திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?

By கே.எஸ்.கிருத்திக்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, இன்று (06.09.2021) மாற்றுத்திறனாளிகள் காத்திருக்கும் போராட்டம் நடத்தினார்கள். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் நடந்த இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் ஒன்றிய தலைவர் கே.வேலுச்சாமி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கே.என்.எம்.நாகராஜ், மாவட்ட தலைவர் கே.தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டம் குறித்து மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் பேசுகையில், ”மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வழங்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. ஆனால், பல ஊர்களில் அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. மாற்றுத்திறனாளிகள் 4 மணி நேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் என்ற விதியை அமல்படுத்த வேண்டும். சுழற்சி முறையில் இல்லாமல் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். இதை எல்லாம் ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் இன்னமும் அமல்படுத்தவில்லை. ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களையும் மாற்றுத்திறனாளிகள் சென்றுவர ஏதுவாக தடையில்லாச் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று கோரி, கடந்த பிப்ரவரி 2-ம் தேதியே போராட்டம் நடத்தினோம். ஆனாலும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவில்லை.

40 சதவீதம் ஊனமுற்றிருந்தாலே தெலங்கானாவில் மாதம் ரூ.3,016-ம், புதுச்சேரியில் ரூ.3,800-ம் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ரூ.5,000 வழங்க வேண்டும் என்று எங்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.1,500 ஆக உயர்த்துவோம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால், இந்த நிதிநிலை அறிக்கையில் அதுபற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடாதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. குறைந்தபட்சம் முதல்வராவது, 110 விதியின்கீழ் இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிவதற்குள் குறைந்தபட்ச ஊக்கத்தொகை உயர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும்” என்றார்.

இதைத் தொடர்ந்து, பெரியகுளம் கோட்டாட்சியர் ரிஷப் ஐ.ஏ.எஸ். ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலத்துக்கு வந்து போராடிய மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு வாரத்தில் அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளைச் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட ஆர்டிஓ, அடுத்த வாரம் மீண்டும் இங்கே வந்து பணிகளை ஆய்வு செய்வேன் என்றும் எச்சரித்தார். இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், திமுக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தாவிட்டால், மீண்டும் போராட்டம் நடைபெறும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE