ஆனைமலை: ஆனைமலை அருகே அம்பராம்பாளையத்தில் ஆழியாறு ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு சிறுவனின் சடலத்தை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், பொள்ளாச்சி பகுதியில் ஆழியாறு அணை, கவியிருவி, ஆழியாறு ஆற்றில் உள்ள தடுப்பணைகள் என சுற்றுலா தலங்கள் செல்கின்றனர். இதில் தடுப்பணைகள் மற்றும் ஆற்றுப் பகுதிகளில் நீர்ச்சுழல்கள், புதை மணல்கள் இருப்பதால் சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை பலகை நீர்நிலைப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை,உக்கடம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் 5 பேர் இன்று மதியம் பொள்ளாச்சி பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அம்பராம்பாளையம் வழியாகச் செல்லும் ஆழியாறு ஆற்றில் இறங்கி குளித்த மணிகண்டன் (14) என்ற சிறுவன் ஆற்றில் ஆழம் மிகுந்த பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உள்ளார்.
உடன் வந்த சிறுவர்கள் மணிகண்டன் நீண்ட நேரம் ஆகியும் நீருக்குள் இருந்து வெளியே வராததால் அவரை தேடி உள்ளனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு நீரில் மூழ்கி உயிரிழந்த மணிகண்டனின் சடலத்தை மீட்டனர். இது குறித்து ஆனைமலை காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.