கூடலூரில், கடந்த 6 நாட்களாக வனத் துறையினருக்கு போக்குகாட்டி வரும் புலியால் பீதியடைந்துள்ள மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
நீலகிரி - கூடலூர் பகுதிகளில், மனித-வனவிலங்கு மோதல்களும் எதிர்கொள்ளல்களும் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, குடியிருப்புகளை ஒட்டியபகுதிகளில் யானை மற்றும் புலிகளின் நடமாட்டங்கள் அதிகரித்துள்ளன.
அப்படிச் சுற்றிவரும் விலங்குகளில் உடலில் காயத்துடன் காட்டைவிட்டு வெளியேறி, கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் நடமாடி வரும் ஆண் புலி ஒன்று, தேவன் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சந்திரன்(51) என்பவரை கடந்த 24-ம் தேதி தாக்கியதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புலி தரும் கிலி புதிதல்ல...
இந்தப் பகுதி மக்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. கூடலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பாட்டவயலில் 2015-ல் ஒரு பெண், 2016-ல் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி வுட் பாரியர் எஸ்டேட்டில் வட மாநில காவலாளி ஆகியோர் புலி தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் முதுமலை வனப் பகுதியில் உள்ள முதுக்குழி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குஞ்சுகிருஷ்ணன் என்பவரைப் புலி தாக்கிக் கொன்றது. ஆகஸ்ட் மாதம் பொக்கபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவரை அதே புலி தாக்கியதில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பே தேவர்சோலை அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் புலி நடமாட்டம் உள்ளதாக மக்கள் கூறியதால், அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, புலி நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. அதையும் கடந்து தேவன் எஸ்டேட் பகுதி தொழிலாளியையே அந்தப் புலி அடித்துக் கொன்றுள்ளது.
மேலும் அந்தப் புலி, கடந்த 2 மாதங்களில் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10-க்கும் அதிகமான மாடுகளையும் தாக்கி கொன்றுள்ளது. தொடர்ந்து மனிதர்களையும் கால்நடைகளையும் தாக்கிக் கொல்லும் அபாயம் இருப்பதால், உள்ளூர் மக்கள் வனத் துறைக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தினர். இதனால், அந்தப் புலியைப் பிடிக்கும் பணியில் வனத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன் உத்தரவின் பேரில், மருத்துவர்கள் ராஜேஸ்குமார், சுகுமார் மற்றும் அசோகன் அடங்கிய மருத்துவக்குழுவுடன் நூற்றுக்கணக்கான வனத் துறையினர் களமிறங்கியுள்ளனர்.
இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறும்போது, "முதுமலையில் T-23 எனப் பெயரிடப்பட்டு கண்காணித்து வந்த ஆண் புலியின் பட்டைகளைப் போன்றே இதற்கும் உள்ளது. ஒருவேளை அதே புலியாகக் கூட இருக்கலாம். சுமார் 13 வயது மதிக்கத்தக்க இந்தப் புலியின் உடலின் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால், காட்டில் இரையை வேட்டையாட முடியாத நிலையில் உள்ளது. எளிதாக வேட்டையாடக்கூடிய கால்நடைகள் மற்றும் மனிதர்களை தாக்கி வருகிறது" என்றனர்.
கேரளாவிலிருந்து சிறப்புக்குழு
இந்தப் புலியை பிடிக்க கேரளாவில் இருந்து வந்துள்ள10-க்கும் மேற்பட்ட அதிவிரைவு படையினருடன், வனத் துறை, காவல் துறை, கால்நடை மருத்துவர்கள், அதிரடிப்படை என நூற்றுக்கும் மேற்பட்டோர் களத்தில் உள்ளனர். புலியைப் பிடிக்க கூண்டுகள், கண்காணிப்பு கேமிராக்கள், ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், அவ்வப்போது அப்பகுதியில் பெய்துவரும் மழையால் தேடுதல் பணி தடைப்பட்டுத் தொடர்கிறது.
இந்நிலையில், மே பீல்ட்ஸ் பகுதியில் பதுங்கியிருந்த அந்தப் புலி, இன்று (செப்.29) காலை தேயிலை தோட்டம் வழியாக வந்ததை வனத் துறையினர் பார்த்து, அதைச் சுற்றி வளைத்தனர். ஆனால், நூலிழையில் தப்பிய அந்தப் புலி புதருக்குள்சென்று மறைந்தது. இதனால், அதற்கு மயக்க ஊசி செலுத்த முடியாமல் மருத்துவக் குழுவினர் ஏமாற்றம் அடைந்தனர்.
வீடுகளில் முடங்கியுள்ள மக்கள்
இந்நிலையில், ‘புலி நடமாட்டம் உள்ளதால்பொதுமக்கள் யாரும் வெளியில் நடமாட வேண்டாம்' என மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அப்பகுதிக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டு, புலி பிடிபடும்வரை, மக்கள் பணிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால், அவர்களுக்கு ஒரு வாரத்துக்குத்தேவையான அத்தியாவசிய பொருட்கள் தேவர் சோலை பேரூராட்சி மூலம் வீடுகளுக்கு ஆட்சியர் முன்னிலையில் வழங்கப்பட்டுள்ளது.
புலி நடமாட்டம் குறித்து பேசிய தேவன் எஸ்டேட் மக்கள், "மாடு மேய்த்துக் கொண்டிருந்த சந்திரனை புலி தாக்கி கொன்றது முதல், வீட்டை விட்டு வெளியே வரவே பயமாக உள்ளது. இந்தப் புலியை பிடித்து காட்டுக்குள் விட்டால்தான் எங்களுக்கு நிம்மதி" என்றனர்.
புலியைப் பார்த்தாலே கிலிதான். அது அக்கம்பக்கத்தில் ஆளையே அடித்துவிட்டு உலவுகிறது என்றால்... மக்கள் வெளியே உலவ முடியுமா என்ன? சீக்கிரமா அந்த புலியைப் பிடிங்கப்பா என கிலியுடன் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.