கல்யாண் சிங்கை கொண்டாடும் பாஜக!

By ஆர். ஷபிமுன்னா

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், வெற்றி பெறுவதற்கான சூத்திரங்களை அரசியல் கட்சிகள் கைக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. உபி அரசியலைத் தீர்மானிப்பதில் சாதியும் மதமும் பிரதான அம்சங்களாகப் பார்க்கப்படும் நிலையில், இதர பிற்படுத்தப்பட்டோரின் (ஓபிசி) வாக்குகளைக் கவர்வதற்கான சூத்திரங்களை வகுக்கத் தொடங்கியிருக்கிறது பாஜக.

அதற்காக, மறைந்த முன்னாள் முதல்வரும், இமாசல பிரதேசத்தின் முன்னாள் ஆளுநருமான கல்யாண் சிங்கின் பெயரைப் பயன்படுத்துவதில் அக்கட்சி தீவிரமாக இறங்கியிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலைவரான கல்யாண் சிங்கின் அரசியல் பிம்பத்தை முன்வைப்பதன் மூலம், முன்னேறிய சமூகத்தினருக்கான கட்சி எனும் பிம்பத்தைத் தகர்த்து ஓபிசி வாக்குகளை அள்ளுவது பாஜகவின் திட்டம்.

ஆயுதமாகியிருக்கும் கல்யாண் சிங்

2017 சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க மோடி அலை பெருமளவில் உதவியது. மோடி இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், முன்னேறிய சமூகத்தினரின் வாக்குகளுடன் இதர பிற்படுத்தப்பட்டவர்களின் வாக்குகளும் பாஜகவுக்கு அதிகமாகக் கிடைத்தன.

எனினும், யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு, ஓபிசி மக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவில்லை எனும் விமர்சனங்கள் எழுந்தன. முதல்வர் யோகி ஆதித்யநாத், தான் சார்ந்த தாக்கூர் சமூகத்துக்கும், பிராமணர்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதாக விமர்சிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பில் ஓபிசி சமூகத்தினருக்கு உரிய இடஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்தப்படுவதில்லை என்றும்கூட புகார்கள் உண்டு.

இவற்றை முன்வைத்து அகிலேஷ் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி, இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் ஆதரவைத் திரட்ட தீவிரம் காட்டுகிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், காங்கிரஸும்கூட ஓபிசி ஆதரவு அரசியலில் இறங்கியுள்ளன. இச்சூழலில் ஓபிசியினரின் வாக்குகளை மீட்டெடுக்க, கல்யாண் சிங்கின் பெயரை முக்கிய ஆயுதமாகக் கருதுகிறது பாஜக.

யாருக்கும் கிடைக்காத முக்கியத்துவம்

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கல்யாண் சிங், கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி மறைந்தார். அவரது உடலுக்குப் பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்களான அமித்ஷா, ராஜ்நாத் சிங், பாஜகவின் தேசியத் தலைவரான ஜே.பி.நட்டா என முக்கியத் தலைவர்கள், கல்யாண் சிங்கின் சொந்த மாவட்டமான அலிகரில் நடந்த இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள நேரில் வந்திருந்தனர். தொடர்ந்து 3 நாட்கள் இந்தி செய்திச் சேனல்களில், இந்துத்துவா தலைவராக கல்யாண் சிங் முன்னிறுத்தப்பட்டார்.

இதுவரையிலும் எந்தத் தலைவருக்கும் இல்லாத வகையில் இறுதிச்சடங்கு முடியும் முன்பாகவே, அயோத்தியின் முக்கிய சாலைக்கு ‘கல்யாண் சிங் மார்க்’ எனப் பெயரிடப்பட்டது. மேலும், அயோத்தியில் அவரது சிலை அமைக்கவும் திட்டமிடப்படுகிறது. இந்த அளவிலான முக்கியத்துவம், பாஜகவில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எந்தத் தலைவருக்கும் கிடைத்ததில்லை.

உபி-யில் பாஜகவை வளர்த்தவர்

ஓபிசி மக்களின் ஆதரவைப் பெறுவதற்காகக் கல்யாண் சிங்கை பாஜக முன்னிறுத்துவது, இது முதல்முறையல்ல. உயர் சமூகங்களின் கட்சியாக உபியில் களம் இறங்கிய பாஜகவுக்கு, ஓபிசியினரின் ஆதரவு அபரிமிதமாகக் கிடைக்கக் காரணமாக இருந்தவர் கல்யாண் சிங். அவரது தீவிர இந்துத்துவக் கொள்கையால் பிற்படுத்தப்பட்டோர் ஆதரவையும் பெற்று, உபியில் தனது கால்களை ஆழமாகப் பதித்தது பாஜக. லோதி சமூகத்தைச் சேர்ந்த தலைவரான கல்யாண் சிங், உபி முதல்வராக்கப்பட்டார். அவரது ஆட்சியில்தான் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. கல்யாண் சிங்கின் தீவிர இந்துத்துவா முகத்தினால், அப்போது வீசிய மண்டல் புயலில் பாஜக, ‘கமண்டல’ அரசியலை அறிமுகப்படுத்தியது. இதற்கு, லோதி சமூகத்தைச் சேர்ந்த மற்றொரு தலைவரான உமா பாரதியும் பாஜகவுக்குப் பக்கபலமாக இருந்தார்.

