குடும்ப அட்டையிலிருந்து உறுப்பினர்கள் தானாகவே நீக்கம்: குழம்பித் தவிக்கும் மக்கள்

By என்.சுவாமிநாதன்

குடும்ப அட்டையில் இருந்து சில உறுப்பினர்களின் பெயர்கள், குடும்பத் தலைவர் கோரிக்கை விடுக்காத நிலையில் தானாகவே நீக்கப்பட்டு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பலரும் குழப்பத்தில் உள்ளனர்.

ஒரு மனிதனுக்கு ஆதார் கார்டும், குடும்ப அட்டையும் தான் தற்போது வாழ்வுரிமை ஆவணமாகப் பார்க்கப்படுகிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மக்கள் நலத்திட்டங்கள் குடும்ப அட்டையின் வாயிலாகவே வழங்கப்படுகின்றன. கரோனா கால நிவாரண நிதி, பொங்கல் பரிசு ஆகியவையும் குடும்ப அட்டையின் வாயிலாகவே வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், குமரி மாவட்டத்தில் திடீர் என பல குடும்பத் தலைவர்களுக்கு செல்போனில் ஒரு குறுஞ்செய்தி வந்து விழுந்தது. அதில், ‘குடும்ப உறுப்பினர் நீக்கம் தொடர்பாக உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது’ என தகவல் இருந்திருக்கிறது. அடுத்த சிலநிமிடங்களில், ‘உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. குடும்ப உறுப்பினர் நீக்கம் செய்யப்பட்டது’ எனவும் குறுஞ்செய்தி வந்துவிழுந்துள்ளது. இதைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். தாங்கள் கோரிக்கை எதுவும் வைக்காத சூழலில், குடும்ப உறுப்பினர் நீக்கப்பட்டது ஏன் என்னும் சந்தேகத்தோடு இ-சேவை மையங்களுக்கு விரைந்து மீண்டும் நீக்கப்பட்ட பெயர்களை இணைத்தனர்.

இதுகுறித்து குமரி மாவட்ட பொது விநியோகத் துறை அதிகாரிகளிடம் நாம் கேட்டபோது, “குடும்ப அட்டையில் பெயர் இருக்கும் அனைவரும், தங்களது ஆதார் எண்ணையும் அத்துடன் இணைக்க வேண்டும். அப்படி இணைக்காதவர்களின் பெயர்களை கணினி தானாகவே பரிசீலித்து செயற்கை நுண்ணறிவு முறையில் அதாவது கோரிக்கை விடுக்காமலேயே நீக்கிவிட்டது. அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்குச் சென்று ஆதார் எண், ஆதார் நகல் ஆகியவற்றைக் கொடுத்து மீண்டும் பெயரைச் சேர்த்துக்கொள்ள முடியும்.

பெரும்பாலும் இப்போது குழந்தைகளின் பெயரே குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்பட்டிருக்கும். காரணம், அவர்களின் பிறப்புச் சான்றிதழைக் கொடுத்து குடும்ப அட்டையில் சேர்த்திருப்பார்கள். குழந்தைகளின் ஆதார் எண்ணை இணைத்திருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளின் பெயர்களும் நீக்கப்பட்டிருக்கும்” என்றனர்.

இத்தகைய பெயர் நீக்கம் குறித்து அரசு முறைப்படி அறிவிப்பு கொடுக்கலாம். அதைவிடுத்து, குடும்பத் தலைவருக்கே தெரியாமல் உறுப்பினர் பெயரை தடாலடியாக நீக்குவது எப்படி சரியாக இருக்கும் என மக்கள் மத்தியில் அதிருப்திக் குரல்களும் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன. ஆரம்ப நிலையிலேயே அரசு இதற்கு நல்லதொரு தீர்வைச் சொன்னால் நல்லது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE