்கு தெரியும்.

அதிமுக வளர்ந்துதான் வருகிறது. ஒரு சில தொகுதிகளில் பின்னடைவு உள்ளது. அது சரி செய்யப்படும். தேர்தலில் கூட்டணி இருந்திருந்தால், வந்திருந்தால் என்று பேச முடியாது. ஒவ்வொரு தேர்தலிலும் மாறுபட்ட கூட்டணிகள் இருக்கும். சூழ்நிலைக்கு தக்கவாறு வெற்றி, தோல்வி அமையும். சசிகலா, ஓபிஎஸ் முடிந்துபோன கதை. இனிமேல் அவர்களை பற்றி என்ன பிரயோஜனம். முடிந்தபோனவற்றை பேச வேண்டிய அவசியம் இல்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு எதிரியோடு சேர்ந்து குழப்பத்தை தொடர்ந்து விளைவிக்கிறார்கள். அவர்கள் பிரிந்து சென்றதால் தான் அதிமுகவுக்கு ஒரு சதவீதம் வாக்கு கூடுதலாக கிடைத்துள்ளது.

அதிமுகவில் பிளவு இல்லை. அதிமுகவை பற்றி பேச அண்ணாமலைக்கும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு அருகதை இல்லை. ரகுபதிக்கு அடையாளம் கொடுத்தது அதிமுகதான். அதன்பின்பு அவர் திமுக சென்றார். 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை. அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான். அண்ணாமலை போன்றவர்கள் பாஜகவில் இருந்தால் அக்கட்சி தோற்கத்தான் செய்யும்.” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

தமிழகம்

11 mins ago

ஸ்பெஷல்

1 hour ago

ஆன்மிகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

50 mins ago

ஸ்பெஷல்

2 hours ago

க்ரைம்

1 hour ago

ஸ்பெஷல்

2 hours ago

ஸ்பெஷல்

3 hours ago

க்ரைம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்