இந்த நிகழ்வுகளை தம் கட்சியின் அரசியல் வரலாற்றில் பதிவுசெய்து, கல்யாண் சிங்கை மீண்டும் முன்னிறுத்துகிறது பாஜக. யோகி தலைமையிலான ஆட்சியில், ஓபிசி மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் எனும் விமர்சனம் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவிட்டது. இதை எப்படிச் சமாளிப்பது எனக் கையைப் பிசைந்துகொண்டிருந்த பாஜக, கல்யாண் சிங்கின் மறைவுக்குப் பின்னர், அவரை முன்னிறுத்தி உத்வேகத்துடன் செயல்பட்டுவருகிறது. இத்தனைக்கும் கல்யாண் சிங் 2 முறை பாஜகவிலிருந்து வெளியேறியவர். அப்போதெல்லாம் பாஜகவைக் கடுமையாக விமர்சித்தவர்.

2009 மக்களவைத் தேர்தலில், சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவளித்தார் கல்யாண் சிங். அந்தத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்குக் கிடைத்த தோல்வி, அவருக்கும் முலாயம் சிங் யாதவுக்கும் இடையில் கசப்புணர்வை ஏற்படுத்தியது. ‘கல்யாண் சிங்குடன் கைகோர்த்ததுதான் தான் செய்த தவறு’ என்று முலாயம் சிங் சாடினார். இத்தனைக்கும் கல்யாண் சிங்கின் மகன் அந்தத் தேர்தலுக்கு முன்னர் சமாஜ்வாதி கட்சியிலேயே சேர்ந்திருந்தார்.

இந்தச் சூழலில், முலாயம் சிங்கின் மகனும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் சிங் யாதவ், கல்யாண் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்தச் செல்லவில்லை. அவரது வழியில் காங்கிரஸும் கல்யாண் சிங் மறைவுக்கு நேரில் செல்லவில்லை. ஆகஸ்ட் 31-ல், லக்னோவில் பாஜக சார்பில் நடந்த அஞ்சலி கூட்டத்தில் பகுஜன் சமாஜ் தவிர வேறு எந்த எதிர்க்கட்சியும் பங்கேற்கவில்லை. கல்யாண் சிங்கின் மரணத்துக்குப் பின்னரும்கூட, இந்தக் கட்சிகள் விலகியிருப்பது முஸ்லிம்களின் வாக்குகளைக் கவரும் முயற்சி என பாஜக விமர்சிக்கிறது.

சமாஜ்வாதியின் முக்கிய வாக்காளர்களான யாதவர்கள் தவிர்த்து, மீதம் உள்ள ஓபிசியினரை மற்ற கட்சிகளும் குறிவைத்துள்ளன. 2017 உபி சட்டப்பேரவைத் தேர்தல், 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது. இதற்கு உதவிய, ஓம் பிரகாஷ் ராஜ்பரின் சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி உள்ளிட்ட ஓரிரு கட்சிகள் தற்போது பாஜகவிடமிருந்து விலகிவிட்டன. உடனிருக்கும் ஓபிசி ஆதரவுக் கட்சிகளும் அதிகத் தொகுதிகள் கேட்டு பாஜகவை மிரட்டிவருகின்றன. இச்சூழலில் தான் 2022 சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க பாஜக, மீண்டும் கல்யாண் சிங் என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது. அந்த ஆயுதம் கைகொடுக்கிறதா, கையைக் கிழிக்கிறதா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பெட்டிச் செய்தி:

கல்யாண் சிங் கடந்துவந்த பாதை

பள்ளிப் பருவத்திலிருந்து ஆர்எஸ்எஸ் அமைப்பில் அங்கம் வகித்தவர் கல்யாண் சிங். 1967 முதல் 2002 வரை பாரதிய ஜன சங்கத்திலும் பிறகு, பெயர் மாறிய பாஜக மற்றும் தனது புதிய கட்சியின் சார்பிலும் போட்டியிட்டு 9 முறை எம்எல்ஏ-வாக இருந்தவர். 1991-ல் பாஜக முதல்வராக பதவி வகித்தவர், பாபர் மசூதி இடிப்பு சம்பவத்துக்குப் பின்னர் ராஜினாமா செய்தார். மீண்டும் 1997-ல் முதல்வரானவர், அடுத்த 2 வருடங்களில் பாஜக தலைமையால் பதவி இறக்கப்பட்டார்.

இதனால், கட்சியிலிருந்து வெளியேறிய கல்யாண் சிங், மீண்டும் 2004-ல் பாஜகவில் இணைந்தார். புலந்த்ஷெஹர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு எம்பி-யானவர், 2-வது முறையாக பாஜகவிலிருந்து வெளியேறினார். மீண்டும் 2014-ல் பாஜகவில் இணைந்தவர், ராஜஸ்தான் ஆளுநராக அமர்த்தப்பட்டார். ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற காலகட்டத்தில், பாபர் மசூதி உடைப்பு வழக்கிலும் விடுவிக்கப்பட்டார். அவரது மகன் ராஜ்வீர் சிங் மக்களவை எம்பி-யாகவும், பேரன் சந்தீப் சிங் உபி எம்எல்ஏ-வாகவும் உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE