மாநில ஆளுநர் முதல் மத்திய அமைச்சர் வரை...

By கா.சு.வேலாயுதன்

‘‘நீங்க கட்சியில் சீனியர். 2 தடவை எம்பி-யா இருந்திருக்கீங்க. மாநிலத் தலைவராகவும் இருந்தீங்க. ஆனா உங்களுக்குப் பின்னாடி வந்த தமிழிசை, இல.கணேசன் கூட மாநில ஆளுநர் ஆகிட்டாங்க. சட்டமன்றத் தேர்தலில் தோற்றுப்போன எல்.முருகனைக்கூட மத்திய இணை அமைச்சராக்கிட்டாங்க. நீங்க இன்னமும் அரசாங்கப் பதவி ஒண்ணும் இல்லாம இருக்கீங்களே... நல்லாவா இருக்கு? தமிழிசை, புதுச்சேரிக்கு கூடுதல் பொறுப்பா தான் இருக்காங்க. அதையாவது உங்களுக்குக் கேட்டு வாங்குங்களேன்!’’

சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் ஒருவரைச் சந்தித்த மாற்றுக்கட்சி அரசியல் பிரமுகர் இப்படித்தான் கேட்டார். கேட்டவர் யார், எந்தக் கட்சி என்பது முக்கியமல்ல. இந்தக் கேள்விகளை எதிர்கொண்டவர் பாஜகவின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர், கேரள மாநில பாஜக மேலிடப் பார்வையாளர் எனப் பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் சிபிஆர் எனப்படும் சி.பி.ராதாகிருஷ்ணன்.

இந்தக் கேள்விக்கு சிபிஆர் என்ன பதில் சொல்லியிருப்பார் என்பதெல்லாம் இங்கே சொல்ல வேண்டியதில்லை. இப்போது தமிழக பாஜகவில் சிபிஆர் மட்டுமல்ல... அவருக்கு இணையாக உள்ள முதல்கட்ட தலைவர்கள் பலர், தங்களது அரசியல் நண்பர்களைச் சந்திக்கும்போது இம்மாதிரியான கேள்விகளைத்தான் சந்தித்துவருகின்றனராம்.

எல்.முருகன்

‘‘இன்னும் பாஜக ஆட்சி ஒன்றரை வருஷம்தான் இருக்கு. இப்போதைக்கு தமிழ்நாட்டில் நாம் ஒன்றும் ஜெயிக்கப் போறதில்லை. ஆனா, மோடி ஒரு விஷயத்தை ஸ்ட்ராங்கா செஞ்சுட்டு வர்றார். பாஜக ஆளாத மாநிலங்களில் எல்லாம் நம்ம செல்வாக்கை நிலைநாட்டணும். குறிப்பா, தமிழகத்தில் நம்ம கொடி பறக்கணும்னு தீவிரமா செயல்பட்டு வர்றார். அதுக்காகத்தான் தமிழிசை, இல.கணேசன் ஆகியோரை ஆளுநர்களாக்கி, எல்.முருகனை மத்திய இணை அமைச்சராக்கி தேர்தலில் தோற்றாலும் தகுதியான நபர்களுக்கு எல்லாம் அரசுப் பதவியா கொடுத்துட்டு வர்றார். 2024 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழகம் தங்களை முழுமையாக ஆதாரிக்காவிட்டாலும் தமிழகத்துக்காக தாங்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம் என்பதைப் பட்டியலிட நினைக்கிறார் மோடி. அதற்காக தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசுப் பதவிகளில் தாராளம் காட்டுகிறார். இதைத் தெரிந்துகொண்டு தமிழக பாஜக முன்னணித் தலைவர்கள் பலரும் அரசாங்கப் பதவிக்காக டெல்லியிலேயே முகாமிட்டிருக்கிறார்கள்” என்கிறார் கொங்கு மண்டல பாஜக பிரமுகர் ஒருவர்.

தமிழிசை சவுந்தரராஜன்

“அப்படி யாரெல்லாம் அரசுப் பதவிக்கு குறிவைத்து காய் நகர்த்துகிறார்கள்” என்று அவரைக் கேட்டபோது, “யாரெல்லாம் இல்லை என்று கேளுங்கள்; பொருத்தமாக இருக்கும்’’ என்று சொல்லிச் சிரித்தவர், மேலும் சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“சிபிஆர் ஏற்கெனவே கயிறு வாரியத் தலைவராக இருந்தவர். அந்தப் பதவியைத் திரும்ப வாங்க முயற்சித்தார். ஆனால், அந்தப் பதவிக்கு ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோற்ற ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட குப்புராமு நியமிக்கப்பட்டுவிட்டார். எனவே, இப்போது மாநிலங்களவை எம்பி-யாக முடியுமா, ரயில்வே துறை, கப்பல் போக்குவரத்து போன்ற துறைகளில் ஏதாவது ஒன்றில் முக்கியப் பொறுப்பு கிடைக்குமா என்று டெல்லி தலைவர்களை சுற்றிச் சுற்றி வருகிறார் சிபிஆர். புதுச்சேரி ஆளுநர் பதவி மீதும் அவருக்கு ஒரு கண் இருக்கிறது.

