மாணவி கனிமொழி உடலுக்கு அமைச்சர் சிவசங்கர் அஞ்சலி

By கரு.முத்து

அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வால் மற்றொரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தங்களை மாய்த்துக்கொள்ளும் விபரீதம் அரியலூர் மாவட்டத்தில் அதிகமாகியிருக்கிறது. அனிதாவில் தொடங்கி சென்ற ஆண்டு தினேஷ், இந்த ஆண்டு கனிமொழி என்று பட்டியல் நீண்டிருக்கிறது.

கனிமொழி

அரியலூர் மாவட்டம், சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதியின் மகள் கனிமொழி. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600-க்கு 562 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பெற்றிருந்தார். மருத்துவக் கனவிலிருந்த கனிமொழி, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தேர்வு எழுதியுள்ளார். ‘தேர்வு எழுதிவிட்டு வந்தவர் தேர்வு மிகவும் கடினமாக இருந்தது, அதனால் சரியாக எழுதவில்லை’ என தந்தையிடம் சோகமாக கூறியிருக்கிறார்.

மனஉளைச்சலில் இருந்த மகளை தந்தை கருணாநிதி ஆறுதல் கூறி தேற்றியுள்ளார். எனினும் தனது மருத்துவக்கனவு நிறைவேறாமலே போய்விடுமோ என்ற அச்சத்தில், தனிமையில் வீட்டில் இருந்த கனிமொழி நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இத்தகவல் அறிந்ததும், மாணவியின் இல்லத்துக்கு வந்த அம்மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சிவசங்கர், மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நீட் தேர்வுக்கு எதிரான மசோதா நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இம் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற செயல்களில் மாணவ-மாணவிகள் ஈடுபடாமல் மனதை திடப்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இதற்காக மனதளவில் அவர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்”

இவ்வாறு சிவசங்கர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE