கரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை தொடங்கும் வாய்ப்பு இருப்பதாக வந்திருக்கும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைத்து வழிபட தமிழக அரசு தடைவிதித்துள்ளது.
அண்மையில் சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ-வான எம்.ஆர்.காந்தி, தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று சிலைவைத்து வழிபட அனுமதிக்க வேண்டும் என்று பேசினார். இதற்கு பதில் சொன்ன இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, மத்திய அரசின் கரோனா விதிமுறைகளைச் சுட்டிக்காட்டிப் பேசினார். இந்நிலையில் பாஜக உள்ளிட்ட கட்சிகளும், இந்து அமைப்பினரும் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதிக்கக் கேட்டு தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்து முன்னணியினர் ஏற்கெனவே, கோயில் வாசலில் நின்று கடவுளிடம் முறையிடும் போராட்டத்தை நடத்தினர்.
இந்த நிலையில் இன்று நெல்லையில் இந்து மக்கள் கட்சியினர் வித்தியாசமான முறையில், மனு கொடுக்கும் நிகழ்வை நடத்தினர். திங்கள்கிழமைகளில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பொதுமக்களின் குறை கேட்கும் மனுநீதி நாள் கூட்டம் நடைபெறும். இப்போது, கரோனா சூழலால் பொதுமக்கள் நேரடியாக மனு கொடுப்பதற்குப் பதிலாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதில் தங்கள் மனுக்களைப் போடுகின்றனர். அந்தவகையில் இன்று இந்து மக்கள் கட்சியின் நெல்லை மாவட்ட நிர்வாகி உடையார் தலைமையில், நெல்லை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அக்கட்சியின் நிர்வாகிகள் விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைத்து வழிபட அனுமதிக்கக்கேட்டு மனு போட்டனர்.
மனுகொடுக்க வந்தவர்கள் கையில் விநாயகர் சிலையுடன் வந்தனர். அந்த மனுவை விநாயகரின் துதிக்கையில் வைத்து அவர் மூலமே பெட்டியில் போட்டனர். ஆட்சியருக்கு விநாயகரே மனு போட்ட சம்பவத்தை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தோர் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.