குப்பைகள் அகற்றும் நிறுவனத்துக்கு நிதி வழங்கும் கோப்பினை நிறுத்தி வைத்த புதுச்சேரி ஆளுநர்!

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: குப்பைகள் அகற்றும் நிறுவனத்துக்கு நிதி வழங்கும் கோப்பை நிறுத்தியுள்ளதாக, துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். எதைப் பற்றியும் அக்கறை இல்லாமல் கோப்பு அனுப்புவார்கள், அதில் ஆளுநர் கையெழுத்திடுவார் என்று நினைப்பது நல்ல நடைமுறையா என சிந்திக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரியில் குப்பைகள் சரியாக அள்ளுவதில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக நிலவுகிறது. ஆனால் தொடர்ந்து இக்குற்றச்சாட்டு தொடர்பாக ஆளுநர், புதுச்சேரி அரசு என பல தரப்பினரிடமும் தொடர் புகார்கள் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் புதுவை கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லுாரி கலையரங்கில் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து காவல்துறை, சட்டத்துறை அதிகாரிகளுக்கான 2 நாள் பயிற்சி முகாம் நடக்கிறது. முகாமை துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “மகத்தான மாநிலமாக புதுச்சேரி மாறவேண்டும். நேற்று என்னிடம் ஒரு கோப்பு வந்தது. நகரை சுத்தம் செய்ய தொகையை ஒதுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருநத்து. என்னிடம் வரும் கோப்பை காத்திருக்க வைத்திருக்க விருப்பமில்லாதவன் நான். எனினும் இந்த கோப்பை நிறுத்தி வையுங்கள் என தெரிவித்துவிட்டேன். நகரை சுற்றி வாருங்கள், எங்காவது ஒரு வீதியில் குப்பை இல்லாமல் இருந்தால் கோப்புக்கு ஒப்புதல் தரலாம் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தேன்.

நகர பகுதியில் எங்காவது குப்பைகள் இல்லாமல் இருந்தால் கையெழுத்து போடுகிறேன் என கூறினேன். இது ஏன் என்று புரிவதில்லை. வீதியில் குப்பை அகற்றி சேகரிக்கதான் நிறுவனத்துக்கு நிதி தரப்படுகிறது. எதைப்பற்றியும் அக்கறை இல்லாமல் கோப்பு அனுப்புவார்கள், அதில் ஆளுநர் கையெழுத்திடுவார் என நினைப்பது நல்ல நடைமுறையா என சிந்திக்கவேண்டும்.சில நேரங்களில் கடுமையாக இருந்தாக வேண்டும். இது பிறர் மனதை புண்படுத்த அல்ல, பண்படுத்த வேண்டும் என்பதற்குத்தான். மகத்தானதாக புதுவை மாறும், மகத்தானதாக பாரத தேசம் மாறும்” என்று அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE