சென்னை நுங்கம்பாக்கத்தில் சாஸ்திரி பவனில் வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகம் உள்ளது. வெளிநாட்டில் வசிப்பவர்கள் திரும்பி சொந்த நாட்டிற்குச் செல்ல அனுமதி சான்றிதழை இங்கு பெற்றுச் செல்வது வழக்கம்.
அவ்வாறு இலங்கை நாட்டை சேர்ந்த குடும்பத்தினர் 5 பேர் நேற்று காலை வெளியேறுவதற்கான அனுமதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
இது தொடர்பாக பிராந்திய பதிவு அலுவலக முதன்மை அதிகாரி நடத்திய விசாரணையில் இலங்கை நாட்டை சேர்ந்த மகேஷ்வரன் நவனீதன் (34), அவரது மனைவி கிருபாஜினி (32), இவர்களது குழந்தைகள் அக்சியா (11), அக்சயன் மற்றும் உறவினர் நளினி என தெரியவந்தது.
மேலும் இவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி கடந்த ஒரு மாத காலமாகச் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து முதன்மை அதிகாரி அளித்த புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் 5 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சுற்றுலா விசாவில் இந்தியா வந்த அவர்கள் விசா காலக்கெடு முடிந்த பின்னர் திருச்சி துறையூர் பகுதியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று அலுவலகத்திற்கு வந்த பின்னரே அவர்கள் சட்டவிரோதமாகத் தங்கியிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 பெண்கள் மற்றும் குழந்தைகளை போலீசார் கெல்லீஸ் பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். சுற்றுலா விசாவில் வந்துவிட்டு சட்டவிரோதமாக இவ்வளவு நாட்கள் எதற்காக நவனீதன் தனது குடும்பத்தாருடன் இந்தியாவில் தங்கியிருந்தார் என்பது குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.