கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் தொடர்ச்சியாக திருட்டுச் சம்பவங்கள் நடந்த வண்ணம் இருந்தன. அந்தத் திருட்டுக்கள் பெரும்பாலும் ஒரே பாணியில் இருந்ததால், கோயில் திருடனைப் பிடிக்க போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று கோயில் திருடன் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளான். அவனிடம் இருந்து சுமார் எட்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலான கோயில் பொருட்கள் மீட்கப்பட்டன.
கோயில்களில் நடந்த தொடர் திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடைய கொள்ளையனை விரைந்துபிடிக்க, கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. குளச்சல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் ஆய்வாளர் தங்கராஜ், உதவி ஆய்வாளர்கள் ஜான்போஸ்கோ, சரவணகுமார், சுந்தர் மூர்த்தி ஆகியோரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் முதலில் ஒரே மாதிரியாய் நடந்திருக்கும் திருட்டுகளையும், அதில் கிடைத்த தடயங்களையும் ஆய்வு செய்தனர். மேல் விசாரணையில், திருடுபோன பொருட்கள் வெளி வியாபாரிகள் சிலருக்கு விற்கப்பட இருந்ததையும் புலனாய்வு செய்து கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் குருந்தன்கோடு ஆசாரிவிளை சந்திப்பில் வைத்து, சரல் பகுதியைச் சேர்ந்த அனிஷ்ராஜ் (33) என்பவனை இன்று போலீஸார் கைது செய்தனர். அவன் மீது இரணியல் காவல் நிலையத்தில் 10 வழக்குகளும், மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் 4 வழக்குகளும், வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் 3 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இதேபோல் சுசீந்திரம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், ஆசாரிபள்ளம் காவல் நிலையத்தில் ஒருவழக்கும் உள்ளது. கைது செய்யப்பட்ட அனிஷ் ராஜ் வீட்டிலிருந்து 600 கிலோ வெண்கலப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இதோடு, ரூ.60 ஆயிரம் ரொக்கம், 16 கிராம் தங்க நகைகளும் ஆக மொத்தம் ரூ.8,60,000 மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.