அடுத்ததாக எச்.ராஜா. தமிழ்நாட்டு அரசியலில் இந்துத்வா கொள்கைகளுக்கு இடையூறு என்றால், ஒலிக்கும் முதல் குரல். அவர் மத்திய அரசுப் பதவியில் இல்லை என்பது ஆர்எஸ்எஸ், பாஜக கொள்கைக்கே இழுக்கு. எனவே, “நிச்சயம் சிபிஆர் குறி வைக்கும் பதவிகளிலேயேகூட ஒன்று. கூடிய விரைவில் அண்ணாவுக்குக் கிடைக்கலாம்” என்கிறார்கள் ராஜாவின் விசுவாசிகள். ஆனால், அடுத்தடுத்து தேர்தலில் தோல்விமுகம் கண்டு வரும் ராஜா, தேர்தலுக்காக தலைமை கொடுத்த பணத்தை முறையாகச் செலவழிக்காமல் மடைமாற்றிவிட்டார் என்ற குற்றச்சாட்டில் சிக்கி இருப்பதால், அவருக்கு அரசுப் பதவி சாத்தியமாகாது என்று அடித்துச் சொல்கிறது ராஜாவின் எதிர்முகாம்.

இல.கணேசன்

இதற்கடுத்தது பொன்.ராதாகிருஷ்ணன். தமிழகத்தில் பாஜக காணாமல் போயிருந்த காலத்தில்கூட கட்சிக்கு மரியாதை ஏற்படுத்தித் தந்தவர். இரண்டு முறை அமைச்சர். இப்போது எதிர்பார்த்துக் காய் நகர்த்துவது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு. கூடவே அமைச்சர் பதவிக்கும்!

அரசுப் பதவிக்காக வரிசை கட்டுவோரில் லேட்டஸ்டாக குஷ்புவும் இணைந்திருக்கிறார். எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும், சொல்லாமல் கொள்ளாமல் அவர் ஆஜர் ஆவதே அதற்காகத்தான் என்கிறார்கள். தமிழக பாஜக ஆசி யாத்திரை கோவையில் தொடங்கியபோது, திடீர் விஜயமாய் மேடைக்கு வந்து எந்த அலட்டலும் காட்டாமல் போனதும் அப்படித்தான். முன்பைவிட இப்போது குஷ்புவை டெல்லி பக்கம் அடிக்கடி காண முடிகிறது. இதைவைத்து, குஷ்பு மத்திய அமைச்சர் ஆகப் போகிறார்... தமிழக பாஜக தலைவராகப் போகிறார் என்றெல்லாம் அவரவர் இஷ்டத்துக்கு அள்ளிவிடுகிறார்கள்” என்று சிரித்தார் அந்த பாஜக பிரமுகர்.

மத்திய அரசுப் பதவிக்காக போட்டிபோடுவோர் பட்டியலில், கோவை தெற்குத் தொகுதி எம்எல்ஏ வானதியும் வருகிறார் என்பதுதான் வேடிக்கை. “அவர்தான் அகில இந்திய பாஜக மகளிர் அணித் தலைவராக உள்ளார், எம்எல்ஏ-வும் ஆகிவிட்டாரே... அப்புறம் என்ன?” என்று கேட்டால், அதற்கு இப்படிப் பதில் வருகிறது:

‘‘அவர் கஷ்டப்பட்டு எம்எல்ஏ ஆனது உண்மைதான். ஆனால், சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஜெயிக்கும். தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமையும். அப்படி அமைந்தால் அமைச்சர்... ஏன், துணை முதல்வர் பதவிக்கே அடி போடலாம் என கனவு கொண்டிருந்தார் வானதி. ஆனால், அது நடக்கவில்லை. இருந்தாலும் தேர்தலில் போட்டியிட்டு தோற்ற முருகன், அண்ணாமலை போன்றவர்கள் எல்லாம் முக்கிய பதவிகளுக்கு வரும்போது தமிழகத்தில் தனக்கு எம்எல்ஏ பதவி மட்டும் எம்மாத்திரம் என்பதே வானதியின் இப்போதைய பிரச்சினை. இந்தப் பதவியுடன் மத்திய அரசு அந்தஸ்து கொண்ட இன்னொரு முக்கிய பதவியையும் எதிர்பார்க்கும் அவர், அதற்கு தனது நெருங்கிய தோழி நிர்மலா சீதாராமன் உதவி செய்வார் என்று நம்புகிறார். இதையெல்லாம் குறிவைத்து இப்போது அநேக நாட்கள் டெல்லியையே வட்டமடிக்கிறார் வானதி” என்று சொன்னார் நம்மிடம் பேசிய அந்த பாஜக பிரமுகர்.

இதனிடையே, மக்கள் மன்றத்தில் எடுபடாமல் போனவர்களுக்கு எல்லாம் முக்கிய பதவிகளை வாரிவழங்குவது ஆக்டீவாக களத்தில் இருக்கும் தமிழக பாஜக புள்ளிகளை சோர்வடைய வைத்திருக்கிறது. ‘குறிப்பிட்ட சில நபர்களுக்கே திரும்பத் திரும்ப வாய்ப்புகளை தந்தால் கட்சி எப்படி வளரும்‘ என்பதே அவர்களின் ஆதங்கக் கேள்வியாக இருக்கிறது.

நியாயம் தானே!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE