அறிகுறி இருந்தால் மாணவர்கள் தொற்றுப் பரிசோதனைக்கு தயங்கக்கூடாது!

By காமதேனு டீம்

‘பள்ளி - கல்லூரிகளில் தொற்று அறிகுறி உள்ளவர்கள் தயங்காமல் வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’ என்று கோவை ஆட்சியர் சமீரன் அறிவுறுத்தியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் இதுகுறித்து கூறும்போது,

‘‘கேரளாவிலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு வருகைதரும் மாணவ- மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் வாயிலாக தொற்று பரவ வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கையாக 2000- க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதனை செய்ததில் யாருக்கும் தொற்றுப்பரவல் ஏற்படவில்லை. யாருக்கும் தொற்றின் அறிகுறிகள் இல்லாத போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பிலிருந்தே பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதே இடத்திலே தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டது. இம்முகாம்களில் பெரும்பாலான பெற்றோர்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர்.

கோவை மாவட்டத்தில் திரவ ஆக்ஸிஜன் கொள்ளளவு 50 கிலோ லிட்டர் இருந்தது. தற்போது 83 கிலோ லிட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. அதுதவிர தற்போது ஆக்ஸிஜன் உற்பத்தி அளவும் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, யாரும் அச்சப்பட தேவையில்லை. பள்ளி, கல்லூரிகளில் அறிகுறி இருப்பவர்கள் தயங்காமல் வந்து பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். அவ்வப்போது எடுக்கப்படும் தொற்றுப் பரிசோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE