புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற சுயேச்சை எம்எல்ஏவும் பொது நல அமைப்பினரும் அரசை வலியுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு நடக்கிறது. இதில் சுயேச்சை எம்எல்ஏ நேரு முதல்வர் ரங்கசாமிக்கு ஆதரவு அளித்து வருகிறார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எம்எல்ஏ நேரு மற்றும் பொது நல அமைப்புகள் இணைந்து இண்டியா கூட்டணிக்கு ஆதரவாக காங்கிரஸுக்கு பிரச்சாரம் செய்தனர். இந்நிலையில் பொதுநல அமைப்பினருடன் இணைந்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எம்எல்ஏ நேரு, “மாநில அந்தஸ்து கேட்டு மத்திய அரசை வலியுறுத்தி அனைத்து எம்எல்ஏ-க்களையும் டெல்லிக்கு முதல்வர் அழைத்துச் செல்லவில்லை. அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டவில்லை. பொது நல அமைப்புகளின் கூட்டத்தையும் கூட்டி ஆலோசிக்கவில்லை.
அதேபோல் நிதி கமிஷனில் புதுச்சேரி மாநிலத்தை இணைக்காதது, கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்காதது, மின்துறையை தனியாருக்கு தாரைவார்க்க அரசு முடிவெடுத்தது ஆகியவற்றால் மக்களின் வெறுப்புக்கு ஆளும் அரசு ஆளாகி தேர்தலில் தோல்வியடைந்துள்ளது. பிரதமர் மோடி பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றுவேன் என்று வாக்குறுதியளித்திருந்தார். ஆனால், இன்று புதுச்சேரி அனைத்து விதத்திலும் வொர்ஸ்ட் புதுச்சேரியாக மாறிவருகிறது. இதை தடுக்க இந்த அரசு தவறிவிட்டது.
எல்லா துறைகளிலும் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரும் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடந்தது, ரேசன் கடைகளை திறக்காமல் மெத்தனமாக இருந்தது, புதிய கல்வி கொள்கையை திணித்தது, சுகாதாரமான குடிநீர் வழங்க முன்னேற்பாடுகளை செய்யாமல் மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதியளித்தது,
» மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்களை சந்திக்கச் சென்ற புதிய தமிழகம் கட்சி வழக்கறிஞர்கள் தடுத்து நிறுத்தம்
» மழைநீர் வரத்தால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீர் இருப்பு உயர்வு
ரெஸட்ரோ பார்களை குடியிருப்புகளுக்கு மத்தியில் திறந்தது, அரசு ஊழியர்களின் பதவி உயர்வில் தொடர்ந்து துரோகம் இழைத்தது, கோயில் சொத்துகளை பாதுகாக்கத் தவறியது, விமான நிலைய விரிவாக்கத்திற்கு எந்தவொரு முன்னேடுப்பு களையும் செய்யாதது, மூடப்பட்ட பஞ்சாலை களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் திறந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்காதது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், கூலிப்படை கலாச்சாரம் போன்ற சட்டவிரோத செயல்களை கட்டுபடுத்த தவறியது உள்ளிட்ட காரணங்களால் மக்களின் வெறுப்புக்கு இந்த அரசு ஆளாகி தோல்விக்கு உள்ளாகி உள்ளது.
இதே செயல்கள் மீண்டும் தொடர்ந்தால் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய பாடத்தை மக்கள் புகட்டுவார்கள். மத்திய பாஜக அரசு ஆந்திராவுக்கும், பிஹாருக்கும் சிறப்பு அந்தஸ்து கொடுப்பதாக உறுதியளித்துள்ளதாக தெரிகிறது. எனவே இதனை பயன்படுத்தி புதுச்சேரிக்கும் மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும். அதே சமயம் எதிர்கட்சியாக இருக்கும் இண்டியா கூட்டணி கட்சி தலைவர்களும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்து மற்றும் மாநில நலன்களுக்கு நாடாளுமன்றத்திலும், பொது வெளியிலும் குரல் எழுப்ப வேண்டும்” என்றார்.