துண்டு பிரசுரம் மூலம் வாக்குகளை அதிகரித்த நாம் தமிழர் கட்சி @ திண்டுக்கல் தொகுதி

By KU BUREAU

திண்டுக்கல்: திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் கிராமப்புறங்களில் வீடு வீடாகச் சென்று 6 லட்சம் துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் வழங்கியதன் பலனாக, கடந்த தேர்தலைவிட நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. திண்டுக்கல் மக்களவை தொகு தியில் பிரதான கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்னரே, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக நிரஞ்சனா அறி விக்கப்பட்டு பிரச்சாரத்தையும் தொடங்கி வலம் வந்தார்.

ஆனால், திடீரென அவர் மாற்றப்பட்டு மருத்துவர் கயிலை ராஜன் வேட்பாளராக அறிவிக்கப் பட்டார். இவர் வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகும்கூட, நாம் தமிழர் கட்சிக்கு எந்தச் சின்னம் என தெரியாத நிலை இருந்தது. இதனால், பிரச்சாரத்தைத் தொடங் காமல் இருந்தார். ஒரு வழியாக `மைக்' சின்னம் கிடைத்த பிறகு தனது பிரச்சாரத்தை திண்டுக்கல்லில் இருந்து தொடங்கினார். பிரச்சாரம் தொடங்கியது மட்டுமே வெளியில் தெரிந்த நிலையில், வேட்பாளர் எந்தப் பகுதியில் பிரச்சாரம் செய்து மக்களைச் சந்திக்கிறார் என்பதுகூட தெரியாத வகையில் நாம் தமிழர் கட்சியினரின் பிரச்சாரம் இருந்தது.

திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட், எஸ்.டி.பி.ஐ., பா.ம.க., வேட்பாளர் களின் பிரச்சாரங்கள் களைகட்டிய நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களத்தில் இருக்கிறாரா என்ற கேள்வியும் தொகுதி மக்கள் மத்தியில் எழுந்தது. கயிலை ராஜன்இதனால், கடந்த 2019 தேர்தலில் வாங்கிய வாக்குகள்கூட நாம் தமிழர் கட்சிக்கு 2024 தேர் தலில் கிடைக்காது என்ற நிலை இருந்தது. ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக கடந்த 2019 தேர்தலைவிட 2024 தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்துள்ளன.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிட்டார். வித்தியாசமாக மக்களிடம் பிரச்சாரம் செய்து அவர் வாங்கிய வாக்குகள் 54,957. ஆனால் தற்போது நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட மருத்துவர் கயிலைராஜன் பிரச்சாரம் செய்கிறாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் இவர் வாங்கிய வாக்குகள் 97,845. கடந்த தேர்தலைவிட 45 ஆயிரம் வாக்குகள் அதிகரித்துள்ளன.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: பிரதான கட்சிகளைப் போல் எங்கள் கட்சிக்கு சின்னம் முன்னரே தெரிந்துவிடவில்லை. வேட்புமனுத் தாக்கல் செய்யும் வரை சின்னம் தெரியவில்லை. சின்னம் பெறப் பட்ட பின் பிரச்சாரத்துக்கு குறுகிய நாட்களே இருந்ததால் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க கடு மையாக உழைத்தோம். கட்சித் தலைமையில் இருந்து ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒரு லட்சம் வீதம் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு 6 லட்சம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இதை அந்தந்த தொகுதி பொறுப்பாளர்களிடம் கொடுத்து வீடு வீடாகச் சென்று சேர்க்கச் செய்தோம். ஒரு கிராமத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஒரு சிலர் இருந்தாலும், கட்சிக் கொடியைப் பிடித்துக்கொண்டு வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை முழுமையாக வழங்கினர். வேட்பாளர் ஒருபுறம் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும், வேட்பாளரை எதிர்பார்க்காமல் கட்சி யினர் அந்தந்தப் பகுதியில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தனர்.

துண்டுப் பிரசுர விநி யோகமே, நாங்கள் கடந்த தேர் தலைவிட ஒரு மடங்கு அதிகமான வாக்குகளைப் பெற்றுத் தந்தது, என்று கூறினர்.
பிரதானக் கட்சிகள் வாக்காளர் களைக் கவர அன்பளிப்பு, பணம் என பல்வேறு உத்திகளை கையாண்ட நிலையில், துண்டுப் பிரசுரங்களைக் கொண்டே கடந்த தேர்தலைவிட அதிக வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது மற்ற கட்சியினரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE