வருமானத்துக்கு அதிகமாக 654 சதவீதம் சொத்துக் குவிப்பு: கே.சி.வீரமணி மீது வழக்குப் பதிவு

By காமதேனு டீம்

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான 28 இடங்களில் இன்று (செப்.16) காலை அதிரடி சோதனை நடத்திவரும் லஞ்ச ஒழிப்புப் போலீஸார், அவர் மீது வழக்குப் பதிவுசெய்திருக்கின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி

வழக்கின் பின்னணி

2016-2021-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியின்போது, வணிகத் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. 2011-2021-ம் ஆண்டு காலகட்டம்வரை அதிமுக சட்டபபேரவை உறுப்பினராக அவர் பதவி வகித்துள்ளார்.

அந்தக் காலக்கட்டத்தில் வீரமணி, தனது வருமானத்துக்கு அதிமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்குப் புகார்கள் வந்தன.

விசாரணையில், வீரமணி தனது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. குறிப்பாகப் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்தபோது, அதிகாரிகளுடன் சேர்ந்து நிலத்துக்கான விலையைக் குறைத்து மதிப்பீடு செய்து, பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதும், மாமனார் பெயரில் ரூ.2 கோடி மதிப்பிலான 100 ஏக்கர் நிலத்தை வாங்கி, அந்த நிலத்தை 80 லட்ச ரூபாய் எனக் குறைத்துக் காட்டி சொத்து சேர்த்ததும் தெரியவந்தது.

654 சதவீதம் அதிகமாகச் சொத்துக் குவிப்பு

மேலும் 2016-ல் வீரமணி மற்றும் அவரது குடும்பத்தாரின் சொத்து மதிப்பு ரூ.25,99,11,727ஆக இருந்ததாகவும், 2021-ல் அது ரூ.56,60,86,585 வரை உயர்ந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், ‘வீரமணியின் 4 வருட வருமானம் ரூ.4.40 கோடி; அவர் செலவு செய்த தொகையின் மதிப்பு ரூ.2.56 கோடி. அதன்படி அவர் 1 கோடியே 83 லட்சம் ரூபாய் சொத்துகள் சேர்த்திருக்க வேண்டும். ஆனால், 28 கோடியே 78 லட்சத்து 13 ஆயிரத்து 758 ரூபாய் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளார். அதாவது, வருமானத்துக்கு அதிகமாக 654 சதவீதம் சொத்து சேர்த்திருக்கிறார் என லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

காலை 7 மணி முதல் சோதனை

அதனடிப்படையில் இன்று காலை 7 மணிமுதல், தமிழகம் முழுவதும் வீரமணிக்குச் சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். சென்னை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இந்தச் சோதனை நடைபெற்றுவருகிறது.

புகார்களின் அடிப்படையில், அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவுசெய்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE