நீட் விலக்கு மசோதா செய்தி சென்றடையவில்லையா? : மாணவி சவுந்தர்யா தற்கொலை

By காமதேனு டீம்

காட்பாடி அடுத்த, தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்ற கூலித் தொழிலாளியின் மகள் சவுந்தர்யா (17). கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் நீட் தேர்வு எழுதியுள்ளார். தேர்வை தன்னால் சரியாக எழுத முடியவில்லை என்ற விரக்தியில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலை காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

நீட் தேர்வு விலக்கு மசோதா, சட்டப்பேரவையில் 2 நாட்களுக்கு (செப். 13) முன்பு நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு பெறப்பட்டு, மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் பெற்ற பிளஸ் 2 மதிப்பெண்களே போதுமானது என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தச் செய்தி இன்னும் பலரைச் சென்றடையவில்லை என்பதையே தொடரும் தற்கொலைகள் உணர்த்துகின்றன.

இந்நிலையில் ஆசிரியர்களும், பெற்றோர்களும் கூடுதல் கவனத்துடன் நீட் தேர்வு எழுதிய குழந்தைகளை ஆற்றுப்படுத்த வேண்டியுள்ளது. பெற்றோர் கூடுமானவரைக் குழந்தைகளுக்கு அருகிலேயே இருக்கும்படி மனநல ஆலோசகர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ஆசிரியர்கள் தங்களது மாணவர்களைத் தொடர்புகொண்டு அவர்களுக்குச் சரியான செய்தியைக் கொண்டு சேர்த்து, ஊக்கமும் நம்பிக்கையும் வழிகாட்டுதலும் வழங்க வேண்டிய காலகட்டமிது.

இதற்கு மேலும் எந்த உயிரையும் நீட் பறிக்க அனுமதிக்கக் கூடாது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE