கோயில் திருவிழாக்கள், திருமண வைபவங்கள் உள்ளிட்ட விசேஷங்களில் இவர்கள் இல்லாவிட்டால் கச்சேரியே களைகட்டாது. அவர்கள்தான் நாகஸ்வர, தவில் கலைஞர்கள். இந்தக் கலைஞர்கள் ஒரு கூட்டமாய் தங்கள் இசைக்கருவிகளுடன் இன்று கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டனர்.
இதில் ஓரிருவர் வாசித்தாலே கல்யாண வீடும், கோயில் திருவிழாவும் அதிரும். ஒரேநேரத்தில் ஒரு கூட்டமே வாசித்தால் எப்படி இருக்கும்? இவர்களின் வாசிப்பை நிறுத்த வைக்கவே காவல் துறையினர் படாதபாடு பட்டுவிட்டனர்.
‘கரோனா தொடங்கியதிலிருந்தே எங்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு விட்டது. அதற்கு மாற்றாக அரசு ஏதாவது உதவிகள் செய்ய வேண்டும். திருவிழாக்கள், திருமணங்கள் நடத்த அரசு கெடுபிடி விதிக்கக்கூடாது. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது நாங்களும்தான். மற்ற தரப்பினரை கண்கொண்டு பார்க்கும் அரசு எங்களை ஏனென்றுகூட கேட்கவில்லை. அதைச் சொல்வதற்காகவாவது எங்களை இங்கே வாசிக்க விடவேண்டும்’ என்று கேட்டுக் கொண்டனர் அந்தக் கலைஞர்கள்.
அவர்களை சமாதானப்படுத்தி, அதில் 5 பேரை மட்டும் ஆட்சியரைப் பார்த்து மனு கொடுக்க அலுவலகத்துக்குள் அனுப்பி வைத்தனர் போலீஸார். அவர்களுக்கான பிரச்சினை பற்றி பேசினோம்.
முருகேஷன் என்பவர், “40-45 வருஷமா நாகஸ்வரம் வாசிக்கிறேன். ஒரு விசேஷத்திற்கு 4, 5 பேர் போனால் ஆளுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். மாதம் 2 முதல் 4 வேலைகள் கிடைக்கும். ரூபாய் 8 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். இது 6 மாசத்துக்குத்தான். மத்த நாட்களில் விசேஷம் இருக்காது. கரோனாவினால் ஒன்றரை வருஷமா எந்த விழாவும் இல்லை. ரெண்டு மாசத்துக்கு ஒரு விசேஷம் கிடைக்கறதே பெரிசா இருக்கு. அதுலயும், வாயைக்கட்டு மூக்கைக்கட்டுன்னு ஏகப்பட்ட கெடுபிடிகள். இப்படி இருந்தா எப்படிங்க நாங்க பொழைக்கிறது. அதுதான் அத்தனை பேரும் சேர்ந்து அரசுக்கு கோரிக்கை வைக்க வந்திருக்கோம்!’’ என்றார்.
இது சம்பந்தமாக கோவையில் உள்ள ‘சரஸ்வதி துணை நாகஸ்வர மற்றும் தவில் இசைக்கலைஞர்கள் நலச்சங்கம்’ சார்பாக, 8 கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியரிடம் கொடுத்துவிட்டு வந்தனர் சங்கப் பொறுப்பாளர்கள். அது குறித்து நம்மிடம் விவரித்தார் ஆனந்தன் என்பவர்.
‘‘அனைத்து இசைக் கலைஞர்களுக்கும் மாதந்தோறும் உதவித்தொகை வழங்க வேண்டும். 58 வயது நிரம்பிய கலைஞர்களுக்கு மாத ஓய்வூதியம் தரவேண்டும். தமிழ்நாடு அரசு பேருந்துகளில் இலவச பஸ் பாஸ் அளிக்க வேண்டும். சொந்த வீடு இல்லாத கலைஞர்களுக்கு, இடம் வீடு வழங்க வேண்டும். அரசு விழாக்களில் நாகஸ்வரம், தவில் கலைஞர்களுக்கு இசைக்கருவிகள் வாசிக்க தொடர்ந்து வாய்ப்புத் தரவேண்டும். அரசு விருதுகளுக்கு இந்த இசைக் கலைஞர்களையும் பரிசீலிக்க வேண்டும்.
கரோனா காரணமாக எந்த ஒரு வருமானமும் இன்றி நாங்கள் வாழ்கிறோம். தவிர நாங்கள் காலங்காலமாக சமூகத்தாலும், அரசாலும் எந்த சலுகையும் இன்றி புறக்கணிக்கப்பட்டே வருகிறோம். அந்த அடிப்படையில்தான் இப்போது இந்த 8 கோரிக்கைகளை வைக்கிறோம். முன்பு ஒரு ஊருக்கு 10 முதல் 50 பேர் வரை இசைக் கலைஞர்கள் இருந்தோம். இப்போதெல்லாம் 10 ஊருக்கு ஓரிரு குடும்பங்கள் இருப்பதே அபூர்வமாகி விட்டது. அந்த அளவுக்கு இந்தத் தொழிலுக்கு வருவதற்கு எங்கள் பிள்ளைகளே வர விருப்பப்படுவதில்லை. இப்படியே போனால் இந்தக் கலையே அழிந்துவிடும். எதிர்காலத்தில் கோயில், திருமண விழாக்களில் நாகஸ்வரம், தவில் கலைஞர்களே இல்லாத நிலை ஏற்பட்டுவிடும்’’ என்றார்.
தவில், நாகஸ்வரக் கலைஞர்கள் ஒரேநேரத்தில் மொத்தமாய் கூடியதால் இன்று காலை முதல் மதியம்வரை கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்புறம். திரும்பிய பக்கமெல்லாம் தவிலையும் நாகஸ்வரத்தையும் தூக்கிக்கொண்டு அலைந்த இசைக் கலைஞர்களே அனைவரது கண்ணிலும் தென்பட்டனர்.