நீட் தேர்வு விவகாரத்தில் மக்களை திமுக ஏமாற்றுகிறது

By என்.சுவாமிநாதன்

நீட் தேர்வு விவகாரத்தில் தேர்தலின் போதும், ஆட்சிக்கு வந்த பின்னும் திமுக பொய் தகவல்களையே மாணவர்கள் மத்தியில் பரப்புரை செய்வதாக அதிமுகவின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார்.

தளவாய் சுந்தரம்

இதுகுறித்து காமதேனு இணையதளத்துக்கு இன்று அவர் அளித்த பேட்டியில், “ஆட்சிக்கு வந்ததும் நீட்டை ரத்துசெய்வோம் என பொய் வாக்குறுதி கொடுத்தே திமுக ஜெயித்தது. இப்போது நீட் தேர்வினால் சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ள பரிதாபம் நிகழ்ந்துள்ளது. நீட் விவகாரத்தில் திமுக இஷ்டத்துக்கு பொய் சொல்லி வருகிறது. கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது அப்போதைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத், மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவந்தார். அதுதான், இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களும் நீட் தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்பதாகும்.

இதை எதிர்த்து தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகளைத் தொடர்ந்தன. இந்த வழக்குகளை கடந்த 2013-ம் ஆண்டு நீதியரசர் அஸ்டமஸ் கபீர் உள்பட 3 நீதிபதிகள் விசாரித்து தீர்ப்பளித்தனர்.

அதில், 2 நீதிபதிகள் நீட் தேர்வு வேண்டாம் என்றும், அனில் தேவ் என்ற நீதிபதி மட்டும் நீட் தேர்வு தேவை என்றும் தீர்ப்பு கூறினார். இதனைத் தொடர்ந்து மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா மற்றும் அப்போதைய மத்திய அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்தார்கள்.

அந்த விசாரணையின் முடிவில், ஒட்டுமொத்த இந்தியாவிலும் நீட் தேர்வு வேண்டும். இதில் இப்போது சில குழப்பங்கள் இருப்பதால் 2016-ம் ஆண்டுக்கு மட்டும் நீர் தேர்வு நடத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும், 2017-ஆம் ஆண்டு முதல், நீட் தேர்வு நடத்தப்படும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அப்போதே நீட் விலக்கு குறித்து பேரவையில் ஒரு சட்ட முன்வடிவைக் கொண்டு வந்து நிறைவேற்றி அதை தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்கள். ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தார். ஆனால் குடியரசுத்தலைவர், அந்த சட்டமுன்வடிவை தள்ளுபடி செய்து திருப்பி அனுப்பிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஒரு அரசாணை வெளியிட்டார். அந்த அரசாணையின் அடிப்படையிலேயே தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மருத்வ சேர்க்கையில் 85 சதவீதமும், அகில இந்திய இட ஒதுக்கீடு 15 சதவீதம் எனவும் ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதே இதுதொடர்பாக குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதினார்கள். நீட் தேர்வு விஷயத்தில் மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசு சட்டம் கொண்டு வந்தாலும் செல்லாது என உச்சநீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. நிலைமை இப்படி இருக்க, நீட் தேர்வை தமிழகத்திற்கு எடப்பாடி பழனிசாமி தான் கொண்டுவந்தது போல் பொய்யான தகவல்களை திமுக பரப்புகிறது. நீட் குறித்து பொய்யான வாக்குறுதியைக் கொடுத்துவிட்டு நீட் தேர்வு முடிந்த மறுநாள் சட்டமுன் மொழிவைக் கொண்டு வருகிறார்கள். இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பாரா என்பது கேள்விக்குறி.

நீட் தேர்வில் இருந்து விலக்களித்தால் மகிழ்ச்சி. ஆனால், அதை சாதிக்க திமுகவுக்கு திராணி கிடையாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 254-ன்கீழ், மத்திய அரசுக்கு எதிரான ஒரு சட்டம் மாநில அரசால் இயற்றப்பட்டால், மத்திய அரசின் சட்டமே செல்லும். நிலைமை இப்படியிருக்க, நீட்டிற்கு எதிராக சட்டமுன்வடிவை தாக்கல் செய்து நாட்டு மக்களை ஏமாற்றப் பார்க்கிறது திமுக. இதுபோன்ற காரியங்களைச் செய்வதில் திமுகவுக்கு இணை யாரும் இல்லை” என்று சொன்னார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE