2 ஏடிஜிபிக்கள் உட்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

By காமதேனு டீம்

தமிழகத்தில் அதிமுக, திமுக கட்சிகள் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் அதிகாரிகளை மாற்றம் செய்வது வாடிக்கையான ஒன்று. இவ்வாறு ஆட்சி மாற்றம் வரும் போதெல்லாம் முக்கிய பதவிகளுக்கு வரவேண்டி, அதிகாரிகளிடையே கடும் போட்டி நிலவிவருகிறது.

இந்நிலையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு அமைந்தது. இதைத் தொடர்ந்து அதிமுக ஆட்சியின்போது முக்கிய பதவிகளில் பொறுப்பு வகித்த ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

குறிப்பாகத் தமிழகக் காவல் துறையில் ஏடிஜிபி, ஐஜி, கூடுதல் ஆணையர், இணை ஆணையர், துணை ஆணையர் என 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை காவல் ஆணையரகம் 3 ஆக பிரிக்கப்பட்டு புதிதாக தாம்பரம், ஆவடி என இரு புதிய ஆணையரகம் செயல்படும் என அறிவித்தார். அதற்கான ஆயத்தப் பணிகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. புதிய ஆணையர் பதவிக்கு வழக்கம்போல் காவல் அதிகாரிகளிடையே பெரும் போட்டி நிலவி வந்தது. இச்சூழலில் இன்று, தமிழகக் காவல் துறையில் 2 ஏடிஜிபிக்கள் உட்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருச்சி காவல் ஆணையராக இருந்த அருண், சென்னை போலீஸ் பயிற்சி மைய கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, கார்த்திகேயன் திருச்சி மாநகர புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அதேபோல் ஆயுதப்படை ஏடிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாகவும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக இருந்த அபய் குமார் சிங் ஆயுதப்படை ஏடிஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விடுமுறையில் இருந்த மகேந்திர குமார் ரத்தோட், சீருடை பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலாளராக மாற்றப்பட்டார். டிஐஜி சரவணசுந்தர் திருச்சி சரக டிஐஜியாகவும், ராதிகா ஜெனரல் டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளனர்.

விடுப்பிலிருந்த எஸ்.பி. நிஷா கணினிமயமாக்கல் பிரிவு எஸ்.பி-யாகவும், சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி-யாக இருந்த மாடசாமி சேலம் வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக இருந்த வேதரத்தினம், விரிவாக்கப் பிரிவு எஸ்.பி-யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE