சாதனைப் பிரச்சாரத்தில் ‘சைக்கிள் வடிவேல்’!

By என்.சுவாமிநாதன்

‘உதய சூரியன் உதிக்கணும். நம் உரிமை வாழ்வு மலரணும்’ என டிவிஎஸ் 50 வாகனத்தில் இருக்கும் ஸ்பீக்கரில் இருந்து பாடல் ஒலிக்கிறது. ‘இது தேர்தல் நேரம் இல்லையே’ என அனைவரும் திரும்பிப் பார்க்கையில், தலையில் உதயசூரியன் பொறித்த கிரீடம், கழுத்தில் திமுக துண்டு சகிதம் வலம் வருகிறார் ‘சைக்கிள் வடிவேல்’. வழிநெடுகிலும் திமுக அரசின் 100 நாள் சாதனைகளைத் துண்டுப் பிரசுரமாக விநியோகிக்கிறார்.

காமதேனு இணையத்துக்காக அவரை ஓரம்கட்டிப் பேசினோம். “நான் திமுகவோட அடிமட்ட தொண்டன் என தன்னை அறிமுகம் செய்துகொண்ட சைக்கிள் வடிவேலுவுக்கு நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சொந்த ஊர். பரோட்டா மாஸ்டராக இருக்கும் இவர், திமுக மீது கொண்ட சிநேகத்தால் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து தனது மொபெட் யாத்திரையைத் தொடங்கி, கன்னியாகுமரி வந்திருந்தார்.

இந்தப் பயணம் அவரது சொந்த ஊரான திருச்செங்கோட்டில் முடிகிறது. நம்மிடம் உற்சாகம் ததும்ப பேசினார் சைக்கிள் வடிவேல். “ஆரம்பத்தில் சைக்கிள்தான் எங்கிட்ட இருந்துச்சு. அப்போதே நாடாளுமன்றத் தேர்தலின்போதும், உள்ளாட்சித் தேர்தலின் போதும் இதேபோல் தமிழ்நாடு முழுக்க திமுகவுக்காக சுற்றுப்பயணம் செய்தேன். அதனாலேயே என் பெயர் சைக்கிள் வடிவேல் ஆகிப்போச்சு.

இப்ப இந்த டூவீலரில் சுத்துறேன். எனது இந்தப் பயணத்தை தொடங்கிவைக்கணும்னு தளபதி மு.க.ஸ்டாலின் கிட்ட கோரிக்கை வெச்சேன். உடனே, ‘நீ நாளைக்கு வாப்பா’ என வாஞ்சையோடு சொன்னார். அதேபோல், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து தளபதிதான் இந்தப் பயணத்தைத் தொடங்கி வெச்சாரு. கடலூர், விழுப்புரம், பண்ருட்டி பகுதிகளில் உற்சாக வரவேற்பு குடுத்தாங்க. 100 நாள்களில் திமுக அரசு செஞ்ச சாதனைகளை அச்சடிச்ச நோட்டிஸை போற இடங்கள்ல குடுத்துட்டே வர்றேன். போற இடத்துல எல்லாமே, தளபதியின் ஆட்சி சிறப்பா இருக்கறதா மக்கள் சொல்றாங்க’’ என்றார் வடிவேல்.

சைக்கிள் வடிவேலை வழியில் சந்திக்கும் திமுகவினர், அவருக்கு சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பும் கொடுக்கின்றனர். நாம் சைக்கிள் வடிவேலிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, அங்குவந்த ராஜாக்கமங்கலம் ஒன்றியத் துணைத்தலைவர் வழக்கறிஞர் சரவணன் அவருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE