காந்தி ஜெயந்தியில் காடர்களின் கண்ணீர் போராட்டம்!

By கா.சு.வேலாயுதன்

அரசியல் கட்சிக் கொடிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் உருவப்படங்கள் பொறித்த பேனர்கள் தாங்கித்தான் மக்கள் போராட்டங்களைப் பார்த்திருக்கிறோம். மகாத்மா காந்தியின் உருவப்படத்தையும், வள்ளுவனின் குறளையும் முன்னிறுத்தி பேனர்கள் வைத்து போராட்டம் நடத்திய மக்களைப் பார்த்திருக்கிறீர்களா? காந்திஜெயந்தியன்று கோவை மாவட்டம் வால்பாறை கல்லார் பகுதி காடர்கள் இப்படி பேனர்கள் வைத்து ரெளத்திர போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

காலையில் தம் குடியிருப்புப் பகுதியிலிருந்து காந்தியின் உருவப்படத்தை தாங்கி ஊர்வலம் வந்தார்கள். அதை ஏற்கெனவே நிர்மாணிக்கப்பட்டிருந்த போராட்டத்திடலில் முன்புறம் வைத்து மாலையணிவித்தார்கள். அதற்கு கீழேயே,

‘அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை!’

என்ற திருக்குறள் எழுதப்பட்ட பேனரை ஒட்டினார்கள். அதற்குக் கீழேயே, ‘பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தை தம் துன்பம் போல கருதி காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனும் இல்லை!’ என்று அந்தக் குறளுக்கான விளக்கவுரையும் இருந்தது. தொடர்ந்து பந்தலுக்குள் சென்று ஆளாளுக்கு ஒவ்வொரு கோஷத்தை எழுப்பும் பதாகைகளை தாங்கி உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார்கள்.

காந்திஜெயந்தியன்று கிராமங்கள் தோறும் கிராமசபைக் கூட்டங்கள் நடந்து மக்கள் குறைகேட்பு நடந்து அதிகாரிகள் அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதிகள் தந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இது என்ன ரெளத்திரப் பேராட்டம் எனக் கேட்பவர்கள் கொஞ்சம் பின்னோக்கி செல்ல வேண்டும்.

காடர்கள் ஊர்வலம்

‘ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குள் வரும் ஒரு கிராமம் வால்பாறையை அடுத்துள்ள கல்லார். காடர் பழங்குடிகள் வசிக்கும் இந்த அடர் கானகப் பிரதேசத்தில் ஓடும் இடைமலையாற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் தொடர் மண்ணரிப்பு ஏற்பட்டு பழங்குடி மக்களின் ஜீவாதாரமான 50 ஏக்கர் நிலங்கள் பள்ளத்தாக்குகளுக்குள் சென்று விட்டன.

அதன் உச்சமாக 2019 ஆகஸ்ட்டில் பெய்த மழையில் மேலும் 10 ஏக்கர் நிலம் சரிந்து 4 வீடுகள் அடியோடு நாசம் ஆகி விட்டது. இங்கு நிலவும் அபாயம் கருதி தம் குடிசைகளைக் காலி செய்துவிட்டு இங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தெப்பக்குளமேடு செட்டில்மென்ட் பூமியில் வந்து குடிசைகளைப் போட்டனர் இப்பழங்குடிகள்.

பொதுவாகவே இயற்கைச் சூழலுக்கு ஏற்ப தங்கள் குடியிருப்புகளை இடமாற்றிக்கொள்வது பழங்குடிகள் வழக்கம். எனவேதான் காடு முழுக்க தனக்கு சொந்தம் என்ற கோஷங்களை இவர்கள் எழுப்புவதை அடிக்கடி காண முடிகிறது. அப்படி இங்கே இவர்கள் இந்த முறை கோஷமிட முடியவில்லை. இங்கே புலிகள் காப்பகம் திட்டத்தின் மூலம் இவர்களை வெளியேற்ற தீவிரமாக முயன்றுவந்த வனத்துறையினர் இவர்களை விரட்டி விடவே முயற்சித்தனர். தெப்பக்குளமேடு என்ற அந்த இடத்தில் குடிசை போட்டவர்கள் மிரட்டப்பட்டனர். அதை மீறி உருவான குடிசைகள் பிரித்து எறியப்பட்டன. பல குடிசைகள் தீ வைத்தும் கொளுத்தப்பட்டன.

இதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் போராட, அதில் தலையிட்ட அதிகாரிகள் வீடிழந்த பழங்குடியினரை இங்கிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பில் கட்டாயமாகத் தங்க வைத்தனர். மிகவும் பழுதான 4 எஸ்டேட் குடியிருப்பில் 23 குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டிருக்க, தன் நிலம் தனக்கு வேண்டும் என்கிற ரீதியில் தெப்பக்குள மேட்டில் உள்ள நிலங்களை வழங்கக்கோரி வட்டாட்சியர், சப்-கலெக்டர் முதற்கொண்டு மாவட்ட கலெக்டர் வரை மனு செய்தனர். மறியல், உண்ணாவிரதம், வனத்துறை அலுவலக முற்றுகை என்று போராட்டங்களும் செய்தனர். அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தைகளும் தோல்வியடைந்தன.

இதற்கு தீர்வு கிடைக்காத நிலையில்தான் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று இம்மக்கள் பொதுநல அமைப்பினர் துணையுடன் தெப்பக்குள மேட்டில் குழந்தைகளுடன் டெண்ட் அடித்துக் குடியேறினர். இதனால் இப்பகுதி பதற்றத்திற்கு உள்ளானது. பழங்குடியினர் இங்கிருந்து வெளியேற மறுத்தனர்.

தொடர்ந்து இப்பழங்குடி மக்களின் கோரிக்கைக்கு இணங்க தெப்பக்குள மேடு பகுதியிலேயே நிலம் அளிக்க முடிவு செய்த அரசு அலுவலர்கள், 23 குடும்பங்களுக்கு நில அளவையும் செய்தனர். இந்த சம்பவமும் நடந்து ஒரு வருடம் முடிந்து விட்டது. மறுபடியும் பழங்குடிகளுக்கு நிலம் தராது பல விதங்களில் முட்டுக்கட்டை போட்டது வனத்துறை. இதில் ரெளத்திரம் ஆன மக்கள் தான் இன்று காந்திஜெயந்தியன்று இப்படியொரு அறவழி போராட்டத்தில் அடிவைத்தார்கள்.

‘மத்திய, மாநில அரசே! நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு உயிருக்கு பயந்து எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த தெப்பக்குள மேட்டுப்பகுதியில் அடைக்கலம் அடைந்த கல்லார் காடர் மக்களாகிய எங்களை வனத்தில் வாழும் புலிகளை கூண்டு வைத்துப் பிடிப்பது போல் தோயிலைத்தோட்டத்தொழிலாளர் குடியிருப்பு என்னும் கூண்டை வைத்து பிடித்துவிட்டு எந்த நரகத்தில் விடப் போகிறீர்கள்’ என்ற கோஷத்துடன் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கியுள்ளனர்.

கடையனுக்கும் கடைத் தேற்றம் என்றார் காந்தி. இங்கே காந்திஜெயந்தியன்று, காந்தி படத்தையும், வள்ளுவர் வாக்கையும் முன் வைத்து நியாயம் கேட்டு கடையிலும் கடையர்களாக வாழ்வில் இருக்கும் பழங்குடிகள் போராட்டம் நடத்துவது கோவை பொள்ளாச்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE