சென்னையில் ரவுடிகள் அட்டகாசத்தை ஒழிக்கத் தனிப்படை

By காமதேனு டீம்

சென்னையில் பணிபுரியும் பெண் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள்வரை சுமார் 4,800 பெண் காவல் அதிகாரிகள் உள்ளனர். இவர்களுக்கு சமநிலை வாழ்க்கை முறை குறித்த 2 நாள் சிறப்புப் பயிலரங்கம் நடத்தப்பட்டது. சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை துணை ஆணையர் அலுவலகத்தில் இந்தப் பயிலரங்கம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நிகழ்ச்சியைக் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசியவர், ”பணிச் சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகள் இந்த பயிலரங்கத்தில் கற்பிக்கப்படும். இந்த வகுப்பு குறித்த கருத்துகளைக் காவல் அதிகாரிகள் பின்னூட்டமாகக் கொடுக்கலாம். அதைநேரடியாகப் பார்வையிட்டு மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தவர், ”ரவுடிகள் அட்டகாசத்தை ஒழிக்க முதலமைச்சர் உத்தரவின் பேரில் சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் உதவி ஆணையர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்படவுள்ளது. நேற்று நடைபெற்ற ஸ்டிங் ஆப்பரேஷனில் சென்னையில் 717 இடங்களில் சோதனை நடத்தி சுமார் 70 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது வீடுகளிலிருந்து 13 கத்திகள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முக்கிய வழக்குகளில் தொடர்புடைய 6000 ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு விசாரணை மற்றும் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமன்றி கடந்த 3 மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், சென்னையில் கொலை சம்பவங்கள் முன்பைவிட குறைந்துள்ளன. குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் வண்ணாரப்பேட்டை பகுதியில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 30 ரவுடிகள் கண்டறியப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE