நாளை மெகா தடுப்பூசி முகாம்

By காமதேனு டீம்

கரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது. அதில், நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் நாளை 50 இடங்களில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை ஏராளமான உயிர் இழப்புகளை ஏற்படுத்தியது. அதற்குமுன்பு, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுவந்தது. 2-வது அலை மிகவும் வீரியமாக தாக்கியதால் இளம், நடுத்தரவயதினர் பலரும் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து மத்திய அரசு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமே இலவச தடுப்பூசி கிடைக்க வகைசெய்தது. நாடு முழுவதும் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்கள் நடந்து வந்தன. இதன் ஒருபகுதியாக தமிழகத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. குமரி மாவட்டத்தில் இதற்கான பணிகள் மிகத் தீவிரமாக நடந்து வருகின்றன. இதுதொடர்பாக கிராமப் பஞ்சாயத்துகளின் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தை நடத்திய மாவட்ட ஆட்சியர் அரவிந்த், இதுவரை தடுப்பூசி போடப்படாதவர்களின் பட்டியலை அவர்கள் மூலமாக சேகரிக்க உத்தரவிட்டுள்ளார்.

நாகர்கோவில் மாநகராட்சியில் மட்டும் நாளை 50 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடக்கின்றது. இதில் கோவேக்சின், கோவிஷீல்டு இரு தடுப்பூசிகளும் இருக்கும். இதில் முதல் டோஸ், 2-வது டோஸ் இரண்டுமே செலுத்திக்கொள்ள முடியும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 95 ஊராட்சி, 55 பேரூராட்சி, 3 நகராட்சிகள், நாகர்கோவில் மாநகராட்சியிலும் இந்த மெகா முகாம் நடக்கிறது. இந்த முகாமில் காலை 7 முதல் இரவு 7 மணிவரை தடுப்பூசி போடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களுக்கு அறிவிப்பு கொடுக்கும்வகையில் வாகன பிரச்சாரமும் நடந்து வருகிறது.

இதுகுறித்து குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் செய்தியாளர்களிடம் கூறும்போது, “குமரி மாவட்டத்தில் 625 மையங்களில் இந்த முகாம் நடக்கிறது. குமரியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 15 லட்சம் பேர் இருக்கிறார்கள். இதுவரை 8 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்களைக் கண்டுபிடித்து தடுப்பூசி செலுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE