கேஸ் விலை உயர்வை எதிர்த்து கனிமொழி கருப்புக் கொடி

By காமதேனு டீம்

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டம், பெட்ரொல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கருப்புக் கொடி ஏந்திய போராட்டம் இன்று (செப்.20) காலை தமிழகம் முழுதும் நடைபெற்றது.

இதில், திமுக எம்.பி.யும் மகளிர் அணி செயலாளருமான கனிமொழி சென்னை சிஐடி காலனியில் உள்ள தனது இல்லத்தில் கருப்புக் கொடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, மத்திய அரசுக்கு எதிராகக் கோஷமிட்டும், மத்திய அரசுக்கு எதிரான வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தியும் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தை அடுத்து செய்தியாளர்களிடம் பேசும்போது,

”பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளைத் தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசுக்கு எதிராக, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில், மக்கள் போராடி வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பெட்ரோல், டீசல் விலை அவ்வப்போது உயர்த்தப்பட்டதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், தற்போது பாஜக அரசு தினமும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தி வருகிறது. இதனால் விலைவாசி அதிகரித்து வருவதுடன் கரோனா காலத்தில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறோம். கரோனா காலத்தில் நமக்கு உணவளித்த விவசாயிகளுக்கு எதிராக வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது, வேலையில்லா திண்டாட்டம், மாணவர்களைப் பழிவாங்கும் சூழல் என மக்களுக்கு எதிரான திட்டங்களைக் கொண்டு வந்து, பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு வழங்கும் எண்ணப்போக்கு போன்றவற்றைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசுக்கு எதிரான அடுத்தகட்டப் போராட்டம் திமுக தலைமையின்கீழ் முன்னெடுக்கப்படும். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. அதேபோன்று சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வர வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு”

என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE